இது சினிமா இல்ல.. மாஃபியா கும்பல் கூடாரம்! 1992லேயே மலையாள திரைப்பட உலகை புட்டு புட்டு வைத்த நடிகை
திருவனந்தபுரம்: மலையாள சினிமா உலகில் பெண்கள் மீது பாலியல் சுரண்டல் நடத்தப்படுகிறது என்று ஹேமா கமிட்டி அறிக்கை சமீபத்தில் தெரிவித்திருந்தது. இது பெரும் புயலை கிளப்பியுள்ள நிலையில், 32 ஆண்டுகளுக்கு முன்னரே இந்த விஷயம் குறித்து பிரபல நடிகை கூறியிருப்பது தற்போது தெரிய வந்திருக்கிறது. இது தொடர்பான வீடியோவும் சோஷியல் மீடியாக்களில் பரவலாக பகிரப்பட்டு வருகிறது.
திரைப்படம் என்பது ஒரு கலை. அதில் நடிப்பவர்கள் கலைஞர்கள். சிறந்த கலைஞர்களை கொண்டுள்ள சமூகம், மிகவும் பண்பட்ட சமூகமாக வளரும். ஆனால், திரைத்துறையில் விளையாடும் 'பணம்', இந்த கலைஞர்களை ஒரு பொருட்டாகவே கருதுவதில்லை. அதிலும் இந்த படத்தை முதலீடு செய்பவர்களின் அட்ராசிட்டிகள் எப்போதும் எல்லை மீறுவதாகவே இருந்திருக்கிறது.

இவர்கள் பெண் கலைஞர்களை பாலியல் ரீதியாக கடுமையாக சுரண்டுகின்றனர். இதற்கு நடிகைகள் மறுப்பு தெரிவிக்கப்படும் போது, மிரட்டல்கள், தாக்குதல், வாய்ப்புகளை இழத்தல் என பல பிரச்னைகளை எதிர்கொள்கின்றனர். இப்படியான சூழல்களில் பல நேரங்களில் நடிகைகள், கட்டாயப்படுத்தப்பட்டு சமசர படுத்தப்படுகிறார்கள். ஆனால், அழுத்தம் எப்படி இருந்தாலும் வெடிக்கத்தானே செய்யும். அதுபோல திரைத்துறை நடிகைகள் தங்கள் எதிர்கொள்ளும் பிரச்னைகள் குறித்து வெளிப்படையாகவே குரல் எழுப்ப தொடங்கினர்.
இந்த சூழலில்தான் நீதிபதி ஹேமா தலைமையில் கேரள அரசு கமிட்டி ஒன்றை அமைத்தது. இந்த கமிட்டி திரைத்துறையில் பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்னைகளை அறிந்து அறிக்கையாக வெளியிடும். இந்த அறிக்கையின் அடிப்படையில் கேரள திரைத்துறையில் மாற்றங்கள் செய்யப்படும். அவசியமெனில் சிலர் மீது நடவடிக்கையும் எடுக்கப்படும் சொல்லப்பட்டது.
ஹேமா கமிட்டி கடந்த 2017ம் ஆண்டு அறிக்கையை தயார் செய்தது. ஆனால், திரைத்துறையில் உள்ள பெரும் புள்ளிகள், எங்கு தன்னுடைய பெயர் வெளி வந்துவிடுமோ என்று பயந்து, நீதிமன்றத்தை அணுகி, அறிக்கையை வெளியிடாமல் பார்த்துக்கொண்டனர். ஆனால், சமீபத்தில் நீதிமன்றம் அறிக்கையை வெளியிட அனுமதி அளித்தது. இதனையடுத்து கடந்த 19ம் தேதி அறிக்கை வெளியானது.
இதில், நடிகைகள் சினிமாவில் நடிக்க படுக்கைக்கு அழைக்கப்படுகிறார்கள், நிர்வாணமாக நடிக்க கட்டாயப்படுத்தப் படுகிறார்கள், மீறும் பட்சத்தில் அவர்கள் மிரட்டப்படுகிறார்கள் என்று தெரிவித்திருந்தது. குறிப்பாக சினிமா சில மாஃபியாக்களின் கைகளில் சிக்கியுள்ளது என்பதையும் அறிக்கை தெளிவாக கூறியிருந்தது. இதனையடுத்து பல்வேறு நடிகைகள் தாங்கள் எதிர்கொண்ட கசப்பான சம்பவங்கள் குறித்து வெளிப்படையாக பேச தொடங்கியுள்ளனர்.
அதிலும் குறிப்பாக கடந்த 1992ம் ஆண்டு, அதாவது 32 ஆண்டுகளுக்கு முன்னரே மலையாள சினிமா குறித்து நடிகை உஷா கூறியிருந்த விஷயங்கள் தற்போது பரவலாக பகிரப்பட்டு வருகிறது.
உஷாவின் வீடியோவில், “மலையாள சினிமா ஒரு மாஃபியா கும்பல். சினிமாவில் இருப்பவர்களை நம்ப முடியாது. படத்தில் எனக்கு நல்ல அனுபவம் கிடைக்கவில்லை. வரவிருக்கும் குழந்தைகளுக்கும், இப்போது பாதுகாப்பாக இருக்கும் குழந்தைகளுக்கும் நான் ஒன்று சொல்ல வேண்டும். சினிமா என்றால் மாஃபியா. இது பெர்முடா முக்கோணம் போன்றது. நான் மாட்டிக்கொண்டேன். எனக்கு கசப்பான சூழல்கள் ஏற்பட்டது. என் அனுபவத்தில் இருந்து இதையெல்லாம் சொல்கிறேன். குழந்தைகள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்” என்று கூறியிருந்தார்.
ஏறத்தாழ இதே விஷயத்தைதான் ஹேமா கமிட்டி அறிக்கையும் கூறியுள்ளது. அப்படியெனில் இந்த 32 ஆண்டுகளாக மலையாள சினிமாவில் எதுவும் மாறவில்லை என்பது தெரிகிறது என்றும், ஹேமா கமிட்டியின் அறிக்கையில் குற்றம்சாட்டப்பட்டு இருப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் சமூக ஆர்வலர்கள், சினிமா துறையினர் குரல் எழுப்பியுள்ளனர்.












Click it and Unblock the Notifications