"நேஷனல் பிளான்".. அறிவாலயத்தில் தயாரான ரிப்போர்ட்.. கேரளா பறக்கும் திமுக டீம்.. ஆர்.என் ரவி "அலர்ட்"
திருவனந்தபுரம்: கேரளாவில் ஆளுநருக்கு எதிராக நடக்கும் போராட்டத்தில் கலந்து கொள்ள திமுக முடிவு செய்துள்ளது.
நாடு முழுக்க பல்வேறு பாஜக ஆளாத மாநிலங்களில் ஆளுநருக்கும் முதல்வருக்கும் இடையில் மோதல் நிலவி வருகிறது. முக்கியமாக தெலுங்கானா, தமிழ்நாடு, கேரளா ஆகிய மூன்று மாநிலங்களில் இந்த மோதல் தீவிரம் அடைந்துள்ளது.
தமிழ்நாட்டில் ஆளுநருக்கு எதிராக திமுகவின் அதிகாரபூர்வ நாளிதழான முரசொலியில் அடிக்கடி கட்டுரைகளும் வெளியிடப்பட்டு வருகின்றன. அதுமட்டுமின்றி ஆளுநருக்கு எதிராக திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் கூட்டு அறிக்கை ஒன்றையும் வெளியிட்டன.

அறிக்கை
திமுக, காங்கிரஸ், மதிமுக, மமக, கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட், விடுதலைச் சிறுத்தைகள், தவாக, கொமதேக, திக உள்ளிட்ட கட்சிகள் கூட்டாக சேர்ந்து இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளனர். தமிழ்நாடு ஆளுநராக ஆர் என் ரவி பொறுப்பேற்றது முதல் நாள்தோறும் ஏதாவது சர்ச்சைக்குரிய கருத்தைச் சொல்வதை வழக்கமாகக் கொண்டுள்ளார். அதற்குக் காரணம், தமிழகத்தில் தேவையற்ற வீண் சர்ச்சைகளை உருவாக்கி குழப்பம் ஏற்படுத்தும் நோக்கமோ, அல்லது தன்னை நோக்கிய கவனிப்பு எப்போதும் இருக்க வேண்டும் என்று தாகமா என தெரியவில்லை. எதுவாக இருந்தாலும் சனாதனம், ஆரியம், திராவிடம், பட்டியலின மக்கள், திருக்குறள் குறித்து அவர் கூறும் கருத்துகள் அபத்தமானவையாகவும் ஆபத்தானவையாகவும் இருக்கின்றன. ஆளுநரின் தனிப்பட்ட ஆன்மீக நம்பிக்கைகள் குறித்து நமக்கு எந்த விமர்சனமும் இல்லை. அதுபற்றி கவலைப்படவுமில்லை, என்று கூறியது குறிப்பிடத்தக்கது.

ஏன் இப்படி
ஆளுநர் மத ரீதியாக பேசுவதால் திமுக இப்படி அறிக்கை வெளியிட்டது. சனாதனம் குறித்தும், இந்துத்துவா குறித்தும் ஆளுநர் ஆர். என் ரவி பேசி வந்ததற்கு பதிலடியாக திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் சார்பாக அறிக்கை வெளியிடப்பட்டது. இந்த நிலையில்தான் ஆளுநர் ஆர்.என்.ரவியை திரும்பப் பெற குடியரசுத் தலைவரிடம் முறையிட திமுக முடிவு செய்து உள்ளது. ஆளுநரை திரும்பப்பெறும் குறிப்பாணையில் கையொப்பமிட திமுக கூட்டணி கட்சிகளுக்கு அழைப்பு விடுத்து 40 எம்பிக்களின் கையெழுத்தை திமுக பெற்றுள்ளது.

திமுக கையெழுத்து
இதில் கிட்டத்தட்ட லோக்சபா, ராஜ்ய சபா எம்பிக்கள், கட்சி தலைவர்கள் சேர்த்து 40க்கும் அதிகமானோர் கையெழுத்து போட்டுள்ளனர். இதையடுத்து குடியரசுத் தலைவரை திமுக எம்பிக்கள் குழு திமுக எம்பி டிஆர் பாலு தலைமையில் சந்திக்க வாய்ப்பு உள்ளது. எம்பிக்கள் கையெழுத்து போட்ட கடிதத்தை அவர்கள் குடியரசுத் தலைவரிடம் கொடுக்க உள்ளனர். திமுகவின் இந்த ஒவ்வொரு மூவையும் ஆளுநர் ரவி தரப்பு தீவிரமாக கவனித்து வருகிறது. இது தொடர்பாக திமுக வட்டாரத்தில் விசாரித்ததில், ஆளுநர்களின் அத்துமீறலுக்கு எதிராக திமுக ஜனநாயக ரீதியாக போராடும்.

போராட்டம்
தமிழ்நாட்டில் மட்டுமல்ல மற்ற மாநிலங்களிலும் ஆளுநர்களின் அத்துமீறல்களை கேள்வி கேட்போம். தெலுங்கானா, புதுச்சேரி, கேரளா போன்ற மாநிலங்களிலும் ஆளுநருக்கு எதிராக குரல் கொடுப்போம். எங்கள் அழுத்தத்தை தேசிய அளவில் தெரிவிப்போம். விரைவில் குடியரசுத் தலைவரை சந்திப்போம் என்று திமுக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இந்த நிலையில்தான் தற்போது கேரளாவில் ஆளுநருக்கு எதிராக நடக்கும் போராட்டத்தில் கலந்து கொள்ள திமுக முடிவு செய்துள்ளது.

கேரளா
கேரளாவில் ஆரிப் கானுக்கும் முதல்வர் பினராயி விஜயனுக்கு மோதல் நிலவி வருகிறது. அங்கு நிதி அமைச்சரை பதவி நீக்கம் செய்ய சொல்லும் அளவிற்கு ஆளுநர் அத்துமீறி வருகிறார். இதையடுத்து அங்கு முதல்வர் பினராயி விஜயன் ஆரிப் கானை கடுமையாக விமர்சனம் செய்து இருந்தார். இதையடுத்து அங்கு சிபிஎம் தலைமையில் எல்டிஎப் கூட்டணி சார்பாக நவம்பர் 15ம் தேதி போராட்டம் நடத்தப்பட உள்ளது. இந்த போராட்டத்திற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகின்றன.

ஆளுநர் அலுவலகம்
ஆளுநர் அலுவலகம் முன் இந்த போராட்டம் நடத்தப்பட உள்ளது. மொத்தம் 1 லட்சம் பேர் இந்த போராட்டத்தில் கலந்து கொள்ள உள்ளனர். திமுக சார்பாக ஒரு டீம் இந்த போராட்டத்தில் கலந்து கொள்ள இருக்கிறது. தமிழ்நாட்டில் ஆளுநரை எதிர்க்கும் திமுகவிற்கு சிபிஎம் துணையாக இருக்கிறது. அதேபோல் கேரளாவில் சிபிஎம் கட்சிக்கு ஆதரவாக திமுக களமிறங்க உள்ளது. எம்பிக்கள், அமைச்சர்கள் திமுக சார்பாக கேரளாவில் நடக்கும் போராட்டத்தில் கலந்து கொள்ள வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications