"ஐரோப்பிய டிஎன்ஏ.." கேரள பட்டணத்தில் சிக்கிய சூப்பர் விஷயம்.. அடேங்கப்பா வியக்கும் ஆய்வாளர்கள்
திருவனந்தபுரம்: கேரள மாநிலம் பட்டணத்தில் நடந்த அகழ்வாய்வு பணிகளில் பல முக்கிய விஷயங்கள் கண்டறியப்பட்டுள்ளது. இது பண்டைய தென்னிந்தியா எந்தளவுக்குப் பண்டை நாடுகளுடன் வணிக தொடர்பை வைத்திருந்தது என்பதைக் காட்டுவதாக உள்ளது.
இந்தியாவில் இப்போது பல்வேறு இடங்களிலும் அகழ்வாராய்ச்சி பணிகள் நடந்து வருகிறது. இது நமது பண்டை வரலாற்றை அறியப் பெரியளவில் உதவுவதாகவே இருக்கிறது. அப்போது உண்மையில் என்ன நடந்தது என்பதைக் கண்டறிய இது உதவுகிறது.

தமிழ்நாட்டில் கீழடி, அகரம், கொந்தகை, மணலூர், ஆதிச்சநல்லூர், கொற்கை உள்ளிட்ட இடங்களில் சமீபத்தில் நடத்தப்பட்ட அகழ்வாராய்ச்சி பணிகள் மூலம் பல உண்மைகள் தெரிய வந்துள்ளது. தமிழர்களின் உண்மையான பண்டை வரலாறு இதன் மூலம் தெரிய வந்துள்ளது.
கேரளா: இதேபோல நமது அண்டை மாநிலமான கேரளாவிலும் அகழ்வாராய்ச்சி பணிகள் நடந்தே வருகிறது. அதன்படி கேரளாவில் எர்ணாகுளம் மாவட்டத்தில் உள்ள பண்டைய துறைமுக நகரமான பட்டணத்தில் அகழாய்வு பணிகள் நடைபெற்றது. இதை ஹைதராபாத்தை மையமாக கொண்ட CSIR எனப்படும் செல்லுலார் மற்றும் மூலக்கூறு உயிரியல் மையம் மேற்கொண்டது.
அங்கே இருந்த பொருட்களை ஆய்வு செய்த போது, பட்டணத்தில் உள்ள தொல்பொருள் தளத்தில் மேற்கு யூரேசிய மரபியல் சான்றுகள் இருப்பதை அவர்கள் கண்டறிந்துள்ளனர். அங்கே கண்டறியப்பட்ட மனித எலும்புக் கூடுகளின் டிஎன்ஏ மாதிரிகளை எடுத்து சோதனை செய்ததன் மூலம் அங்குள்ள மக்களின் மரபியல் வம்சாவளியை ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

பல இனக்குழுக்கள்: மேற்கு ஆசியா, வட ஆப்பிரிக்கா மற்றும் மத்திய தரைக்கடல் பகுதிகளுக்கும் இந்தியாவுக்கும் இடையேயான வர்த்தகம் மற்றும் கலாச்சார பரிமாற்றங்கள் நடந்த இடங்களில் பட்டணம் முக்கிய பங்கு வகித்தது. இங்கே இருந்த மாதிரிகளில் மேற்கு யூரேசிய மற்றும் மத்திய தரைக்கடல் மரபியல் சான்றுகள் இருக்கிறது.
இது பண்டைய தென்னிந்தியாவில் வெளிநாட்டு வர்த்தகம் எந்தளவுக்கு நடந்துள்ளது. மேலும், இந்த பண்டை நகரம் எத்தகைய கலாச்சார தொடர்புகளைக் கொண்டுள்ளது என்பதையும் காட்டுவதாக உள்ளது.
இது குறித்து லக்னோவில் உள்ள பீர்பால் சாஹ்னி இன்ஸ்டிடியூட் ஆப் பேலியோ சயின்சஸின் மூத்த ஆய்வாளர் டாக்டர் நிராஜ் ராய் கூறுகையில், "12 பழங்கால எலும்பு கூடுகளின் மாதிரிகளின் டிஎன்ஏவை நாங்கள் ஆய்வு செய்துள்ளோம். இந்த மாதிரிகள் தெற்காசிய மற்றும் மேற்கு யூரேசிய பரம்பரைகளின் இருப்பை தெளிவாக காட்டுகின்றன" என்றார்.
தெளிவாகக் காட்டுகிறது: இது குறித்து ஆய்வு நடத்திய டிஎன்ஏ கைரேகை மற்றும் நோயறிதலுக்கான மையத்தின் இயக்குநர் டாக்டர் குமாரசாமி தங்கராஜ் கூறுகையில், "இந்தியாவின் கடுமையான தட்பவெப்ப நிலைகள் பண்டைய டிஎன்ஏ ஆய்வுக்குச் சாதகமாக இல்லை. நமது வெப்பமண்டல நிலை மற்றும் அமில மண் சூழல் காரணமாக எலும்புக்கூடுகள் எளிதாகச் சேதமடைந்துவிடும். இதனால் சில குறிப்பிட்ட தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி டிஎன்ஐ ஆய்வுகளைச் செய்தோம்.
அதில் தனித்துவமான மேற்கு யூரேசிய மற்றும் மத்திய தரைக்கடல் பகுதிகளைச் சேர்ந்தவர்களின் சான்றுகள் உள்ளன. இது பண்டைய தென்னிந்தியாவில் வெளிநாடுகளைச் சேர்ந்தவர்களின் வருகை எப்படி இருந்துள்ளது என்பதைக் காட்டுகிறது. மேலும், இது அப்போது இருந்து பல்கலாச்சார கலவையைக் காட்டுகிறது" என்றார்.
அதேபோல இது குறித்து CCMB இயக்குநர் டாக்டர் வினய் குமார் நந்திகூரி கூறுகையில், "பட்டணம் தொல்லியல் தளத்தின் இருந்து இதுபோல மரபணு அமைப்பு ஊகித்து உருவாக்கப்பட்ட முதல் மரபணு தரவு இதுவாகும். இங்கே கலாச்சார, மத மற்றும் இன ரீதியாக வேறுபட்ட குழுக்கள் இருந்தது இந்த ஆய்வு உறுதி செய்கிறது" என்றார்












Click it and Unblock the Notifications