என்டே மோளே! என அழைத்து நடிகர் திலகனின் மகளுக்கு பாலியல் தொல்லை! பிரபல நடிகர் மீது புகார்!
திருவனந்தபுரம்: மலையாள சினிமா 15 பேரின் கட்டுப்பாட்டில் இருப்பதாகவும் தந்தையின் இறப்புக்கு பிறகு முன்னணி நடிகர் ஒருவர் தன்னிடம் பாலியல் ரீதியாக அணுகியதாக மறைந்த நடிகர் திலகனின் மகள் சோனியா பரபரப்பு குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார். மலையாள சினிமாவில் நடிகைகளுக்கு பாதுகாப்பு இல்லை என ஹேமா ஆணைய அறிக்கை குற்றம்சாட்டியுள்ளது பெரும் புயலை வீசி வருகிறது.
இதுகுறித்து நடிகர் திலகனின் மகள் சோனியா கூறியிருப்பதாவது: மலையாள சினிமாவில் உள்ள மாபியாக்களுக்கு எதிராக என் தந்தை திலகன் அவ்வப்போது குரல் கொடுத்து வந்தார். இதனால் அவர் பல்வேறு பிரச்சினைகளை சந்தித்தார். அதன் பின்னர் அவரது குரல்வளை நெரிக்கப்பட்டது.

மலையாள சினிமாவே 15 பேரின் பிடியில்தான் இருக்கிறது. அதாவது "அம்மா" என்ற மலையாள நடிகர் சங்க அமைப்பை சேர்ந்த 15 பேர் அதிகாரத்தை தங்கள் கையில் எடுத்துக் கொண்டுள்ளனர். அவர்களுக்கு எதிராகவும் நியாயத்திற்கு எதிராகவும் பெண்கள் பாதுகாப்புக்காகவும் குரல் கொடுக்கும் என் தந்தையை பேச விடாமல் செய்வதுதான் நோக்கம்.
ஹேமா கமிட்டி அறிக்கையில் கூட 15 பேர் கொண்ட கும்பல் குறித்து சொல்லப்பட்டுள்ளது. ஹேமா கமிட்டி கேட்டுக் கொண்டால் அந்த 15 பேர் யார் யார் என்பதை கூட என்னால் வெளியிட முடியும். ஆனால் ஒன்று, அவர்களின் பெயர்கள் நிச்சயம் ஒரு நாள் வெளி வரும். கடந்த 2010ஆம் ஆண்டு எனது தந்தை தொடர்பான பிரச்சினையின் போது அவருடன் பேச்சுவார்த்தை நடத்த ஒரு குழு வந்தது.
அப்போது கட்டடத்திற்கு வெளியே குண்டர்கள் இருந்தனர். ஆனாலும் என் தந்தை பயப்படவில்லை. "அம்மா" அமைப்பின் விதிகளின் படி பிரச்சினைகளை எல்லாம் வெளிப்படையாக பேசக் கூடாதாம். ஆனால் என் தந்தை திலகன் அதை அப்படியே வெளிப்படையாக பேசி வந்தார். அதற்காக அவரை கடுமையாக எதிர்த்தனர்.
நான் சிறிய குழந்தை முதல் பல சினிமா தயாரிப்பாளர்களை பார்த்துள்ளேன். அவர்கள் என் வீட்டிற்கு அப்பாவை பார்க்க வருவார்கள். ஆனால் ஒரு பிரச்சினை என்றால் எல்லாரும் ஒன்று சேர்ந்து என் தந்தையை எதிர்ப்பார்கள். என் தந்தையின் மறைவுக்கு பிறகு மலையாள திரையுலகின் முன்னணி நடிகர் ஒருவர் என்னிடத்தில் போனில் பேசினார்.
அப்போது அவர் என் தந்தையை எதிர்த்ததற்கு மன்னிப்பு கேட்டார். பிறகு என்டே மோளே (மகளே) என அழைத்துதான் பேசினார். போக போக அவருடைய பேச்சு என்னை பாலியல் ரீதியாக அவர் பயன்படுத்த கேட்பது போலே இருந்தது. எனக்கு இது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. நான் சினிமாவில் நடித்தது கூட இல்லை. நான் யாரிடமும் வாய்ப்பு கூட கேட்டதில்லை. இப்படிப்பட்ட நிலையில் என்னிடமே வாய் கூசாமல் இப்படி பேசுகிறாரே, இவர் சினிமா நடிகைகளிடம் எப்படியெல்லாம் பேசியிருப்பார் என்பதை கற்பனை செய்து பாருங்கள். எனக்கு அவர் பாலியல் ரீதியில் மெசேஜ் கூட அனுப்பியுள்ளார். இவ்வாறு சோனியா மனவேதனையுடன் தெரிவித்துள்ளார்.
கடந்த 2017ஆம் ஆண்டு மலையாளம், தமிழில் நடித்த நடிகை ஒருவர், நடிகர் திலீப் குமாரால் காரில் கடத்தபபட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். இந்த சம்பவத்தில் திலீப் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் 9 பேர் கைதாகினர்.
இந்த சம்பவத்தை தொடர்ந்து மலையாள சினிமாவில் பெண்கள் மீது பாலியல் வன்கொடுமைகள் தொடர்வதாகவும் அவற்றை முன்னணி நடிகர்களே சிலர் அரங்கேற்றுவதாகவும் நடிகைகள் புகார் தெரிவித்திருந்தனர். இந்த புகாரை விசாரித்து அறிக்கை வழங்க வேண்டும் என நீதிபதி ஹேமா தலைமையில் ஒரு நபர் கமிஷனை கேரள அரசு நியமித்தது.
அந்த குழு விசாரணை நடத்தி 2019-ஆம் ஆண்டு அறிக்கையை தாக்கல் செய்தது. ஆனால் அந்த அறிக்கை 4 ஆண்டுகளாக வெளிவராத நிலையில் கடந்த 19 ஆம் தேதி வெளியானது. இந்த அறிக்கையின்படி மலையாள சினிமாவில் 15 பேர் கொண்ட நபர்களால் நடிகைகளுக்கு பாதுகாப்பு இல்லை என்பது உறுதியாகியுள்ளது.












Click it and Unblock the Notifications