கோயில் சுவரில் சிறுநீர்.. மனைவி முன்பு அவமானப்படுத்திய சிறுவன்.. கேரளாவை நடுங்க வைத்த கணவன்
திருவனந்தபுரம்: கேரளாவின் திருவனந்தபுரத்தில் மனைவி முன்பு தன்னை அசிங்கப்படுத்திய சிறுவனை காரை ஏற்றி உறவினர் கொலை செய்துள்ளார். விபத்து போல் நாடகமாடிய நிலையில், சிசிடிவி பதிவு காட்டிக்கொடுத்ததால் வசமாக சிக்கி உள்ளார்.
கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள பூவச்சல் பகுதியைச் சேர்ந்த சிறுவன் ஆதிசேகர், அந்த பகுதியில் பள்ளியில் 10 ஆம் வகுப்பு படித்து வந்தார். கடந்த ஆகஸ்ட் 30ம் தேதி நடந்த கார் விபத்தில் சிறுவன் ஆதிசேகர் உயிரிழந்துள்ளார்.

தகவல் அறிந்து வந்த போலீசார் இந்த சம்பவத்தை விபத்து வழக்காக பதிவு செய்து,பிரேத பரிசோதனைக்கு பின் சிறுவனின் உடலை பெற்றோரிடம் ஒப்படைத்தனர். அவர்கள் தகனமும் செய்துவிட்டனர்.
எனினும் விபத்தை ஏற்படுத்திய சிறுவனின் உறவினர் பிரியரஞ்சனின் செயல்கள் போலீசாருக்கு சந்தேகம் ஏற்படுத்தியது. அவர் விபத்தை ஏற்படுத்திவிட்டு மருத்துவமனையில் அனுமதித்தது, இறுதி சடங்கில் பங்கேற்றது போன்ற செயல்களில் போலீசாருக்கு சந்தேகம் வரவில்லை. ஆனால் விபத்து நடந்த போது எடுத்த சிசிடிவி காட்சிகள் தான் அவரை சந்தேக வளையத்திற்குள் கொண்டு வந்தது.
அந்த நேரத்தில் பிரியரஞ்சன் தலைமறைவாகவே போலீசாருக்கு கொலையாக இருக்குமோ என்று பெற்றோரிடமும், உறவினர்களிடமும் தீவிரமாக விசாரிக்க தொடங்கினர். அத்துடன் சிசிடிவி காட்சிகளை மீண்டும் மீண்டும் ஆய்வு செய்த போது கொலைக்கான முகாந்திரம் இருப்பது உறுதியானது.

சிசிடிவி காட்சியில் இருந்தது என்ன? விபத்து நடந்த பகுதியில் உள்ள ஒரு வீட்டின் மொட்டை மாடியில் இருந்த சிசிடிவி காட்சிகளை போலீசார் பார்த்த போது, சாலையின் ஓரம் நின்றுக்கொண்டிருந்த கார், சிறுவன் சைக்களில் வந்ததும் அவனை பின் தொடர்ந்து சென்று வேகமாக மோதுகிறது. பின்னர் சத்தம் கேட்டு ஓடி வரும் பொதுமக்கள் படுகாயமடைந்த சிறுவனை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்கிறார்கள்.இப்படியான காட்சி பதிவாகி இருந்தது.
விபத்தை ஏற்படுத்திய அந்த கார் சிறுவனனின் உறவினரான பிரியரஞ்சன் என்பவருக்கு சொந்தமானது என்பதால் பிரியரஞ்சனை விசாரிக்க போலீசார் முடிவு செய்தனர். ஆனால் அவர் தலைமறைவாக இருந்தார். இதனை தொடர்ந்து சிறுவனின் பெற்றோரிடம் இது குறித்து போலீசார் விசாரித்த போது உண்மை வெளியே வந்தது.
கடந்த 3 மாதங்களுக்கு முன்பு ஒரு கோயிலின் சுவற்றில் பிரியரஞ்சன் சிறுநீர் கழித்திருக்கிறார். இதை கண்ட சிறுவன் பிரியரஞ்சனின் குடும்பத்தார் முன்னிலையில் "இவ்வளவு பெரிய ஆளாக வளர்ந்துட்டு, கோயில் சுவரை அசிங்கப்படுத்துகிறாயே" என அசிங்கமாக திட்டினாராம். இதனால் மிகுந்த மன உலைச்சலுக்கு ஆளான பிரியரஞ்சன் சிறுவனை கொலை செய்ய திட்டமிட்டுள்ளார்.
அதன் படி மூன்று மாதங்களாக காத்திருந்து இந்த கொலை சம்பத்தை செய்துள்ளார். விபத்து போல் நாடகமாடுவதற்காக சிறுவன் மீது கார் ஏற்றியது மட்டுமன்றி அவரை மருத்துவமனையில் அனுமதித்துள்ளார். பின்னர் ஒன்றும் தெரியாதது போல் சிறுவனின் இறுதி சடங்குகளிலும் அவர் பங்கேற்றுள்ளார் . இதையடுத்து தலைமறைவாக உள்ள பிரியரஞ்சனை பிடிக்க போலீசார் தீவிரமாக தேடி வருகிறார்கள்.


Click it and Unblock the Notifications
