32,000 பெண்கள் முஸ்லிமாக மாற்றமா? சர்ச்சையான ‛தி கேரளா ஸ்டோரி’ படம்.. பினராயி விஜயன் கடும் அட்டாக்
திருவனந்தபுரம்: கேரளாவில் 32,000 பெண்கள் வெளிநாடு அழைத்து செல்லப்பட்டு இஸ்லாம் மதத்துக்கு மாற்றப்பட்டு பயங்கரவாத அமைப்பில் இணைக்கப்பட்டதாக ‛தி கேரளா ஸ்டோரி' திரைப்படத்தின் டிரெய்லர் பெரிய அளவில் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு கேரளா முதல்வர் பினராயி விஜயன் கடும் கண்டனத்தை தெ்ரிவித்துள்ளார். மேலும் இந்த திரைப்படத்தின் பின்னணியில் சங்பரிவார் அமைப்பு இருப்பதாக அவர் சாடியுள்ளார்.
இயக்குனர் சுதிப்தோ சென் கதை எழுதி இயக்கி இருக்கும் திரைப்படம் ‛தி கேரளா ஸ்டோரி'. இந்த திரைப்படத்தின் டிரெய்லர் வெளியாகி உள்ளது. விரைவில் திரைப்படம் வெளியாக உள்ளது. இந்நிலையில் தான் படத்தின் டிரெய்லருக்கு கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது.

மேலும் திரைப்படத்தை வெளியிடக்கூடாது என காங்கிரஸ் கட்சியினர் உள்பட பல கட்சியினரும், பல்வேறு அமைப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர். இதற்கு முக்கிய காரணம் என்னவென்றால் படத்தின் டிரெய்லரும், படத்தின் கதையம்சமும் தான்.
அதாவது ‛தி கேரளா ஸ்டோரி' திரைப்படத்தில் கேரளாவைச் சேர்ந்த 32,000 பெண்கள் வெளிநாட்டுக்கு அழைத்து செல்லப்பட்டு கட்டாயமாக இஸ்லாம் மதத்துக்கு மாற்றப்படுவோடு, அவர்கள் பயங்கரவாத அமைப்பில் இணைக்கப்பட்டு இந்தியா, பிற நாடுகளில் பயங்கரவாத சதித்திட்டம் செய்வது போல் உள்ளதாக கூறப்படுகிறது. இதுதொடர்பான காட்சிகள் டிரெய்லரிலும் இடம்பெற்றுள்ளது.
இந்நிலையில் தான் ‛தி கேரளா ஸ்டோரி' டிரெய்லருக்கு சமூக வலைதளங்களிலும், அரசியல் கட்சியினரும், பல்வேறு அமைப்பினரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மே 5ல் இந்த படம் வெளியாகும் நிலையில் தற்போது கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. படத்துக்கு தடை விதிக்க வேண்டும் என காங்கிரஸ் உள்ளிட்ட பல கட்சியினர் கோரிக்கை வைத்துள்னளர்.

இந்நிலையில் தான் ‛தி கேரளா ஸ்டோரி' படம் குறித்து அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுபற்றி அவர் கூறியுள்ளதாவது: ‛‛தி கேரளா ஸ்டோரி' படத்தின் ட்ரெய்லர் என்பது மதச்சார்பின்மையை அடிப்படையாக கொண்ட கேரளாவை மத தீவிரவாதத்தின் மையமாக நிலைநிறுத்தி கொள்ளும் வகையில் சங்பரிவார் பிரசாரமாக உள்ளது. போலியான கதைகள், திரைப்படங்கள் மூலம் பிரிவினைவாத அரசியலை அவர்கள் பரப்ப முயற்சிக்கிறார்கள்.
சங்பரிவார்கள் எந்தவித உண்மையும், ஆதாரமும் இன்றி இதுபோன்ற கட்டுக்கதைகளை பரப்புகிறார்கள். படத்தின் டிரெய்லரில் நாம் பார்த்தது அனைத்துமே போலி கதையம்சமாகும். இது சங்பரிவார்களின் பொய்களை பரப்பும் தொழிற்சாலையின் தயாரிப்பாகும். கேரளாவில் தேர்தல் அரசியலில் ஆதாயம் அடைய சங்பரிவார் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இதற்காக இதுபோன்ற செயல்பாடுகளில் ஈடுபட்டு வருகின்றனர்'' என சாடியுள்ளார்.












Click it and Unblock the Notifications