136 பக்க அறிக்கை.. கடைசி பக்கத்தை மட்டும் வாசித்த ஆளுநர் ஆரிஃப் முகமது கான்! கேரளாவில் சலசலப்பு
திருவனந்தபுரம்: கேரளாவில் ஆளுநருக்கும் அம்மாநில அரசுக்கும் இடையே மோதல் போக்கு நீடித்து வரும் நிலையில், மாநில அரசு தயாரித்த கொடுத்த கொள்கை அறிவிப்பு அறிக்கையை முழுமையாக படிக்காமல் ஆளுநர் புறக்கணித்துள்ளார்.
ஒவ்வொரு ஆண்டும், ஆண்டின் முதல் சட்டமன்ற கூட்டத்தொடர் ஆளுநர் உரையுடன் தொடங்குவது மரபு. இந்நிலையில், கேரளாவில் சட்டமன்ற கூட்டத் தொடர் இன்று தொடங்கியுள்ளது. அறிக்கையை வாசிப்பது ஆளுநராக இருந்தாலும், அதை தயாரித்து கொடுப்பது மாநில அரசுதான். அந்த வகையில், மாநில அரசின் கொள்கை அறிவிப்பு அறிக்கையை வாசிக்க தொடங்கி கேரள ஆளுநர் ஆரிப் முகமது கான், வெறும் 1.17 நிமிடத்தில் வாசித்து முடித்துவிட்டார். அதாவது முழுமையாக வாசிக்காமல் கடைசி பக்கத்தை மட்டும் வாசித்து முடித்துவிட்டார்.

மொத்தம் 136 பக்கங்கள் கொண்ட அறிக்கை அவருக்கு வாசிக்க வழங்கப்பட்டது. இதில் 135 பக்கங்களை அவர் புறக்கணித்துவிட்டு, கடைசி பக்கத்தை மட்டும் வாசித்திருக்கிறார். இதனால் சட்டமன்ற உறுப்பினர்களிடையே சலசலப்பு ஏற்பட்டிருக்கிறது. இதற்கு முன்னர் ஆளுநரின் பல்வேறு கருத்துக்கள் பெரும் விவாதங்களை கிளப்பியிருந்தது. இந்நிலையில், இதனை தொடர்ந்து, தற்போது ஆளுநரின் செயல் மாநில அரசுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
இந்து: கடந்த ஆண்டு ஜனவரியில் என்னை இந்துவாக அழையுங்கள் என்று கூறி பஞ்சாயத்தை கூட்டியிருந்தார். அதாவது, "நீங்கள் என்னை இந்து என அழைக்க வேண்டும். இந்து என்ற சொல்லை ஒரு குறிப்பிட்ட மதத்திற்கான சொல்லாக கருதவில்லை. இந்து என்பது புவியியல் சொல். இந்தியாவில் வாழ்பவர்கள், இந்நாட்டின் நதியிலிருந்து நீரை குடிப்பவர்கள், இந்நாட்டில் விளையும் உணவை உட்கொள்பவர்கள் எவரும் தங்களை இந்து என்று அழைத்துக்கொள்ள தகுதியுடையவர்களாவார்கள். எனவே என்னையும் நீங்கள் இந்து என்று அழைக்க வேண்டும்" என்று ஆரிப் முகமதுகான் கூறியிருந்தார்.
ஹிஜாப்: அதேபோல "இஸ்லாமிய மதத்தின் புனித நூலான குரானில் ஹிஜாப் குறித்து ஒரு சில இடங்களில் மட்டுமே குறிப்பிடப்பட்டுள்ளது. இருப்பினும் ஹிஜாப்தான் பெண்களின் உடை நடைமுறையென இந்நூல் கூறவில்லை. எனவே ஹிஜாப் விவகாரம் என்பது சர்ச்சையல்ல அது இஸ்லாமிய பெண்களின் கல்வியை தடுக்க நடைபெறும் சதி" என்று ஹிஜாப் விவகாரத்தில் கருத்து தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications