45 மணி நேரம் மலை முகட்டில் கேரள இளைஞரின் வாழ்வா சாவா போராட்டம்.. மீட்புக்காக ரூ 75 லட்சம் செலவு
திருவனந்தபுரம்: கேரளாவில் மலையேறிய போது தவறி விழுந்து பாறை இடுக்கில் சிக்கிய இளைஞரை மீட்கும் பணிக்கு கேரளா அரசு ரூ 75 லட்சம் செலவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கேரளாவின் பாலக்காட்டை அடுத்த செரடு பகுதியைச் சேர்ந்தவர் பாபு. இவருக்கு வயது 23. மலையேற்றத்தில் ஆர்வம் கொண்ட பாபு கடந்த 7 ஆம் தேதி தனது நண்பர்களுடன் மலம்புழா பகுதியில் உள்ள ஒரு மலைக்கு சென்றார்.
அங்கு நண்பர்களுடன் மகிழ்ச்சியாக மலையேறி கொண்டிருந்தார். ஒரு கட்டத்தில் நண்பர்களால் முடியாமல் போனதால் அவர்கள் மலையிலிருந்து கீழே இறங்கிவிட்டனர். ஆனால் பாபு மட்டும் தனது மலையேற்ற பயணத்தை தொடர்ந்தார். அப்போது திடீரென கால் இடறியது. இதில் தவறி கீழே விழுந்த அவர் செங்குத்தாக இருந்த பாறையின் இடையே சிக்கிக் கொண்டார். அவரது கால்களில் காயம் ஏற்பட்டிருந்தது.

பாபு செய்த நல்ல விஷயம்
வெளியே வர முயன்றால் கீழே விழுந்து அசம்பாவிதம் நேரிட வாய்ப்பு இருந்தது. பாபு செய்த ஒரே நல்ல விஷயம் தன்னுடன் போனை வைத்துக் கொண்டிருந்ததுதான். உடனே போனில் தனது வாட்ஸ் ஆப் மூலம் தான் சிக்கிக் கொண்ட தகவலை தெரிவித்தார். அதில் தன்னை மீட்க உதவியும் கோரினார். இதையடுத்து அந்த நண்பர்கள் மூலம் போலீஸாருக்கும் தீயணைப்புத் துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

தோல்வி
தீயணைப்பு வீரர்களின் முயற்சி தோல்வி அடைந்ததை தொடர்ந்து கேரள மாநில பேரிடர் மீட்பு துறையின் மூலம் ராணுவத்தின் உதவி கோரப்பட்டது. இதையடுத்து கடலோர பாதுகாப்பு படை, விமான படை மற்றும் ராணுவத்தின் மீட்பு குழுவினர் மலம்புழா பகுதிக்கு வந்தனர். அவர்கள் ஹெலிகாப்டரில் சென்று பாறையில் சிக்கியிருந்த பாபுவை பத்திரமாக மீட்டனர்.

45 மணி நேர போராட்டம்
7ஆம் தேதி மாலை சிக்கிய பாபு 45 மணி நேர போராட்டத்திற்கு பிறகு 9ஆம் தேதி காலை மீட்கப்பட்டார். பாபுவை மீட்கும் பணிக்கு கேரளா அரசு சுமார் 75 லட்சம் ரூபாய் செலவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பாபு பாறை இடுக்கில் சிக்கியதை அடுத்து அவர் எங்கே இருக்கிறார் என்பதை கண்டறிய டிரோன்கள் பயன்படுத்தப்பட்டன.

ஹெலிகாப்டர்கள்
கடற்படை ஹெலிகாப்டர்கள் வரவழைக்கப்பட்டன. பின்னர் ராணுவத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அவர்கள் தனி ஹெலிகாப்டரில் அங்கு வந்தனர். அவர்கள் பாபு இருக்கும் மலை இடுக்கிற்கு சென்று அங்கிருந்து கயிறு கட்டி பாறை இடுக்குக்கு சென்றனர். பின்னர் அங்கிருந்த அந்த நபரை கயிற்றில் கட்டி கீழே அழைத்து வந்தனர்.

75 லட்சம் ரூபாய் செலவு
இதற்காக ஹெலிகாப்டர்களுக்கு ஒரு மணி நேர வாடகை மட்டுமே ரூ 2 லட்சம் ஆகும். அதன்படி 7ஆம் தேதி முதல் 9ஆம் தேதி வரை வாடகை மட்டுமே ரூ 50 லட்சம் ஆகியுள்ளது. இது தவிர இதர செலவுகள் எல்லாம் சேர்த்து ரூ 75 லட்சம் செலவுகளுக்கான கணக்கு கேரளா கருவூலத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. மேலும் கேரள அரசு சார்பில் பாபுவுக்கு ஒரு வீடு கட்டி தரப்படவுள்ளது. இதுகுறித்து மலம்புழா எம்பி ஸ்ரீகந்தன் கூறுகையில் பாபுவும் அவரது குடும்பத்தினரும் தற்போது வாடகை வீட்டில் வசித்து வருகிறார்கள். அவர்களுக்கு சொந்த வீடு அரசு சார்பில் கட்டித் தரப்படும் என்றார்.












Click it and Unblock the Notifications