"பிரேமம்" புகழ் நிவின் பாலி மீது வழக்குப்பதிவு..சினிமாவில் வாய்ப்பு தருவதாக பலாத்காரம்! ஷாக் சம்பவம்
திருவனந்தபுரம்: ஹேமா கமிட்டி ரிப்போர்ட் வெளியாகி மலையாள சினிமாவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், அங்கு நடிகைகள் பலரும் வெளிப்படையாக தாங்கள் எதிர்கொண்ட பாலியல் தொல்லைகள் குறித்துப் பேசி வருகின்றனர். இதற்கிடையே பெண் ஒருவர் அளித்த புகாரில் பிரபல மலையாள நடிகர் நிவின் பாலி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
கடந்த 22017ம் ஆண்டு கேரளாவில் பிரபல நடிகை ஒருவர் கடத்தப்பட்டு ஓடும் காரில் பலாத்காரம் செய்யப்பட்டார். இந்தச் சம்பவம் நாடு முழுக்க அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

ஹேமா கமிட்டி ரிப்போர்ட்: இதையடுத்து கேரளாவில் சினிமா துறையில் பெண்கள் எதிர்கொள்ளும் பாலியல் புகார்கள் குறித்து விசாரிக்க ஹேமா கமிட்டி அமைக்கப்பட்டது. இந்த கமிட்டியின் ரிப்போர்ட் கடந்த மாதம் வெளியாகி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதில் பல முக்கிய நடிகர்கள், இயக்குநர்கள் உள்ளிட்டோர் மீது பாலியல் புகார்கள் இருந்தன. இந்த ஹேமா கமிட்டி அறிக்கையைத் தொடர்ந்து மலையாள நடிகர் சங்கம் நிர்வாகிகள் தங்கள் பதவிகளை கூண்டோடு ராஜினாமா செய்தனர்
நிவின் பாலி மீது பலாத்கார புகார்: ஹேமா கமிட்டி ரிபோர்ட்டை தொடர்ந்து அங்கு நடிகைகள், பெண் தொழில்நுட்ப கலைஞர்கள் பலரும் வெளிப்படையாக தாங்கள் எதிர்கொண்ட பாலியல் தொல்லைகள் குறித்துப் பேசி வருகிறார்கள். இதற்கிடையே பாலியல் புகாரில் நடிகர் நிவின் பாலி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.பெண் ஒருவர் அளித்த புகாரில் பிரபல மலையாள நடிகர் நிவின் பாலி மீது இப்போது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
நேரியமங்கலத்தை சேர்ந்த பெண் இந்த புகாரை அளித்துள்ளார். சினிமாவில் நடிக்க வாய்ப்பு தருவதாகக் கூறி நிவின் பாலி தன்னை வெளிநாட்டில் வைத்து பாலியல் பலாத்காரம் செய்ததாக அவர் தனது புகாரில் கூறியுள்ளார். அதன் அடிப்படையில் எர்ணாகுளத்தில் உள்ள ஊன்னுக்கல் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
துபாயில் பலாத்காரம்: கடந்த 2023ம் ஆண்டு நவம்பரில் ஒரு திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பு தருவதாகச் சொல்லி துபாயில் வைத்து தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக அந்த பெண் புகாரளித்துள்ளார். அந்த பெண் அளித்த புகாரின் அடிப்படையில் நிவின் பாலி உள்ளிட்ட 6 பேர் மீது ஜாமீனில் வெளிவர முடியாத பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில் மேலும் சிலருக்கும் தொடர்பு இருக்கலாம் என்றும் போலீசார் சந்தேகிக்கின்றனர்.
ஹேமா கமிட்டி அறிக்கையைத் தொடர்ந்து மலையாள சினிமாவில் பெண்கள் எதிர்கொள்ளும் பாலியல் துஷ்பிரயோகம் குறித்து விசாரிக்கச் சிறப்புப் புலனாய்வுக் குழு அமைக்கப்பட்டது. நேரியமங்கலத்தை சேர்ந்த அந்த பெண் இந்த சிறப்புப் புலனாய்வுக் குழுவிடம் தான் புகாரளித்துள்ளார்.. அதைத் தொடர்ந்து சிறப்புப் புலனாய்வுக் குழு ஊன்னுக்கல் போலீசாருக்கு அளித்த தகவலின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது..
நிவின் பாலி: மலையாள சினிமாவில் முக்கிய நடிகராக வலம் வரும் நிவின் பாலி நடித்த பிரேமம் படம் தமிழிலும் கூட சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது. மேலும், அவர் தமிழில் நேரம், ரிச்சி உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இருப்பினும், சமீப ஆண்டுகளாக அவர் நடித்த படங்கள் பெரியளவில் மக்களிடம் வரவேற்பு பெறவில்லை. இந்தச் சூழலில் அவர் மீது பாலியல் பலாத்கார வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications