வயநாடு சோகத்திற்கு இப்படியா போடுவீங்க.. சர்ச்சையில் சிக்கிய சசி தரூர்.. ரவுண்டு கட்டிய நெட்டிசன்ஸ்
திருவனந்தபுரம்: திருவனந்தபுரம் எம்பியும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவருமான சசி தரூர், வயநாட்டிற்கு நிவாரண பொருட்கள் அனுப்பி வைத்த பிறகு தனது எக்ஸ் தளத்தில் போட்ட வீடியோ சர்ச்சையை கிளப்பியுள்ளது. நெட்டிசன்கள் கடுமையாக ட்ரோல் செய்த நிலையில், சசிதரூர் தனது பதிவுக்கு விளக்கம் அளித்துள்ளார்.
கேரள மாநிலம் வயநாட்டில் கடந்த 29 ஆம் தேதி பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த நிலச்சரிவால் முண்டக்கை, சூரல்மலை, அட்டமலை, பூஞ்சிரித்தோடு, ஆகிய கிராமங்கள் உருக்குலைந்தது. நிலச்சரிவால் இந்த கிராமங்களில் பல இடங்கள் இருந்த இடம் தெரியாமல் போனது. நிலச்சரிவில் சிக்கி 357 பேர் தற்போது வரை பலியாகியுள்ளனர்.

வயநாடு நிலச்சரிவு: நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிகளில் ராணுவம் மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகிறது. இன்று 6-வது நாளாக மீட்பு பணி தீவிரமாக நடைபெற்றது. நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான மக்கள் மீட்கப்பட்டு நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களை மாற்று இடத்தில் குடியமர்த்த கேரள அரசு திட்டமிட்டு இருக்கிறது. நிவாரண பொருட்களும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.
சசி தரூர் உதவி: அரசியல் கட்சியினர் தன்னார்வலர்கள் என பலரும் நிவாரண பொருட்களை அனுப்பி வைத்து வருகிறார்கள். அந்த வகையில் திருவனந்தபுரம் தொகுதி காங்கிரஸ் எம்.பியும் அக்கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவருமான சசி தரூர், பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கினார். அத்தியாவசிய பொருட்களை லாரி ஒன்றில் ஏற்றி அனுப்பி வைத்து விட்டு அது தொடர்பான வீடியோவை தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்து இருந்தார்.
மறக்க முடியாத நாட்கள்: இந்த பதிவுக்கு அவர் போட்ட கேப்ஷன் தான் தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. சசி தரூர் தனது பதிவில், 'வயநாட்டில் மறக்க முடியாத நாட்களின் சில நினைவுகள்' என பதிவிட்டு இருக்கிறார். ஒரு துயர சம்பவத்திற்கு எப்படி மறக்க முடியாத நாட்கள் என பதிவிடலாம் என நெட்டிசன்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அவரது பதிவுக்கு கீழே பலரும் காட்டமாக விமர்சித்து கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.
பாஜக விமர்சனம்: இந்த விவகாரத்தை கையில் எடுத்த பாஜக, உயிரிழப்புகளும் பேரழிவும் சசி தரூருக்கு மறக்க முடியாத நாட்களாக இருக்கிறது என்று விமர்சித்துள்ளது. நெட்டிசன்களும் சசி தரூரை கடுமையாக விமர்சித்து பதிவிட்டு வருகிறார்கள். மக்கள் உயிரிழப்பும் வேதனையும் உங்களுக்கு நினைவில் நிற்கும் நாளாக இருக்கிறதா?.. இதுதான் காங்கிரஸ் கட்சியின் உண்மை முகம்" என மிகக் காட்டமாக பலரும் விமர்சித்து வந்தனர்.
சசி தரூர் விளக்கம்: சமூக வலைத்தளங்களில் பலரும் ட்ரோல் செய்த நிலையில், தனது பதிவுக்கு சசி தரூர் விளக்கம் அளித்துள்ளார். சசி தரூர் வெளியிட்ட எக்ஸ் பதிவில், "memorable என்ற வார்த்தைக்கு அர்த்தம் என்னவென்றால், மறக்க முடியாத ஒரு சம்பவத்தை நினைவில் வைத்துக்கொள்வது அல்லது நினைவில் அப்படியே இருக்ககூடியது. நினைவில் கொள்ளக் கூடிய ஒரு ஒன்று" என்ற ரீதியில் தான் கூறினேன் என்று விளக்கம் அளித்துள்ளார்.












Click it and Unblock the Notifications