தண்ணீரில் தத்தளிக்கும் வயநாடு! கை கொடுத்து "தூக்கிவிடும்" சேவா பாரதி!
வயநாடு: கேரள மாநிலம் வயநாட்டில் நிலச்சரிவு பாதிப்புக்குண்டான இடங்களில் சேவா பாரதி சார்பாக பல நூறு ஸ்வயம் சேவகர்கள் களத்தில் பணி செய்து கொண்டிருக்கிறார்கள். மீட்பு பணியில் நேற்று மட்டும் 254 பேர் களத்தில் இருந்து பல்வேறு பணிகளில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இதுகுறித்து சேவா பாரதி விடுத்துள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: நிலச்சரிவில் புதைந்து போன சடலங்களை தேடும் பணி, சடலங்களை அப்புறப்படுத்தும் பணியில் தேசிய பேரிடர் மேலாண்மை மற்றும் ராணுவத்திற்கு உதவி செய்து வருகிறார்கள்.

அது போல் ராணுவம் மற்றும் பேரிடர் மேலாண்மையின் பாலம் அமைத்தல் பணிகளுக்கும் உதவி முழு ஈடுபாட்டுடன் செயல்படுகிறார்கள். பெங்களூரிலிருந்து 9 பேர் கொண்ட டாக்டர் குழு வந்தனர். அரசு மருத்துவமனையில் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை அவசர சிகிச்சை பிரிவு மற்றும் தீவிர சிகிச்சை பிரிவில் பணி செய்கிறார்கள்.
நிலச்சரிவு ஏற்பட்ட பகுதியில் ஒரு கோயிலுக்கு சொந்தமான இடத்தில் சுடுகாடு உள்ளது. அதை விரிவுப்படுத்தி சுத்தப்படுத்தி வரும் சடலங்களை நல்லதொரு கண்ணியமான இடத்தில் வைத்து ராமநாமம் கூறி மரியாதை செய்த பிறகு அவரவர் குடும்ப வழக்கப்படி தகனம் செய்யப்படுகிறது. இதுவரை 43 சடலங்கள் தகனம் செய்யப்பட்டுள்ளன.
உணவு வழங்கும் பணியும் நடந்து கொண்டிருக்கிறது. நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளவர்களை தொடர்பு கொண்டு ஆறுதல் கூறும் பணியும் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இன்னும் பல பணிகள் தற்காலிகமாகவும் நிரந்தரமாகவும் செய்வதற்கான திட்டங்கள் உள்ளன என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தென் மேற்கு பருவமழை காரணமாக வயநாடு பகுதிகளில் தொடர்ந்து கனமழை காரணமாக கடந்த செவ்வாய்க்கிழமை அதிகாலை பெரும் நிலச்சரிவு ஏற்பட்டது. அப்போது உறங்கிக் கொண்டிருந்த வேளையில் ஏற்பட்ட இந்த இயற்கை பேரிடரில் ஏராளமானோர் காணாமல் போனார்கள்.
முண்டக்கை, சூரல்மலை உள்ளிட்ட பகுதிகள்தான் கடுமையாக பாதிக்கப்பட்டன. இந்த நிலச்சரிவில் இடிபாடுகளுக்குள் சிக்கி 300-க்கும் மேற்பட்டோர் பலியாகிவிட்டனர். தோண்ட தோண்ட உடல்கள் வந்து கொண்டே இருக்கின்றன.
அட்டமலை மற்றும் ஆரன்மலை, முண்டக்கை, பஞ்சிரிமட்டம், வெள்ளரிலை, கிராமம், வெள்ளரிமலை அரசு பள்ளி, ஆற்றுபடுகை ஆகிய இடங்களில் மீட்பு படையினர் 40 பேர் தேடி வருகிறார்கள். கடந்த 30ஆம் தேதி ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 300- க்கும் மேற்பட்டோரின் நிலை என்னவென தெரியவில்லை. இந்த மோசமான வானிலையிலும் மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெறுகிறது.
மணலும் தண்ணீரும் கலந்து பல இடங்கள் சேறாக காட்சியளிக்கின்றன. அது போல் வீடுகள், கட்டட இடிபாடுகளிலும் யாராவது உயிருடன் இருக்கிறார்களா, இல்லை ஏதாவது உடல்கள் கிடைக்கின்றனவா என தேடி வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications