கேரளாவில் வீசும் ராகுல் அலை.. கடும் போட்டி கொடுக்கும் இடதுசாரிகள்.. தொலைதூரத்தில் பாஜக! புது சர்வே
திருவனந்தபுரம்: லோக்சபா தேர்தல் விரைவில் நடைபெறும் நிலையில், கேரளாவில் எந்தக் கட்சி வெல்ல வாய்ப்பு இருக்கிறது என்பது குறித்து மாத்ருபூமி நியூஸ் மற்றும் பி-மார்க் இணைந்து நடத்திய சர்வே முடிவுகள் வெளியாகியுள்ளது.
லோக்சபா தேர்தல் விரைவில் நடைபெறும் நிலையில், இதற்கான பணிகளை அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. இது ஒரு பக்கம் இருக்க பல்வேறு ஊடகங்களும் சர்வே முடிவுகளையும் வெளியிட்டு வருகிறது.

அதன்படி மாத்ருபூமி நியூஸ் மற்றும் பி-மார்க் இணைந்து கேரளாவில் நடத்திய சர்வேயில் முதற்கட்ட முடிவுகள் இப்போது வெளியாகியுள்ளது. இப்போது ஏழு லோக்சபா தொகுதிகளின் சர்வே முடிவுகள் இப்போது வெளியாகியுள்ளது. இந்த ஏழு தொகுதிகளில் கேரளாவில் காங்கிரஸ் கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு அதிகம் இருப்பதாகக் கூறப்பட்டுள்ளது.
சர்வே முடிவுகள்: அதில் திருவனந்தபுரம், காசர்கோடு, அட்டிங்கல், சாலக்குடி, வயநாடு மற்றும் கொல்லம் ஆகிய தொகுதிகளில் காங்கிரஸ் கூட்டணி வெல்லும் என கூறப்பட்டுள்ளது. அதேநேரம் கண்ணூரில் தொகுதியில் இடதுசாரிகள் வெல்லும் எனக் கூறப்பட்டுள்ளது. கன்னூர் தொகுதி இப்போது காங்கிரஸ் வசம் இருக்கும் நிலையில், அது இந்த முறை இடதுசாரிகளுக்குச் செல்லும் எனக் கூறப்பட்டுள்ளது.
இதில் திருவனந்தபுரம் தொகுதியில், காங்கிரஸ் போட்டியாளர் சசி தரூர் 37% வாக்குகளுடன் முன்னிலை வகிக்கிறார். இடதுசாரிகளின் பன்னியன் ரவீந்திரன் 34% வாக்குகளைப் பெறுவார் என்றும் பாஜக கூட்டணியின் ராஜீவ் சந்திரசேகர் 27% வாக்குகளைப் பெறுவார் என்றும் கூறப்பட்டுள்ளது. திருவனந்தபுரத்தைப் பொறுத்தவரை அங்கே காங்கிரஸ் மற்றும் இடதுசாரி வேட்பாளர்களுக்கு இடையே கடும் போட்டி இருக்கும் என்பதையே இது காட்டுகிறது.
யார் முன்னிலை: அடுத்து காசர்கோடு தொகுதியில் காங்கிரஸின் ராஜ்மோகன் உன்னிதன் 41% வாக்குகளைப் பெற்று முன்னிலையில் உள்ளதாக இந்த சர்வே கூறுகிறது. இடதுசாரிகளின் எம்.வி. பாலகிருஷ்ணன் 36% வாக்குகளையும் பாஜக வேட்பாளர் அஷ்வினி 21% வாக்குகளைப் பெறுவார் என்றும் இந்த சர்வே கூறியிருக்கிறது.
வயநாடு தொகுதியைப் பொறுத்தவரை அங்கே ராகுல் காந்தி மீண்டும் வெற்றி பெறலாம் என்று சர்வே முடிவுகள் கூறுகிறது. அங்கே ராகுல் காந்தி 60% வாக்குகளைப் பெறும் நிலையில், இடதுசாரிகள் 24% வாக்குகளையும் பாஜக 13% வாக்குகளையும் பெறும் என்று இந்த சர்வே கூறுகிறது. ராகுல் காந்தி போட்டியிடுவதால் வயநாடு காங்கிரஸின் கோட்டையாக மாறுவதையே இது காட்டுகிறது.
கடும் போட்டி: அடுத்து அட்டிங்கல் தொகுதியில் காங்கிரஸ் இடதுசாரிகள் இடையே கடும் போட்டி இருந்தாலும் காங்கிரஸ் வேட்பாளர் முன்னிலை பெறுவார் என்று இந்த மாத்ருபூமி நியூஸ் சர்வே கூறியுள்ளது. அங்கே காங்கிரஸ் கூட்டணி 36% வாக்குகளைப் பெறும் நிலையில், இடதுசாரிகள் 32% வாக்குகளையும் பாஜக 29% வாக்குகளையும் பெறுவார் எனக் கூறப்பட்டுள்ளது.
அதேபோல சாலக்குடி தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் 42% வாக்குகளைப் பெற்று முன்னிலை பெறுவார் எனக் கூறப்பட்டுள்ளது. தொடர்ந்து இடதுசாரிகள் 37% வாக்குகளை அங்கே பெறுவார்கள் என்றும் பாஜக 19% வாக்குகளைப் பெறுவார் என்றும் கூறப்பட்டுள்ளது.
மேலும், கேரளாவில் அதிக செல்வாக்கு மிக்க தலைவர் யார் என்ற கேள்விக்கு பினராயி விஜயன், ராகுல் காந்தி இடையே கடும் போட்டி இருக்கிறது. அங்கே 31% மக்கள் பினராயி விஜயன் தான் செல்வாக்கு மிக்க தலைவர் எனக் கூறியுள்ளனர். இருப்பினும், அவரை விட ஒரு சதவிகிதம் கூடுதலாக அதாவது 32% ஆதரவுடன் ராகுல் காந்தி டாப் இடத்தில் உள்ளனர்.












Click it and Unblock the Notifications