மேகமலை அருவியில் திடீர் வெள்ளப்பெருக்கு.. தரைப்பாலமே மூழ்கியது.. சுற்றுலா பயணிகள் வெளியேற்றம்
தேனி: மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழையால், தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே உள்ள மேகமலை அருவியில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டிருக்கிறது. தரைப்பாலத்தை மூழ்கடித்து வெள்ளம் சென்று கொண்டிருப்பதால், குளித்துக் கொண்டிருந்த சுற்றுலாப் பயணிகளை உடனடியாக போலீசார் வெளியேற்றினர்.
கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக பெய்து வரும் கோடை மழையால் அதிக பலன் பெறும் மாவட்டங்களில் தேனியும் ஒன்று. கோடை காலங்களில் வெப்பச்சலனம் மற்றும் காற்றின் திசை மாறுபாடு காரணமாக ஏற்படும் மழையால, தேனி மாவட்டத்தில் உள்ள ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. கொடைக்கானல் குமுளி, மேகமலை போன்ற மலை பகுதிகளில் கனமழை பெய்த காரணத்தால் தேனி மாவட்டத்தில் உள் வைகை, வராக நதி, முல்லை பெரியாறு, கொட்டக்குடி, வரட்டாறு, மஞ்சளாறு என தேனி மாவட்டத்தில் எல்லா ஆறுகளிலும் நீர் வரத்து அதிகரித்துள்ளது.

தேனி மாவட்டம் கடமலைக்குண்டு அருகே கோம்பைத்தொழு பகுதியில் 'சின்ன சுருளி’ என்று அழைக்கப்படும் மேகமலை அருவிக்கு மேகமலை வனப்பகுதியில் இருந்து நீர்வரத்து வருவது வழக்கம். மேகமலையில் பெய்யும் மழை, கம்பம் கூடலூர் பக்கம் உள்ள சுருளி பக்கமும், வருசநாடு பக்கம் உள்ள சின்ன சுருளி பக்கமும் வெள்ளமாக வழிந்தோடும். மழை காலங்களில் இருபக்கமும் உள்ள சுருளி, சின்னசுருளி அருவிகளில் தண்ணீர வழிந்தோடும்.
வைகை ஆற்றுக்கு நீர்வரத்து என்றால் மூல வைகை எனப்படும் மேகமலை பகுதியில் பெய்யும் மழை தான் பிரதானம் ஆகும். மேகமலையில் கனமழை பெய்தால் வைகை ஆற்றில் வெள்ளம் வரும்,. முல்லை பெரியாற்றில் எவ்வளவு தண்ணீர் வந்தாலும் நிறையாத வைகை அணை, மூல வைகையில் வெள்ளம் வந்தால் உடனே நிறைந்துவிடும். ஏனெனில் அந்த அளவிற்கு மழையும் வெள்ளமும் வரும். அந்த வழித்தடத்தில் உள்ள அருவி தான் மேகமலை அருவி எனப்படும் சின்ன சுருளி அருவி.
தேனி: மேகமலை அருவியில் நேற்று மாலை திடீரென்று வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. #megamalai #theni pic.twitter.com/xQJvrcWvIC
— velmurugan (@velmurugantheni) May 15, 2024
இந்த அருவிகளில் குளிப்பதற்காக தேனி மாவட்டம் மட்டுமின்றி மதுரை, திண்டுக்கல், சிவகங்கை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்கள் மற்றும் அண்டை மாநிலமான கேரளாவில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்வார்கள். கடந்த சில மாதங்களாக மேகமலை வனப்பகுதியில் போதிய அளவில் மழை பெய்யவில்லை. இதனால் கடந்த 2 மாதங்களாக மேகமலை அருவி நீர்வரத்து இன்றி வறண்டு காணப்பட்டது. இந்தநிலையில் மேகமலை வனப்பகுதியில் கனமழை பெய்து வரும் காரணத்தால் சின்ன சுருளி அருவியில் நீர்வரத்து ஏற்பட்டது.
கடந்த ஒரு வாரமாக தினமும் மழை பெய்த காரணத்தால் ஓரளவு நீர்வரத்து இருந்ததால் சுற்றுலா பயணிகள் தினமும் வந்து குளித்து மகிழ்ந்தனர். நேற்று பெய்த கனமழை காரணமாக மேகமலை அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. தரைப்பாலத்தை மூழ்கடித்து வெள்ளம் சென்று கொண்டிருப்பதால், குளித்துக் கொண்டிருந்த சுற்றுலாப் பயணிகளை உடனடியாக போலீசார் வெளியேற்றினர். இதனால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.












Click it and Unblock the Notifications