கொடைக்கானல் செல்ல புதிய பாதை.. பெருமாள் மலையில் நடக்க போகும் மேஜர் மாற்றம்.. ஈஸியாக போகலாம்
கொடைக்கானல்: பெரியகுளம், வத்தலக்குண்டு, பழனி என கொடைக்கானலுக்கு வரும் எந்த பாதையாக இருந்தாலும் பெருமாள் மலையுடன் முடிந்துவிடும். அதன்பிறகு வெள்ளி நீர்வீழ்ச்சி வழியாக மட்டுமே கொடைக்கானல் நகருக்குள் நுழைய முடியும் என்கிற நிலை உள்ளது. இந்நிலையில் கொடைக்கானலுக்கு மாற்றுப்பாதை அமைக்க ஆய்வு நடந்து வருகிறது.
மலைகளின் இளவரசியான கொடைக்கானலுக்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருவார்கள். தொடர் விடுமுறை நாட்கள் மற்றும் சீசன் காலங்களில் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்வார்கள். சீசன் காலங்களில் மற்றும் விடுமுறை நாட்களில் வாகனங்கள் 5 கிமீ தூரத்திற்கு கூட அணிவகுத்து நிற்கும் அளவுக்கு போக்குவரத்து நெரிசல் ஏற்படும்,

கொடைக்கானலை பொறுத்தவரை வாகன ஓட்டிகள் வருவதற்கு பெரியகுளம், வத்தலக்குண்டு, பழனி என 3 பாதைகள் உள்ளன. இதில் பிரதான வழி என்றால் வத்தலக்குண்டுவில் இருந்து காட்ரோடு வழியாக வரும் பாதை தான்.இந்த பாதை மிகவும் அகலமானது. எந்த இடத்திலும் இரண்டு பேருந்துகள் சர்வசாதாரணமாக விலகி செல்ல முடியும். இந்த பாதையில் கொண்டை ஊசி வளைவுகள் பெரிய அளவில் இருக்காது. ஆனாலும் எஸ் வளைவுகள் அதிக அளவில் இருக்கும்.
அடுத்ததாக பழனி வழியாக கொடைக்கானல் வர முடியும். இந்த பாதையிலும் பேருந்துகளில் எளிதாக பயணிக்க முடியும் என்றாலும், கொண்டை ஊசி வளைவு அதிகம். மிகவும் ஆபத்தான பாதையும் கூட. அனுபவம் இல்லாதவர்கள் இந்த சாலையில் பயணிப்பது எப்போதுமே நல்லது இல்லை.. அடுத்ததாக தேனி மாவட்டம் பெரியகுளத்தில் இருந்து அடுக்கம் கிராமம் வழியாக கொடைக்கானல் வரலாம். இந்த பாதை மற்ற இரண்டு பாதைகளையும் விட மிகவும் ஆபத்தான பாதையாகும். இந்த சாலை எப்போதுமே மண் சரிவு அபாயம் உள்ள பகுதியாகும். மிகவும் அழகான இந்த பாதை, கார் மற்றும் இருசக்கர வாகனங்கள் செல்வதற்கே சவாலானது. ஊசி மலையில் செங்குத்துவாக ஏறுவது போல் பாதை இருக்கும்.
ஆனால் பெரியகுளம், வத்தலக்குண்டு, பழனி என கொடைக்கானலுக்கு வரும் எந்த பாதையாக இருந்தாலும் பெருமாள் மலையுடன் முடிந்துவிடும். அதன்பிறகு வெள்ளிநீர் வீழ்ச்சி வழியாக மட்டுமே கொடைக்கானல் நகருக்குள் நுழைய முடியும் . இதனால் நகரின் நுழைவு பாதையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகனங்கள் நீண்ட வரிசையில் அணிவகுத்து நிற்பது வழக்கமாக உள்ளது.
பெருமாள் மலை முதல் வெள்ளி நீர்வீழ்ச்சி வரை சாலை மிகவும் குறுகலானது என்பதால் பெருமாள்மலையில் இருந்து கொடைக்கானல் நகர் பகுதி வரை அடிக்கடி போக்குவரத்து பாதிக்கப்படும். இதனால் சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகிறார்கள்.
இதுஒருபுறம் எனில் வெள்ளி நீர் வீழ்ச்சிக்கு வரும் வாகனங்களை சாலையிலேயே விடப்படும் நிலை இருப்பதும், அங்கு சோதனை சாவடி இருப்பதும் நெரிசலுக்கு காரணமாக உள்ளது. இதன் காரணமாக வெள்ளி நீர்வீழ்ச்சி வழியாக இல்லாமல் மாற்றுப்பாதை ஒன்றை கொடைக்கானலுக்கு அமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.
இதுதொடர்பாக நெடுஞ்சாலைத்துறை உயர் அதிகாரிகள் கடந்த மாதம் கொடைக்கானல் பகுதிகளில் ஆய்வு நடத்தி சென்றார்கள். மேலும் மாற்றுப்பாதை அமைக்க நெடுஞ்சாலைத் துறை மூலம் தனியார் நிறுவனத்திடம் ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறது. இதையடுத்து கொடைக்கானல் வில்பட்டி கிராமம் முதல் கோவில்பட்டி, பேத்துப்பாறை கிராமம் வழியாக பெருமாள்மலை பகுதியில் மாற்றுப்பாதை அமைக்க சாத்திய கூறுகள் உள்ளதா? என்று தனியார் நிறுவனத்தின் மூலம் ஊழியர்கள் நேற்று ஆய்வு நடத்தினர்.
மேலும் வில்பட்டி, கோவில்பட்டி, டி.வி.எஸ். நகர் உள்ளிட்ட பகுதிகளில் சாலையை அளவீடும் பணிகள் நடத்தப்பட்டு வருகிறது. அந்த பகுதியில் மூன்றரை அடியாக உள்ள சாலை, 7 அடியாக அகலப்படுத்த இருப்பதாகவும், அளவீடு பணிகள் முடிந்தவுடன், இதுகுறித்த அறிக்கை தமிழக அரசிடம் சமர்ப்பிக்கப்படும் எனறும். அதைத்தொடர்ந்து சாலை அமைக்கும் பணி தொடங்க வாய்ப்புள்ளதாக நெடுஞ்சாலைத் துறையினர் தகவலை வெளியிட்டனர். வில்பட்டி பேத்துப்பாறை கிராமம் வழியாக சாலை அமைக்கப்பட்டால் கொடைக்கானல் செல்வோர் நெரிசல் இல்லாமல் எளிதாக போய் வர முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications