எப்படி இருந்த ஊட்டி, கொடைக்கானல்.. இப்ப இப்படி ஆகிடுச்சே.. இ பாஸ் நடைமுறையால் தலைகீழ் மாற்றம்
கொடைக்கானல்: ஊட்டி, கொடைக்கானலில் இ-பாஸ் நடைமுறை எதிரொலியாக சுற்றுலா பயணிகள் வருகை அடியோடு குறைந்துவிட்டது. கடந்த வாரம் சுற்றுலா பயணிகளால் நிரம்பி வழிந்த ஊட்டியும், கொடைக்கானலும் இப்போது வெறிச்சோடி காணப்படுகின்றன. ஊட்டி, கொடைக்கானல் மக்கள் என்ன செய்வது என்று தெரியாமல் பரிதவித்து போயிருக்கிறார்கள்.
கொடைக்கானல், ஊட்டி உள்ளிட்ட கோடைவாசஸ்தலங்களுக்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு இ-பாஸ் கட்டாயம் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. அதைத்தொடர்ந்து திண்டுக்கல் மாவட்ட நிர்வாகம் சார்பில் கொடைக்கானலில் இ-பாஸ் நடைமுறை நேற்று முன்தினம் முதல் அமல்படுத்தப்பட்டது. இதேபோல் நீலகிரி மாவட்டம் நிர்வாகம் சார்பில் அந்த மாவட்டத்திற்கு இ-பாஸ் நடைமுறை அமலக்கு வந்தது.

இ-பாஸ் நடைமுறை பற்றி போதிய புரிதல் மக்களுக்கு ஏற்படாத காரணத்தால் சுற்றுலா பயணிகள் கொடைக்கானல் ஊட்டிக்கு செல்வதை தவிர்த்துவிட்டனர். கொரோனா காலத்தில் இருந்த நடைமுறை என்பதால், அதுபோல் தான் அனுமதிக்கமாட்டார்கள் என்று நினைத்து சமானிய மக்கள் பலர் சுற்றுலா செல்வதைவிட்டுவிட்டார்கள். எத்தனை பேர் வந்தாலும் இபாஸ் எடுத்து பயணிக்கலாம் என்கிற நிலையில், பலருக்கு இதுபற்றி புரிதல் ஏற்படவில்லை.. மேலும் ஏழை மற்றும் நடுத்தர மக்கள் பலர் கார் , பைக்கில் தான் போவார்கள்.. அவர்கள் யாருமே இப்போது வரவில்லை.. இதனால் கொடைக்கானலில் சுற்றுலா பயணிகள் வருகை நேற்று வெகுவாக குறைந்து சாலைகள் வெறிச்சோடியது.
கொடைக்கானல்-வத்தலக்குண்டு பிரதான மலைப்பாதை, பழனி மலைப்பாதை, வெள்ளி நீர்வீழ்ச்சி பகுதி , ஏரிச்சாலை, அண்ணா சாலை, நகராட்சி அலுவலக பகுதி சாலை உள்ளிட்ட சாலைகளைபார்க்கும் போது, இது மே மாதம் தானா என்ற கேள்வி எழுந்தத. கடந்த வாரம் வரை மோயர் பாயிண்ட், குணாகுகை, பில்லர்ராக், பைன்மரக்காடு உள்ளிட்ட பல்வேறுவழிந்தன. தற்போது இ-பாஸ் நடைமுறையால் அந்த இடங்களும் ஆட்கள் நடமாட்டம் இன்றி காணப்பட்டன. மேலும் மலர் கண்காட்சிக்காக பூக்கள் பூத்து தயார் நிலையில் உள்ள பிரையண்ட் பூங்கா, ரோஜா பூங்காவும் சுற்றுலா பயணிகள் இல்லாமல் வெறிச்சோடின.
கொடைக்கானல் நகரத்தை பொறுத்தவரை அங்குள்ள மக்கள் மொத்தமாக சுற்றுலாவையே தொழிலாக கொண்டவர். மிக மிக குறைந்த அளவு மக்களே விவசாயம் சார்ந்து வாழ்கிறார்கள். கொடைக்கானலை பொறுத்தவரை ஏப்ரல், மே, ஜூன் ஆகிய 3 மாதங்களில் வரும் வருமானத்தை வைத்துதான் அடுத்த ஓராண்டிற்கான வாழ்வாதாரத்தை மேம்படுத்த முடியும். இந்த இ-பாஸ் நடைமுறை காரணமாக சுற்றுலா தொழில் கடுமையாக பாதிப்பை சந்தித்துள்ளது. இந்த விவகாரத்தில் அரசு நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து இ பாஸ் நடைமுறையை ரத்து செய்ய வேண்டும் என்று கொடைக்கானல் நகர மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
இதேபோல் ஊட்டியிலும் இ-பாஸ் நடைமுறையால் நேற்று சுற்றுலா பயணிகள் வருகை குறைந்துள்ளது. அவர்கள் தங்கும் விடுதிகளின் முன்பதிவை ரத்து செய்வதால் காட்டேஜ் உரிமையாளர்கள் கலங்கி போய் இருக்கிறார்கள். டீக்கடை, ஓட்டல் கடை, சாலையோர உணவகங்கள், சுற்றுலா வாகனம் ஓட்டுவோர் என பலரும் இ பாஸ் நடைமுறை காரணமாக பாதிப்பை சந்தித்துள்ளனர்.
இ-பாஸ் நடைமுறை குறித்து மாநில மக்களுக்கு சரிவர தெரியவில்லை என்பதுதான் சிக்கலாக உள்ளது. இ-பாஸ் இல்லாமல் வந்து நீண்ட நேரம் சோதனைச்சாவடியில் காத்திருந்து திரும்பி செல்வதும் நடக்கிறது. இதனால் கோடை சீசனையொட்டி ஏற்கனவே முன்பதிவு செய்திருந்த தங்கும் விடுதிகளின் அறைகள் முன்பதிவு ரத்து செய்யப்பட்டு வருகிறது.
இதனால் 80 சதவீதம் காட்டேஜ்கள் காலியாக கிடப்பதாக உரிமையாளர் கவலையுடன் தெரிவித்தனர்.. இ-பாஸ் நடைமுறையால் சுற்றுலா தொழில் பாதிக்கப்பட்டுள்ளதால் உள்ளூர் மக்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது. இ-பாஸ் நடைமுறையை மாவட்ட நிர்வாகம் ரத்து செய்யவிட்டால் போராட்டத்தில் ஈடுபடுவோம் என தனியார் காட்டேஜ் உரிமையாளர்கள் எச்சரித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications