4 மாவட்டங்களில் தயார் நிலையில் பேரிடர் மீட்பு படையினர்.. 2.66 கோடி பேருக்கு பறந்த அலர்ட் மெசேஜ்!
சென்னை: கனமழை எச்சரிக்கையை தொடர்ந்து மாநில பேரிடர் மீட்புப் படையை சேர்ந்த 296 பேர் அடங்கிய 10 குழுக்கள் தயார் நிலையில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாநில பேரிடர் மீட்புப் படையைச் சேர்ந்த 10 குழுக்கள் கன்னியாகுமரி, கோவை, நெல்லை மற்றும் நீலகிரி மாவட்டங்களில் தயார் நிலையில் உள்ளனர். மேலும், 2.66 கோடி மக்களுக்கு குறுஞ்செய்தி வாயிலாக எச்சரிக்கை அலர்ட் அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கோடை வெப்பம் சுட்டெரித்து வந்த நிலையில், தற்போது மழை தீவிரம் அடைந்துள்ளது. தென் தமிழக கடலோர மாவட்டங்கள், தமிழக உள்மாவட்டங்கள், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.
கனமழை எச்சரிக்கை: தென் தமிழக உள் மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் பெரும்பாலான இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இன்று கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி மற்றும் தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் அதி கனமழையும், விருதுநகர், திண்டுக்கல், திருப்பூர், கோயம்புத்தூர் மற்றும் நீலகிரி மாவட்டங்களில் ஒரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும் பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், தூத்துக்குடி, இராமநாதபுரம், மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், அரியலூர், பெரம்பலூர், திருச்சிராப்பள்ளி மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
ரெட் அலர்ட் எச்சரிக்கை: இன்று (திங்கட்கிழமை) முதல் வருகிற 22ஆம் தேதி வரை கன்னியாகுமரி, நெல்லை, தேனி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை முதல் அதி கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக "ரெட் அலர்ட்" விடுத்து வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இந்நிலையில், மக்களுக்கு குறுஞ்செய்தி மூலம் பேரிடர் மேலாண்மைத்துறை கனமழை தொடர்பாக எச்சரிக்கை விடுத்துள்ளது. கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையத்தால் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள மாவட்டங்களைச் சேர்ந்த சுமார் 2.66 கோடி பேருக்கு செல்போனில் குறுஞ்செய்திகள் அனுப்பப்பட்டுள்ளன.
கனமழை எச்சரிக்கையை தொடர்ந்து பேரிடர் மீட்பு படை தயார் நிலையில் உள்ளதாகவும், மாநில பேரிடர் மீட்பு படையைச் சேர்ந்த 10 குழுக்கள் தயார் நிலையில் உள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 296 பேரிடர் மீட்புக் குழுவினர் கன்னியாகுமரி, கோவை, நெல்லை, நீலகிரி மாவட்டங்களில் நிறுத்தப்பட்டுள்ளதாக பேரிடர் மேலாண்மைத்துறை தெரிவித்துள்ளது.
பேரிடர் மீட்புப் படை: மாநில பேரிடர் துறை சார்பாக எடுக்கப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், மார்ச் மாதம் முதல் மே மாதம் முடிய உள்ள கோடைக் காலத்தில் தமிழ்நாட்டிற்கு 12.5 செ.மீ. மழை இயல்பாக கிடைக்கப் பெறுகிறது. இவ்வாண்டு 1.3.2024 முதல் 19.5.2024 முடிய 8.44 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.
இது இயல்பை விட 17 விழுக்காடு குறைவாகும். கடந்த ஒரு மாத காலமாக பல்வேறு மாவட்டங்களில், வெப்பம் இயல்பை விட அதிகரித்து காணப்பட்ட நிலையில், கடந்த ஒரு வார காலமாமக தமிழ்நாட்டில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்திய வானிலை ஆய்வு மையம் 19.05.2024 நாளிட்ட அறிவிக்கையில் 23.05.2024 முடிய பல்வேறு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழை முதல் அதி கனமழை பெய்யக்கூடும் என்று தெரிவித்துள்ளது.
அதிகனமழை எச்சரிக்கை வரப்பெற்றுள்ள நிலையில், பேரிடர் சூழலை திறம்பட கையாள்வதற்கு வழங்கப்பட்டுள்ள நிலையான வழிகாட்டு நடைமுறையினை பின்பற்றி, தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர்களுக்கு 15.5.2024 அன்று அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.
2.66 கோடி பேருக்கு மெசேஜ்: மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் உள்ள சுற்றுலாத் தலங்களில் அடுத்த 3 நாட்களுக்கு கனமழை பெய்யக்கூடும் என்பதால் பொதுமக்கள், சுற்றுலாப் பயணிகள் பாதுகாப்பாக இருக்கும் பொருட்டு கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, திண்டுக்கல், கோயம்புத்தூர், நீலகிரி, விருதுநகர் மற்றும் தேனி மாவட்டங்களில் உள்ள 2.66 கோடி செல் பேசிகளுக்கு பொதுவான எச்சரிக்கை நடைமுறை (Common Alert Protocol) மூலம் 18.05.2024 மற்றும் 19.05.2024 ஆகிய நாட்களில் எச்சரிக்கை குறுந்தகவல்கள் அனுப்பப்பட்டுள்ளது.
கன மழை எச்சரிக்கையினைத் தொடர்ந்து, தமிழ்நாடு பேரிடர் மீட்புப் படையினைச் சார்ந்த 296 வீரர்கள் அடங்கிய 10 குழுக்கள், கன்னியாகுமரி, கோயம்புத்தூர், திருநெல்வேலி மற்றும் நீலகிரி மாவட்டங்களில் நிலைநிறுத்தப்பட்டுள்ளனர். மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளுக்கு 23.05.2024 முடிய கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், சுற்றுலாத் தலங்களுக்கு வருகை தரும் சுற்றுலா பயணிகள் போதிய பாதுகாப்புடன் வரவேண்டும் என்றும், சுற்றுலா வருவதை தவிர்க்க எண்ணினால் தவிர்க்கலாம்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications