சென்னை உட்பட.. வட+டெல்டா மாவட்டங்களை ரவுண்டு கட்டிய மழை மேகங்கள்! அடுத்த 2 மணி நேரம் முக்கியம்
சென்னை: தமிழ்நாடு முழுவதும் இன்று காலை முதல் பரவலான இடங்களில் மழை பெய்து வரும் நிலையில், அடுத்த 2 மணி நேரத்தில் 24 மாவட்டங்களில் சில இடங்களில் இடி,மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
கடந்த ஜூன் மாதம் தொடங்கிய தென்மேற்கு பருவமழையானது கர்நாடகா, கேரளா மாநிலங்களுக்கு ஏமாற்றத்தை அளித்திருந்தாலும், தமிழ்நாட்டிற்கு போதுமான அளவுக்கு மழையை கொடுத்திருக்கிறது என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. கடந்த ஜூன் தொடங்கி செப்டம்பர் மாதம் வரை வழக்கமாக 328.4 மி.மீ மழையை பெறும். இந்த முறை 354 மி.மீ அளவுக்கு மழை பொழிந்திருக்கிறது. எதிர்பார்த்ததைவிட -19% முதல் +19% கூடுதல் குறைவாக மழை பெய்தால் அது இயல்பான அளவு என கணக்கிடப்படுகிறது.

அதேபோல திருநெல்வேலி, சென்னை மற்றும் காஞ்சிபுரம் இந்த மூன்று மாவட்டங்கள் இயல்பை விட 60% அதிக அளவு மழையைப் பெற்றுள்ளன. திருவள்ளூர், செங்கல்பட்டு, விழுப்புரம், திருவண்ணாமலை, வேலூர், ராணிப்பேட்டை, திண்டுக்கல் மற்றும் விருதுநகர் ஆகிய 8 மாவட்டங்கள் 20% முதல் 59% வரை அதிக மழையை பெற்றிருக்கின்றன. ஆனால் அதே சமயம் திருப்பூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், கன்னியாகுமரி, ராமநாதபுரம், திருவாரூர் மாவட்டங்கள் வழக்கத்தை விட 20% முதல் 59% வரை குறைவான மழை அளவை பெற்றிருக்கின்றன. மீதமுள்ள 21 மாவட்டங்கள் இயல்பான அளவில் மழையை பெற்றிருக்கிறது.
இந்நிலையில் தற்போது வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளது. அதே போல இலங்கை மற்றும் குமரிக்கடல் பகுதியில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது. இது குறித்து வானிலை ஆய்வு மையம் இன்று மதியம் வெளியிட்டிருந்த அறிவிப்பில், நாளை (அக்.31) தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தென்காசி, மதுரை, விருதுநகர், சிவகங்கை, தேனி, திண்டுக்கல், புதுக்கோட்டை, தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
நாளை மறுநாள் (நவ.1) தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று கூறியிருந்தது. இந்நிலையில், அடுத்த இரண்டு மணி நேரத்தில் அதாவது மாலை 4 மணியளவில் 24 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இது தொடர்பாக விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பில்,
"சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, திருவண்ணாமலை, ஈரோடு, சேலம், நாமக்கல், மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவாரூர், தஞ்சாவூர், நாகை, அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை மற்றும் ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் மிதமான மழைக்கு வாய்ப்பிருக்கிறது. மழை பெய்யும் இடங்களில் உள்ள தாழ்வான பகுதிகளில் நீர் தேங்கும் என்பதால் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்" என்று கூறியுள்ளது.












Click it and Unblock the Notifications