அடுத்த 3 மணி நேரம்.. திருவள்ளூர் டூ குமரி வரை.. 13 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு.. வானிலை அலர்ட்
சென்னை: தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 13 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. திருவள்ளூர் முதல் குமரி மாவட்டம் வரை 13 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியிருக்கிறது.
தமிழகத்தில் கடந்த இரண்டு நாட்களாக ஒரு சில இடங்களில் மழை பெய்து வருகிறது. நேற்று தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் ஒருசில இடங்களில் மழை பெய்தது. இதேபோல் நெல்லை, தென்காசி மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மழை பெய்தது. இந்த நிலையில் அடுத்த 3 மணி நேரத்தில் தமிழகத்தில் 13 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக சென்னை வானிலை மைய அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:- "தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் அதாவது இன்று இரவு 10 மணி வரை திருவள்ளூர், செங்கல்பட்டு, தஞ்சை, மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், புதுக்கோட்டை, குமரி, நெல்லை, தென்காசி, ராமநாதபுரம் உள்பட 13 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது" என்று கூறப்பட்டுள்ளது.
முன்னதாக வானிலை மையம் வெளியிட்டுள்ள ஒரு வாரத்திற்கான அப்டேட்டில் கூறப்பட்டிருப்பதாவது:- கிழக்கு இலங்கைக் கடல் பகுதிகள் மற்றும் அதனை ஓட்டிய தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால் இன்று ஞாயிற்றுக்கிழமை தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
குறிப்பாக இன்று தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் காரைக்கால் பகுதிகளிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. நாளை முதல் ஜனவரி 14ம் தேதி வரை தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
வரும் 15 ஆம் தேதி தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தூத்துக்குடி திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
ஜனவரி 16, 17ஆம் தேதிகளில் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். வரும் ஜனவரி 18 ஆம் தேதி கூடலோர தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும் உள் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளைப் பொறுத்தவரை இன்று வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 27° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 23-24 செல்சியஸை ஓட்டியும் இருக்கக்கூடும். நாளை திங்கட்கிழமை வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான /மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 27-28" செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 23-24 செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications