குடையை ரெடியா வைங்க.. அடுத்த 3 மணி நேரம்.. சென்னை டூ குமரி வரை.. 13 மாவட்டங்களில் வெளுக்க போகும் மழை
சென்னை: தமிழகத்தில் இன்று இரவு 10 மணி வரை சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், தென்காசி, மதுரை, விருதுநகர் என 13 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதேபோல் இரவு 10 மணி வரை வாலாஜாபேட்டை, கும்மிடிப்பூண்டி, ஆற்காடு, கலவை, உத்திரமேரூர் ஆகிய பகுதிகளிலும் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நெல்லை, தென்காசி, குமரி மாவட்டங்களில் கடந்த 3 நாட்களாக வானம் மேகமூட்டத்துடன் காணப்படுகிறது. மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியை ஒட்டிய ஒரு சில இடங்களில் மிதமானது முதல் கனமழை பெய்து வருகிறது. இதனால் அணைகளில் நீர் மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. தென்காசி மாவட்டத்தில் உள்ள ராமநதி மொத்தம் உள்ள 84 அடியில் 82 அடியை எட்டியது.

குற்றாலத்திலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதேபோல், சென்னை வானிலை ஆய்வு மையமும், தமிழகத்தில் வரும் 20 ஆம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவித்துள்ளது. இந்த நிலையில் இன்று இரவு 10 மணி வரை சென்னை, திருவள்ளூர், மதுரை, தென்காசி, குமரி உள்பட 13 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வானிலை மையம் கூறியிருப்பதாவது:-
சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், கடலூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, விழுப்புரம், தென்காசி, மதுரை, விருதுநகர், நெல்லை, குமரி ஆகிய மாவட்டங்களில் இன்று இரவு 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு உள்ளது என்று கூறப்பட்டுள்ளது.
முன்னதாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:- நேற்று மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று தெற்கு சத்தீஸ்கர் மற்றும் அதனை ஒட்டிய விதர்பா நில பகுதிகளில் நிலவுகிறது.. ஒரு புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி மத்தியமேற்கு மற்றும் அதனை ஒட்டிய வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் 19 - ஜூலை வாக்கில் உருவாக வாய்ப்புள்ளது.
மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, இன்று தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மேலும் வலுவான தரைக்காற்று 30 -40 கி.மீ வேகத்தில் வீசக்கூடும். நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் அதிகனமழையும், கோயம்புத்தூர் மாவட்ட மலை பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும்.
திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, திருநெல்வேலி மாவட்ட மலைப்பகுதிகள் மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யவாய்ப்புள்ளது. நாளை ஜூலை 17ம் தேதி தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
மேலும் வலுவான தரைக்காற்று 30 -40 கி.மீ வேகத்தில் வீசக்கூடும். நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்ட மலை பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும்; திருப்பூர், தேனி, திண்டுக்கல் மாவட்ட மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யவாய்ப்புள்ளது. ஜூலை 18ம் தேதி தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்ட மலை பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
ஜூலை 19 முதல் 22 வரையிலான நாட்களில் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
அதிகபட்ச வெப்பநிலை 32° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26 - 27° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும். அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 33-34° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26 - 27° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது












Click it and Unblock the Notifications