“செல்ஃபிஷ்கள்”.. வெள்ளத்திலும் திருந்தாத உள்ளங்கள்! சென்னையில் உதவ சென்று மனம் நொந்த தன்னார்வலர்கள்
சென்னை: புயல், மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களின் துயர் துடைக்க நீரில் இறங்கி மீட்பு மற்றும் நிவாரண உதவிகளை மேற்கொண்டு வரும் தன்னார்வலர்கள், மக்கள் சிலரது மோசமான நடவடிக்கைகள் மற்றும் சுயநலன் தொடர்பாக வேதனை தெரிவித்து வருகிறார்கள்.
சென்னையில் வெள்ள மீட்பு மற்றும் நிவாரண பணியில் ஈடுபட்ட ஒரு இயக்கத்தை சேர்ந்த பெயர் கூற விரும்பாத நபர் ஒருவர் நம்மை தொடர்புகொண்டு இந்த தகவலை கூறினார். "முழங்கால் அளவுக்கு தண்ணீர் தேங்கியுள்ள பகுதிகளில் கூட ஆண்கள் வீடுகளை விட்டு வெளியே வந்து உணவு வாங்காமல் கதவு, சுவற்றில் எங்களை ஏற சொல்லி உணவு கேட்கிறார்கள். மழை காலங்களில் அவை வழுக்குகின்றன. இதனால் சில சகோதரர்கள் கீழே விழுந்து காயமடைந்துள்ளார்கள்.

தரை தளத்தில் காம்பவுண்டுக்கு உள்ளே நின்றுகொண்டு சாப்பாடு, பால் பாக்கெட், தண்ணீர் பாட்டிலை தூக்கி வீச சொல்கிறார்கள்.
கைகளால் உணவு பொட்டலங்களை வாங்க முடிந்தும் தூக்கி வீச சொல்வதால் அவை கீழே விழுந்து வீணாகி விடுகின்றன.
ஏராளமான இளைஞர்கள் கீழே இறங்கி வராமல் உணவு கேட்டனர். எங்களுக்கு பரிட்சயமில்லாத பகுதி என்பதால் எங்களுடன் வந்து தேவைப்படுவோருக்கு உணவு வழங்குமாறு அவர்களை அழைத்தோம். யாருமே வரவில்லை.
ஒருவர் "நீரில் பாம்பு, முதலை எல்லாம் உள்ளது. எப்படி எங்களால் வர முடியும்." என்றார். மற்றொருவர் இன்னும் கறாராக "உங்களுக்கு இதானே வேலை. உங்க மதத்துக்கு வேலை செய்றீங்க! நாங்க ஏன் வரனும்?" என்றார். எங்கள் மனதெல்லாம் நொந்துபோய்விட்டது. உணவு கேட்டு அவசரப்பட்டு சிலர் கடுகடுப்போடு நடந்துகொள்கிறார்கள். எங்கள் வீடுகளிலும் தண்ணீர் புகுந்துள்ளது. எங்கள் குடும்பமும் பாதிக்கப்பட்டு உள்ளது. ஆனால், நாங்கள் மற்றவர்களுக்காக உதவ வருகிறோம். அதை கூட சிலர் உணராமல் உணவு டெலிவரி செய்ய வரும் ஊழியரைபோல் மோசமாக நடத்தினர்.
2015ல் இதைவிட மோசமான வெள்ளம் இருந்தது. அப்போது சென்னை மக்களிடம் இருந்த பொறுமை இப்போது எங்கே போனது என்று தெரியவில்லை. எங்களையும் கொஞ்சம் கண்ணியமாக நடத்த சொல்லுங்கள். அவர்களுக்கு உதவுவதற்காகவே இவ்வளவு கஷ்டப்படுகிறோம் என்ற உணர்வின்றி நடந்துகொள்கிறார்கள். இதனால், பழைய உற்சாகத்துடன் நிவாரண வேலை செய்ய முடியவில்லை." என்றார்.
அதேபோல் பிரியா என்பவர் எக்ஸ் தளத்தில் வெளியிட்டு உள்ள பதிவில், "ஏரியால நேத்து பால் பாக்கெட் கெடைக்கல. இன்னைக்கு கவுன்சிலர் டாட்டா ஏஸ்ல வந்து, எல்லா தெருலயும் ஆவின் பால் பாக்கெட் குடுத்துட்டு போறார். எம்.எல்.ஏ. பின்னாடியே வந்து, எல்லாருக்கும் பால் கெடச்சுதான்னு கேட்டுட்டு போறார். அங்க ஒரு அம்மா வந்து, எங்க வீட்ல க்ரீன் பாக்கெட் தான் குடிப்போம், அது இல்லையான்னு கேக்குறாங்க. ஒரு நாள் கூட அட்ஜஸ்ட் செஞ்சிக்க மாட்டாங்க போல.
ஏரியால நேத்து பால் பாக்கெட் கெடைக்கல. இன்னைக்கு கவுன்சிலர் Tata aceல வந்து, எல்லா தெருலயும் ஆவின் பால் பாக்கெட் குடுத்துட்டு போறார்.. MLA பின்னாடியே வந்து, எல்லாருக்கும் பால் கெடச்சுதான்னு கேட்டுட்டு போறார்.
— Priya (@ipriy_a) December 6, 2023
அங்க ஒரு அம்மா வந்து, எங்க வீட்ல க்ரீன் பாக்கெட் தான் குடிப்போம்,
இங்க இருந்து 1/2 கிமீ தூரத்துல இருக்க தெருல இன்னும் தண்ணி வடியல, கரண்ட் இல்ல. அதெல்லாம் யோசிக்காம, இப்படி கேக்குறாங்க. இவங்களுக்கெல்லாம் என்ன செஞ்சாலும் திருப்தி ஆகாது!" என்று குறிப்பிட்டு உள்ளார். அவரது பதிவின் கீழே மற்றொரு நபர், "நேத்து பொங்கல் எல்லாம் சாப்பிட முடியுமானு சண்டை போட்டுட்டு இருந்தாங்க" என்று குறிப்பிட்டு உள்ளார்.












Click it and Unblock the Notifications