இந்தியாவிலேயே முதல்முறை.. சென்னையில் களமிறக்கப்பட்ட "சிஸ்டம்".. நெருங்கும் தாழ்வு மையம்.. மிஸ் ஆகாது
சென்னை: இந்தியாவிலேயே முதல்முறையாக சென்னையில் நிகழ்நேர வெள்ள முன்னறிவிப்பு செய்யும் சிஸ்டம் (RTFF & SDSS) கொண்டு வரப்பட்டு உள்ளது. இது நாட்டின் முதல் விரிவான நகர்ப்புற வெள்ள மேலாண்மை அமைப்பாகும்.
மழை வருவதை முன்கூட்டியே கண்காணிக்கும் வானிலை சிஸ்டம் எப்படி செயல்படுகிறதோ அப்படித்தான் இதுவும். வெள்ளம் வருவதை முன்கூட்டியே கண்காணிக்கும். ஒரு பகுதிக்கு வெள்ள ஆபத்து இருக்கிறது என்றால் அதை முன்கூட்டியே இதை வைத்து கணிக்க முடியும். இந்தத் திட்டம், சுமார் ₹107.2 கோடி செலவில் உருவாக்கப்பட்டுள்ளது.

சென்னை வெள்ள அறிவிப்பு சிஸ்டம்
ஏரிகள், ஆறுகள், மழைநீர் வடிகால் அமைப்புகள் மற்றும் கடல் பகுதிகள் என அனைத்தையும் உள்ளடக்கியது. நதிகள் மற்றும் நீர்த்தேக்கங்களில் நீர்மட்டத்தை துல்லியமாக கணிப்பதுடன், புளியந்தோப்பு, நுங்கம்பாக்கம், மாம்பலம், சைதாப்பேட்டை, வேளச்சேரி, மீனம்பாக்கம், முடிச்சூர் போன்ற தாழ்வான பகுதிகளில் தெரு மட்ட வெள்ள முன்னறிவிப்புகளையும் வழங்கும்.
இத்திட்டம் சென்னையை மையமாகக் கொண்டிருந்தாலும், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கிய சுமார் 4,974 சதுர கி.மீ பரப்பளவைக் கண்காணிக்கிறது. அடையாறு, கூவம், கொசஸ்தலையாறு, கோவளம் ஆற்றுப் படுகைகள் இந்த அமைப்பின் கீழ் கண்காணிக்கப்படுகின்றன.
சென்னை வெள்ளம் கணிப்பு
மாநில பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் மூத்த அதிகாரிகள் வெளியிட்ட தகவலில், "கடந்த சில ஆண்டுகளாக, நாங்கள் முன்னறிவிப்புகளைச் சரிசெய்து, அதற்கான விதிமுறைகளை வகுத்துள்ளோம். இதுவரை, உருவாக்கப்பட்ட தரவுகளை முடிவெடுப்பதற்குப் பயன்படுத்தவில்லை. இந்த வடகிழக்கு பருவமழை தொடங்கியதில் இருந்து, சம்பந்தப்பட்ட துறைகளுடன் இந்த முன்னறிவிப்புகளைப் பகிர்ந்து வருகிறோம்" என்றனர்.
இந்த புதிய அமைப்பு, அனைத்து வகையான பேரிடர் மேலாண்மைக்கான இணைய அடிப்படையிலான 'TNSMART' அமைப்புடன் முழுமையாக ஒருங்கிணைக்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த அமைப்பின் பயனாளிகளாக நீர்வளத் துறை, வருவாய் நிர்வாக ஆணையரகம், சென்னை மாநகராட்சி, நகராட்சி நிர்வாக ஆணையரகம் ஆகியவை உள்ளன. அவர்களுக்கு உடனுக்குடன் நீரின் அளவு, வெள்ளத்திற்கான வாய்ப்பு குறித்த மெசேஜ்கள் அனுப்பப்படும்.
தேர்ந்தெடுக்கப்பட்ட RTFF & SDSS தகவல்கள், TN-Alert என்ற மொபைல் செயலி மூலம் பொதுமக்களுக்கும் பகிரப்படும். இதனால் அவசர காலங்களில் மக்களுக்கும் தகவல் அனுப்பப்படும். உலக வங்கியின் நிதி உதவியுடன், இத்திட்டத்தை, தமிழ்நாடு நகர்ப்புற உள்கட்டமைப்பு நிதிச் சேவைகள் (TNUIFSL) நிறுவனம், SECON-JBA ஆலோசகர்கள் மூலம் செயல்படுத்தியுள்ளது.
இந்திய தொழில்நுட்பக் கழகம் (IIT)-சென்னை தொழில்நுட்ப மேற்பார்வையை வழங்கியுள்ளது. நீர்வளத் துறை மற்றும் சென்னை மாநகராட்சி அதிகாரிகளைக் கொண்ட ஒரு குழு, வருவாய் நிர்வாக ஆணையரகத்தின் கீழ் இந்த அமைப்பை நிர்வகிக்க முன்மொழியப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் இன்று மழை
இன்று தமிழகத்தின் பெரும்பாலான இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். இராமநாதபுரம், புதுக்கோட்டை, மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், கடலூர் மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் கனமழையும், கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, விழுப்புரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், அரியலூர், பெரம்பலூர், சிவகங்கை மாவட்டங்களில் சில இடங்களிலும் கனமழைக்கு வாய்ப்புள்ளது.
சென்னையில் வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான முதல் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 31 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 24-25 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.












Click it and Unblock the Notifications