நடுக்கடலில் நங்கூரமிட்ட டிட்வா! சென்னை உள்பட 4 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை!
சென்னை: டிட்வா புயல் எதிரொலியால் கனமழை பெய்யும் என்பதால் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று ஒரு நாள் விடுமுறை அறிவிக்கப்பட்டது.
டிட்வா புயல் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்து, சென்னையை நோக்கி நகர்ந்து வருகிறது. இதனால் சென்னை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. சென்னையில் நேற்று காலை 7 மணி நேரத்திற்கு மேலாக இடைவிடாது பெய்த மழையால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.

இதனால் வாகன ஓட்டிகள் அவதி அடைந்தனர். போக்குவரத்தும் கடுமையாக பாதிக்கப்பட்டது. தொடர் மழையால் சென்னை மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. இந்த நிலையில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தொடர்ந்து நகர்ந்து வருவதால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களுக்கு இன்று கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இது குறித்து சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது: சென்னைக்கு கிழக்கே சுமார் 50 கி.மீ. தொலைவில் நிலைகொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், அதற்கடுத்த 12 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுக்குறைந்து, சென்னையில் இருந்து 30 கி.மீ. தூரத்தில் இருக்கக்கூடும். இதன் காரணமாக தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இன்று இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும். நாளை (புதன்கிழமை) முதல் 5-ஆம் தேதி வரையில் தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி-மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
கனமழை எச்சரிக்கையை தொடர்ந்து சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் பிறப்பித்துள்ளனர்.
அது போல் இன்று நடைபெறவிருந்த செமஸ்டர் தேர்வுகளும் ஒத்தி வைக்கப்படுவதாக சென்னை பல்கலைக்கழகம், அண்ணா பல்கலைக்கழகம், தனியார் பல்கலைக்கழகம் உள்ளிட்டவை அறிவித்துள்ளன. அது போல் இன்று நடைபெறவிருந்து ரத்தான தேர்வு வேறொரு நாளில் பின்னர் அறிவிக்கப்படும் என்றும் தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர்கள் (controller of examinations)தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications