கனமழையால் தாம்பரம் சுரங்கப்பாதையில் வெள்ளம்.. அடுத்த 3 மணி நேரத்திற்கு நீடிக்குமாம்.. குடை அவசியம்
சென்னை: நள்ளிரவு முதல் கொட்டித்தீர்த்த கனமழையால் தாம்பரம் சுரங்கப்பாதைகளில் வெள்ளநீர் தேங்கியுள்ளதால் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இன்று காலை 10 மணிவரை திருவள்ளூர், சென்னை , செங்கல்பட்டு , காஞ்சிபுரம் உள்ளிட்ட 4 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளி மண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, இன்று முதல் 27ஆம் தேதி வரை: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

28 மற்றும் மற்றும் 29ஆம் தேதி தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
இதனிடையே சென்னையின் புறநகர் பகுதிகளான தாம்பரம், குரோம்பேட்டை, ஆவடி, அம்பத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் லேசான மழை பெய்தது. நள்ளிரவு நேரங்களில் பல்வேறு இடங்களில் பரவலாக பலத்த மழை பெய்தது. சேப்பாக்கம், மயிலாப்பூர், கிண்டி, வேளச்சேரி, அண்ணா நகர், பெரம்பூர் உள்ளிட்ட இடங்களில் பலத்த மழை பெய்தது. தாம்பரம் பகுதிகளில் கனமழை கொட்டித்தீர்த்தது. திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களிலும் மழை பெய்தது.

தாம்பரம் பகுதிகளில் 11 செமீ அளவிற்கு மழை பெய்ததாக வானிலை ஆய்வு மையம் தகவல் வெளியிட்டுள்ளது. கனமழை காரணதாக தாம்பரம் ரயில்வே சுரங்கப்பாதையில் வெள்ளநீர் தேங்கியுள்ளது. மழை வெள்ளநீர் தேங்கியுள்ளதால் பாதுகாப்பு கருதி போக்குரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக மேற்கு தாம்பரத்தில் இருந்து கிழக்குத் தாம்பரம் பகுதிக்கு செல்லும் மக்கள் 2 கிலோ மீட்டர் தூரத்திற்கு சுற்றிச்செல்வதால் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

இதனிடையே காலை 10 மணி வரைக்கும் திருவள்ளூர், சென்னை , செங்கல்பட்டு , காஞ்சிபுரம் உள்ளிட்ட 4 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications