விலகி சென்ற மிக்ஜாம்.. மெல்ல இயல்பு நிலைக்கு திரும்பும் சென்னை.. முக்கிய சாலைகளில் நீர் வடிந்தது!
சென்னை: மிக்ஜாம் புயல் சென்னை நகரை மொத்தமாகப் புரட்டிப் போட்டுள்ள நிலையில், இன்று காலையே முக்கிய சாலைகளில் மழைநீர் வடிந்துள்ளது. இப்போது உட்புற சாலைகளில் மழை நீர் வடிந்து வருவதாகக் கூறப்படுகிறது.
வங்கக் கடலில் ஏற்பட்ட மிக்ஜாம் புயல் காரணமாகச் சென்னை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த இரண்டு நாட்களாகக் கனமழை கொட்டி வந்தது. நேற்று முன்தினம் ஆரம்பித்த மழை நகரை அப்படியே புரட்டிப் போட்டது.

முதலில் விட்டு விட்டு மழை பெய்தாலும் அதன் பிறகு விடாமல் மழை கொட்ட ஆரம்பித்தது. இதனால் சென்னையில் பல்வேறு இடங்களிலும் நீர் தேங்கியது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டது.
முக்கிய சாலைகள்: கடல் சீற்றம் காரணமாக வெள்ளத்தைக் கடல் உள்வாங்காத நிலையில், நீர் வடிவதில் பல மணி நேரம் தாமதம் ஏற்பட்டது. நேற்றிரவு மழை நின்ற நிலையில், இப்போது பல முக்கிய சாலைகளில் மழை நீர் வடிந்துவிட்டது.இப்போது உட்புற சாலைகளில் மழை நீர் வடிந்து வருவதாகக் கூறப்படுகிறது.

குறிப்பாக அண்ணா சாலை, மீனம்பாக்கம் சாலை, கிண்டி - ராஜ் பவன் - மத்திய கைலாஷ் சாலை, திருவான்மியூர் பகுதிகளில் தேங்கிய மழை நீர் வடிந்துள்ளது. மற்ற உட்புற சாலைகளிலும் மழை நீர் வடிந்து வருவதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.
இன்றிரவுக்குள் வடியும்: இன்றிரவுக்குள் பெரும்பாலான பகுதிகளில் மழை நீர் வடியும் என்று அதிகாரிகள் கூறுகின்றனர். மழை நீர்த் தானாக வடியாத பகுதிகளில் மோட்டர் மூலம் மழை நீரை அகற்றத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
இப்போது மிக்ஜாம் புயல் சென்னையில் இருந்து சுமார் 200 கிமீ தொலைவுக்குச் சென்றுவிட்ட நிலையில், சென்னையில் மழை பெரும்பாலும் நின்றுவிட்டது. மெல்ல வெயிலும் எட்டிப் பார்க்கத் தொடங்கிவிட்டது. இதனால் இன்றைய தினம் மீட்புப் பணிகள் மேலும் துரிதமாக நடைபெறும் எனத் தெரிகிறது.

வானிலை மையம்: இன்றைய தினம் திருவள்ளூர் மற்றும் இராணிப்பேட்டை மாவட்டங்களில் மட்டுமே ஓரிரு இடங்களில் மழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து வெளியிட்ட செய்திக்குறிப்பில், "05.12.2023: தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். திருவள்ளூர் மற்றும் இராணிப்பேட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
வரும் டிச. 6 மற்றும் டிச. 7 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். டிச. 8 முதல் டிச. 10 வரை தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளைப் பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 28-29 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 23 டிகிரி செல்சியஸாகவும் இருக்கக்கூடும்" என்று அதில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications