தீவிர புயலாக மாறும் 'மொந்தா'.. தமிழ்நாட்டின் 9 துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்!
சென்னை: வங்கக்கடலில் மொந்தா புயல் புயல் உருவாகி உள்ள நிலையில் தமிழக துறைமுகங்களில் 2 ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. சென்னை, கடலூர், எண்ணூர், காட்டுப்பள்ளி, புதுச்சேரி, காரைக்கால், நாகை, பாம்பன், தூத்துக்குடி ஆகிய துறைமுகங்களில் இரண்டாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
வங்கக்கடலில் உருவாகி நிலைகொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நள்ளிரவில் புயலாக வலுப்பெற்றது. இந்த புயலுக்கு மொந்தா (Montha) என பெயரிடப்பட்டுள்ளது. மொந்தா புயல் தீவிர புயலாக வலுப்பெற்று நாளை மாலை ஆந்திராவின் மசூலிப்பட்டினம்- கலிங்கப்பட்டினம் இடையே கரையை கடக்க உள்ளது என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் 25 ஆம் தேதி காலை நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம், மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து வலுப்பெற்றது. தொடர்ந்து, நேற்று (அக்.26) காலை 5.30 மணி அளவில், மேற்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவானது.
பின்னர் 8.30 மணி அளவில் அதே பகுதிகளில், போர்ட் ப்ளேயரிலிருந்து (அந்தமான் தீவுகள்) மேற்கு - தென்மேற்கே சுமார் 620 கிலோ மீட்டர் தொலைவிலும், விசாகப்பட்டினத்திலிருந்து தெற்கு - தென்கிழக்கே 830 கிலோ மீட்டர் தொலைவிலும், சென்னையிலிருந்து கிழக்கு - தென்கிழக்கே 780 கிலோ மீட்டர் தொலைவிலும், காக்கிநாடாவிலிருந்து தென்கிழக்கே 830 கிலோ மீட்டர் தொலைவிலும் நிலைகொண்டிருந்தது.
இது, மேற்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து, தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் புயலாக வலுவடைந்துள்ளது. இந்த புயலுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் மொந்தா (Montha) என பெயரிட்டுள்ளது. தற்போது மொந்தா புயல் மேற்கு மற்றும் வடமேற்கு திசை நோக்கி நகர்ந்து வருகிறது.
இந்நிலையில், இன்று காலை 8.15 மணி நிலவரப்படி, சென்னையில் இருந்து 550 கி.மீ. கிழக்கு- தென்கிழக்கே நிலை கொண்டுள்ள புயல் அடுத்த 12 மணிநேரத்தில் மேற்கு- வடமேற்கு நோக்கி வங்கக்கடலின் தென்மேற்கு மற்றும் மேற்கு மத்திய பகுதியின் மேல் தொடர்ந்து நகர்ந்து செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதன்பின்னர், வடமேற்கே நகர்ந்து, பின்னர் வடக்கு-வடமேற்கு நோக்கி நகர்ந்து, நாளை காலை தீவிர சூறாவளி புயலாக உருவெடுக்கும். தொடர்ந்து அது வடக்கு வடமேற்கே நகர்ந்து, ஆந்திர பிரதேசத்தின் மசிலிப்பட்டினம் மற்றும் கலிங்கப்பட்டினம் பகுதிகளுக்கு இடையே வருகிற 28 ஆம் தேதி அன்று (நாளை) மாலை அல்லது இரவில் காக்கிநாடா அருகே தீவிர புயலாக கரையை கடக்க கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. அப்போது மணிக்கு 110 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
அதன்படி, இன்று மற்றும் நாளை தமிழ்நாட்டில் சில இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது. நாளை (28 ஆம் தேதி) ராணிப்பேட்டை, திருவள்ளூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.
கரையை நெருங்கும்போது புயல் வலுவிழக்க வாய்ப்பு அதிகம் இருக்கிறது. வளிமண்டலத்தில் காற்று முறிவு ஏற்படுவதால் ஆந்திராவில் காற்று பாதிப்பு இருக்காது என கணிக்கப்பட்டு இருக்கிறது. ஆனால் அதே நேரத்தில், ஆந்திராவின் ஓங்கோல் முதல் நெல்லூர் வரையிலான தெற்கு ஆந்திர பகுதியில் மிக கனமழையும், குறுகிய நேரத்தில் அதி கனமழையும் பதிவாகக்கூடும்.
மொந்தா புயலை முன்னிட்டு ஆந்திராவின் சில பகுதிகளில் உள்ள பள்ளிகளில் விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. புயலை முன்னிட்டு, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னை, கடலூர், தூத்துக்குடி உள்பட தமிழக துறைமுகங்கள் மற்றும் புதுச்சேரியில் உள்ள 9 துறைமுகம் என மொத்தம் 9 துறைமுகங்களில் கடந்த 25 ஆம் தேதி அன்று 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது.
இந்நிலையில், புயல் பாதிப்புகளில் இருந்து பாதுகாத்து கொள்ளும் வகையில், சென்னை, எண்ணூர், காட்டுப்பள்ளி, கடலூர், நாகப்பட்டினம், பாம்பன், தூத்துக்குடி, புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய 9 துறைமுகங்களில் 2 ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு இன்று ஏற்றப்பட்டுள்ளது.
புயலை முன்னிட்டு, அரசு சார்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன. மீனவர்கள் கரைக்கு திரும்பும்படி முன்பே அறிவுறுத்தல் வழங்கப்பட்டது. புயலை எதிர்கொள்வதற்காக அதிகாரிகள் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபடும்படி அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.












Click it and Unblock the Notifications