கடலையே பார்த்தவங்க.. வெள்ளத்தில் சிக்கிய மக்களை படகுகளில் மீட்கும் மீனவர்கள்.. நெகிழ்ச்சி!
தூத்துக்குடி: இடிந்தகரை, கூத்தங்குழி உள்ளிட்ட மீனவ கிராமங்களை சேர்ந்த மக்கள், வெள்ளத்தில் சிக்கியவர்களை படகுகள் மூலம் மீட்டு நிவாரண முகாம்களில் தங்க வைத்து வருகின்றனர். பிரதிபலன் எதையும் எதிர்பார்க்காமல் மீனவர் இளைஞர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளது நெகிழ்ச்சி அடைய வைத்துள்ளது.
திருநெல்வேலி, குமரி, தூத்துக்குடி, தென்காசி ஆகிய 4 மாவட்டங்களில் 36 மணி நேரத்திற்கும் மேலாக தொடர்ந்து மழை பெய்தது. நெல்லை, தூத்துக்குடியில் சிறிது நேரம் கூட நிற்காமல் தொடர்ந்து பெய்த மழையால் அணைகள் அனைத்தும் நிரம்பி ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. வரலாறு காணாத மழையால் நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் பெரும்பாலான பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கின.

நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களின் பல இடங்கள் வெள்ளத்தில் மிதக்கிறது. நெல்லை சந்திப்பு பேருந்து நிலையத்தில் பேருந்து பாதி அளவுக்கு மூழ்கும் அளவுக்கு வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதேபோல் தாமிரபரணி ஆற்றங்கரையோர குடியிருப்பு பகுதிகள் முழுவதும் தண்ணீர் மூழ்கின. இதனால் அங்கு வசித்து வந்த மக்கள் அருகில் உள்ள நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
வரலாறு காணாத வெள்ளத்தால் நெல்லை, தூத்துக்குடி மாவட்டத்தில் பெரும்பாலான மக்கள் கடும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். வெள்ளம் பாதித்த இடங்களில் இருந்து மக்கள் மீட்கப்பட்டு வருகிறார்கள். நெல்லை மாவட்டத்தின் கடற்கரையோர பகுதிகளான உவரி, இடையன்குடி, கூத்தன்குழி, கூடங்குளம் உள்ளிட்ட இடங்களும் வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில், இடிந்தகரை, கூத்தங்குழி உள்ளிட்ட மீனவ கிராமங்களை சேர்ந்த மக்கள், வெள்ளத்தில் சிக்கியவர்களை படகுகள் மூலம் மீட்டு நிவாரண முகாம்களில் தங்க வைத்து வருகின்றனர். பிரதிபலன் எதையும் எதிர்பார்க்காமல் தன்னார்வலராக வந்து மீனவ கிராமத்தை சேர்ந்த இளைஞர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளது நெகிழ்ச்சி அடைய வைத்துள்ளது.












Click it and Unblock the Notifications