வெள்ள பாதிப்பு.. 30 மணி நேரத்திற்கு மேலாக கரண்ட் இல்லை.. கிரிக்கெட் வீரர் அஸ்வின் வேதனை
சென்னை: மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை நகரின் பல்வேறு இடங்களில் வெள்ள நீர் தேங்கியுள்ளதால், ஒரு சில இடங்களில் மின்வினியோக நிறுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் இது குறித்து கிரிக்கெட் வீரர் அஸ்வின், என்னுடைய பகுதியிலும் கூட 30 மணி நேரத்திற்கு மேலாக மின்சாரம் இல்லை என்று கூறியுள்ளார்.
வங்கக் கடலில் ஏற்பட்ட மிக்ஜாம் புயல் நேற்று சென்னைக்கு அருகே வந்து கடந்து சென்றது. அப்போது புயல் தீவிர புயலாக வலுப்பெற்ற நிலையில், சென்னையில் பல இடங்களில் கனமழை கொட்டியது. 2 நாட்களாக பல்வேறு இடங்களிலும் விடிய விடிய கனமழை கொட்டி தீர்த்தது. இதன் காரணமாக சென்னையில் எல்லா இடங்களிலும் நீர் தேங்கி இக்கட்டான சூழல் ஏற்பட்டது.

இதனால் சென்னை மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டதோடு அத்தியாவசிய பொருட்களுக்கு கூட திண்டாடும் நிலை ஏற்பட்டது. வெள்ள நீரைக் கடல் உள்வாங்கவில்லை என்றும் இதன் காரணமாகவே சென்னையில் பல்வேறு இடங்களிலும் நீர் தேங்கியதாக அதிகாரிகள் தெரிவித்தனர். நேற்று நள்ளிரவில் மழை குறைந்த நிலையில், கடல் சீற்றமும் குறைந்தது.
தத்தளித்த சென்னை: இதையடுத்து நீர் வடியத் தொடங்கியது. இப்போது நகரின் முக்கிய சாலைகளில் மட்டும் நீர் வடிந்துள்ளது. உட்புற சாலைகளில் இன்னும் நீர் வடியவில்லை. குறிப்பாகத் தாம்பரம், முடிச்சூர் உள்ளிட்ட பகுதிகளில் மழை நீர் அதிகம் தேங்கியுள்ளது. மழை நீரை அகற்றும் பணிகள் விரைவாக மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் இன்று இரவுக்குள் 75% இடங்களில் மழை நீர் அகற்றப்படும் என்றும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.
மேலும், மழை காரணமாக மின் இணைப்பும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. சென்னையில் பல இடங்களில் புயலால் மழை நீர் தேங்கி கடல் போல் காட்சியளிக்கிறது. இந்த கனமழையால் போக்குவரத்தும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாகச் சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் பால் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது.
செல்போன் சிக்னல்: ஆவின் பாலும் பல இடங்களில் கிடைக்கவில்லை என்றே பொதுமக்கள் புகார் தெரிவிக்கிறார்கள். இதனால் சென்னைவாசிகள், குறிப்பாகக் குழந்தைகளை வைத்திருக்கும் குடும்பங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். செல்போன் சிக்னல் கிடைக்காததாலும் மக்கள் மிகுந்த பாதிப்பிற்குள்ளாகினர். இந்த நிலையில், சென்னையில் நேற்று மதியம் நேரத்தில் வெயில் அடிக்க தொடங்கியது.
கிரிக்கெட் வீரஸ் அஸ்வின்: இதனால் மின்சாரம் வந்துவிடும் என்று சென்னை வாசிகள் பலரும் நினைத்து இருந்தனர். ஆனால் ஒருசில நிமிடங்கள் மட்டுமே மின் வினியோகம் இருந்ததாகவும் உடனே மின்வினியோகம் துண்டிக்கப்பட்டதாக மக்கள் கூறினர். ஒரு சில இடங்களில் மின் வினியோகம் நேற்றே தொடங்கப்பட்ட நிலையில், இன்னும் பல்வேறு இடங்களில் மின் வினியோகம் வழங்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டும் இருந்து வருகிறது.
இந்த நிலையில் இந்திய கிர்க்கெட் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின், என்னுடைய பகுதியிலும் கூட 30 மணி நேரத்திற்கு மேலாக மின்சாரம் இல்லை. அப்படியென்றால் மற்ற இடங்களில் என்ன நிலை என்பதை யூகித்துக் கொள்ளுங்கள் என்று கூறியுள்ளார். இது தொடர்பாக அஸ்வின் தனது எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது:-
வேறு என்ன வழி இருக்கிறது?: என்னுடைய பகுதியிலும் கூட 30 மணி நேரத்திற்கு மேலாக மின்சாரம் இல்லை. அப்படியென்றால் மற்ற இடங்களில் என்ன நிலை என்பதை யூகித்துக் கொள்ளுங்கள். நமக்கு வேறு என்ன வழி இருக்கிறது என்பது தெரியவில்லை. இவ்வாறு அஸ்வின் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
முன்னதாக மின்சாரத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு வெள்ளம் வடிந்த பகுதிகளில் மின் வினியோகம் வழங்கப்பட்டுள்ளதாகவும், வெள்ளம் சூழ்ந்திருக்கும் பகுதிகளில் மக்களின் பாதுகாப்பு கருதியே மின் வினியோகம் நிறுத்தி வைக்கப்படுள்ளது என்றும் தெரிவித்து இருந்தார். கூடிய விரைவில் மின் வினியோகம் வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்து இருந்தார்.












Click it and Unblock the Notifications