வெளுத்து வாங்கிவரும் கனமழை.. நெல்லை மக்களுக்கு அவசர உதவி எண் அறிவிப்பு.. நோட் பண்ணுங்க மக்களே!
நெல்லை: நெல்லை மாவட்டத்திற்கு இன்று மிக கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டிருப்பதால், மக்கள் எச்சரிக்கையுடன் இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளதோடு, அவசர உதவி எண்களும் அறிவிக்கப்பட்டுள்ளன. ஏதேனும் அவசர உதவி தேவைப்பட்டால், 0462-2501070 மற்றும் 1077 என்ற எண்களில் தொடர்புகொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தென்கிழக்கு அரபிக் கடலில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, திருநெல்வேலி, ராமநாதபுரம், தஞ்சாவூர் உள்ளிட்ட 10 மாவட்டங்களுக்கு திங்கள்கிழமை பலத்த மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் ஏற்கெனவே எச்சரிக்கை விடுத்திருந்தது.

இந்த நிலையில், தமிழத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள இடங்களில் இன்று மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக ஆரஞ்சு எச்சரிக்கையை இந்திய வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது. மேலும், அடுத்த 7 நாள்களுக்கு தமிழ்நாடு, புதுச்சேரி பகுதிகளில் மிதமான மழை தொடரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மலாக்கா ஜலசந்தி மற்றும் அதையொட்டிய தெற்கு அந்தமான் கடலில் சனிக்கிழமை நிலவிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி, நேற்று ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 23) காலை ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக வலுப்பெற்று, அதே பகுதியில் நிலவுகிறது. இது மேற்கு- வடமேற்கு திசையில் நகர்ந்து, இன்று திங்கள்கிழமை தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதையொட்டிய தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில், காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும்.
இது, மேலும் அதே திசையில் நகர்ந்து அதற்கடுத்த 48 மணி நேரத்தில், புதன்கிழமை (நவம்பர் 26) தென்கிழக்கு வங்கக் கடல் பகுதிகளில் 'சென்யார்' புயலாக உருவாகக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நெல்லை மாவட்டத்திற்கு இன்று மிக கனமழைக்கான எச்சரிக்கையை வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது. இதையடுத்து, மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும், தேவையில்லாமல் வெளியில் வர வேண்டாம் என்று நெல்லை மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், ஏதேனும் அவசர உதவி தேவைப்பட்டால், மாவட்ட கட்டுப்பாட்டு அறையின் தொடர்பு எண் 0462-250 1070 மற்றும் அவசர உதவி கட்டுப்பாட்டு அறையின் 1077 என்ற எண்களில் தொடர்புகொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கனமழை எதிரொலியாகவும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகவும், திருநெல்வேலி நகரம் மேலப்பாளையம் செல்லும் வழியில் உள்ள தாமிரபரணி நத்தம் பாலம் அடைக்கப்பட்டு, போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது என்றும், அந்த வழியாக யாரும் வர வேண்டாம் என்றும் அறிவிப்பு வெளியாகி உள்ளது.
இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை சீசனில், நெல்லை மாவட்டத்தின் நாலுமுக்கு பகுதி 2057 மி.மீ மழையைப் பதிவு செய்துள்ளது. இதை விட இன்னும் அதிக மழைப்பொழிவை ஊத்து பகுதி பதிவு செய்துள்ளது. ஊத்து பகுதி 2075 மி.மீ மழையைப் பதிவு செய்துள்ளது. இந்தியாவின் மிகவும் அதிக மழை பெய்யும் இடங்களில் ஒன்றாக நெல்லை மாவட்டத்தின் ஒரு சில பகுதிகள் பதிவாகியுள்ளதாக தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications