வேலூர்+5 மாவட்டங்களுக்கு குட் நியூஸ் சொன்ன வானிலை மையம்! பிச்சிக்கிட்டு கொட்டப்போகும் மழை
சென்னை: தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கோடை மழை தீவிரமடைந்து வருகிறது. அந்த வகையில் இன்றும் 6 மாவட்டங்களில் மழை பிச்சிக்கிட்டு கொட்டும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.
குறிப்பாக வெயில் அதிகமாக இருக்கும் வேலூர், ராணிப்பேட்டையில் மழை பெய்யும் என்று கூறியிருப்பது, அம்மாவட்ட மக்களிடையே சற்று நிம்மதியை ஏற்படுத்தியிருக்கிறது.

இது குறித்து வெளியிடப்பட்டிருக்கும் அறிவிப்பில், "அடுத்த ஏழு தினங்களுக்கான வானிலை முன்னறிவிப்பு மற்றும் எச்சரிக்கையை பொறுத்தவரை, தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி நிலவுகிறது. தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. தென்மேற்கு பருவமழை அந்தமான் கடல் மற்றும் தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் வருகின்ற 13-ஆம் தேதி வாக்கில் துவங்கக்கூடும்.
எனவே, இன்று தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய (மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில்) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். குறிப்பாக
வேலூர்
ராணிபேட்டை
திருவண்ணாமலை
கள்ளக்குறிச்சி
அரியலூர் மற்றும் பெரம்பலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
நாளை முதல் மே.12ம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
மே.13ம் தேதி தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மே. 14 மற்றும் 15ம் தேதிகளில் தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
அதிகபட்ச வெப்பநிலை பற்றிய முன்னறிவிப்பு:
அதிகபட்ச வெப்பநிலை மாறுதலின் போக்கை பொறுத்தவரை இன்று தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலையில் பொதுவாக பெரிய மாற்றத்திற்கான வாய்ப்பு குறைவு. நாளை தொடங்கி மே.12ம் தேதி வரை, தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2 செல்சியஸ் வரை படிப்படியாக உயரக்கூடும்.
இயல்பு நிலையிலிருந்து அதிகபட்ச வெப்ப அளவின் வேறுபாடு:
இன்று தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2-3" செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும்.
மே.10 முதல் 12 வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2-3" செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:
இன்று (09-05-2025) வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 37° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27-28* செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும். நாளை (10-05-2025): வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 37-38 செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27-28° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
மீனவர்களுக்கான எச்சரிக்கை:
தமிழக கடலோரப் பகுதிகளை பொறுத்தவரை இன்று தொடங்கி மே.11ம் தேதி வரை எச்சரிக்கை ஏதுமில்லை. மே. 12 மற்றும் 13ம் தேதிகளில் தென் தமிழக கடலோர பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 45 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
எனவே மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள். அதேபோல வங்கக்கடல் பகுதிகள் மற்றும் அரபிக்கடல் பகுதிகளில் இன்று தொடங்கி மே.13 வரை எச்சரிக்கை ஏதுமில்லை" என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.












Click it and Unblock the Notifications