வெளுத்து வாங்கும் மழை.. வெள்ளக்காடாக மாறிய இமாச்சல்.. ரெட் அலார்ட் கொடுத்த வானிலை மையம்
சிம்லா: இமாச்சல பிரதேசத்தில் கடந்த 5 நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் மாநிலத்தின் பல இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் மாநிலத்தில் 7 மாவட்டங்களுக்கு அடுத்த 24 மணி நேரத்திற்கு ரெட் அலார்ட் விடுத்து வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென்மேற்கு பருவமழை தொடங்கியதில் இருந்து வட மாநிலங்களில் மழை பெய்து வருகிறது. அதிலும் கடந்த 5 நாட்களாக வட மற்றும் வட மேற்கு மாநிலங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. டெல்லியில் கூட வரலாற்றில் இல்லாத அளவாக நேற்று கனமழை பெய்தது. இதேபோல் இமாச்சல பிரதேசத்திலும் கடந்த ஒரு வாரமாக பரவலாக மழை பெய்து வருகிறது.

மலைப்பிரதேசங்கள் நிறைந்த இயற்கை எழில் கொஞ்சும் அழகிய மாநிலமான இமாச்சல பிரதேசம் மழையால் பெரும் பாதிப்பை எதிர்கொண்டுள்ளது. இமாசல பிரதேசத்தில் கடந்த 5 நாட்களாகவே பெய்து வரும் கனமழையால் அங்கு பல இடங்களில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. நீர்நிலைகளில் நீர்மட்டம் உயர்ந்துள்ள நிலையில், ஆறுகளில் வெள்ளம் கரை புரண்டு ஓடுகிறது. ஒருசில இடங்களில் பாலங்களை மூழ்கடித்த படி வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.
7 மாவட்டங்களுக்கு ரெட் அலார்ட்: இதன் காரணமாக மண்டி - குலு தேசிய நெடுஞ்சாலை உள்ளிட்ட பல சாலைகளில் போக்குவரத்துக்கு தடை செய்யப்பட்டு மூடப்பட்டுள்ளது. பல இடங்களில் மின் வினியோகமும் நிறுத்தப்பட்டுள்ளது. இமாச்சல பிரதேசத்தில் கனமழை பெய்து வருவதால் சில இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாகவும் சாலைப்போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. காங்க்ரா, மண்டி, சோலன் ஆகிய நகரங்களில் முக்கிய சாலைகள் வெள்ளக்காடாக மாறின.
இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இமாச்சல பிரதேசத்தின் மண்டி மாவட்டத்தின் ஆட் பகுதியிலுள்ள கோடிநாலாவில் பிரசார் ஏரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதில் ஏற்பட்ட வெள்ளத்தில் பலர் சிக்கிக்கொண்டனர். அவர்களை மீட்கும் பணி நடந்து வருகிறது. இதேபோல் ஆபத்தான இடங்களில் தங்கியிருப்பவர்களை பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றும் பணிகளும் முழு வீச்சில் நடந்து வருவதாக அங்குள்ள அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த நிலையில், இமாச்சல பிரதேசத்தில் 7 மாவட்டங்களுக்கு ரெட் அலார்ட் விடுத்து இந்திய வானிலை ஆய்வு மையம் அறிக்கை வெளியிட்டுள்ளது. மக்கள் தேவையின்றி வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. பியாஸ் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இயல்பு வாழ்க்கை பாதிப்பு: ஆற்றில் அபாய அளவை தாண்டி வெள்ளம் ஓடுவதால் கரையோர இடங்களில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பியாஸ் ஆற்றில் கார் ஒன்று அடித்து செல்லும் நிலையில் இருக்கும் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. கனமழை அதனால் ஏற்பட்ட நிலச்சரிவுகளால் பல இடங்களில் போக்குவரத்தும் துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால், சுற்றுலா பயணிகள் பலரும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர்.
ரயில் தண்டவாளங்களில் மரங்கள் விழுந்ததால் கல்கா - ஷிம்லா இடையேயான ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. கனமழையால் உத்தரகாண்ட், ஜம்மு காஷ்மீர், கிழக்கு ராஜஸ்தான், ஹரியானா, சண்டிகார், பஞ்சாப், மற்றும் கர்நாடகாவின் சில பகுதிகளும் கடுமையாக பாதிக்கப்பட்டு இருக்கின்றன. இந்த பகுதிகளில் நிலச்சரிவு மற்றும் வெள்ளத்தால் சாலை போக்குவரத்து முடங்கியுள்ளது. இதனால், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications