சென்னையில் இறங்கிய “பூதம்”.. தமிழ்நாட்டிலேயே மெரினாவில் அதிக மழை! லிஸ்டிலேயே இல்லாத டுவிஸ்ட்
சென்னை: தமிழ்நாட்டிலே சென்னையில் அதிகபட்சமாக 190 மிமீ என்ற அளவில் மிக கனமழை பதிவாகி இருக்கிறது.
தமிழ்நாடு முழுவதும் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து உள்ளது. சென்னை உட்பட தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் நல்ல மழை பெய்து வருகிறது. நேற்று சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பில், "தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் இன்று காலை ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இது மேற்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து மத்தியமேற்கு வங்கக் கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக 15 ஆம் தேதி வாக்கில் நிலவக்கூடும்.

அதன் பிறகு வடமேற்கு திசையில் நகர்ந்து ஆந்திர கடலோர பகுதிகளை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் 16 ஆம் தேதி வாக்கில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று வடக்கு-வடகிழக்கு திசையில் திரும்பி ஒரிசா கடலோர பகுதிகளை ஒட்டிய வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் 17ஆம் தேதி வாக்கில் நிலவக்கூடும். தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, நேற்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
நாகப்பட்டினம், மயிலாடுதுறை, திருவாரூர், தஞ்சாவூர், கடலூர், விழுப்புரம் மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், அரியலூர், திருச்சிராப்பள்ளி மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது. டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அதி கனமழை பெய்யவும் வாய்ப்புள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு: அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரில் பொதுவாக மிதமான மழை பெய்யக்கூடும், அவ்வப்போது ஒரு சில இடங்களில் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 26-27 செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 23 டிகிரி செல்சியஸாகவும் இருக்கக்கூடும். அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் மிதமான பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 29-30 செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 24-25 டிகிரி செல்சியஸாகவும் இருக்கக்கூடும்." என வானிலை மையம் எச்சரித்து இருந்தது.
இதில் ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்படாத சென்னையிலேயே தமிழ்நாட்டில் அதிகளவிலான மழை பதிவாகி உள்ளது. அதிகபட்சமாக சென்னை மெரினாவில் 190.3 மிமீ மழையும், அம்பத்தூரில் 95 மிமீ மழையும், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 94 மிமீ மழையும், கோடம்பாக்கத்தில் 84.9 மிமீ மழையும், கத்திவாக்கத்தில் 84.3 மிமீ மழையும், சோழிங்கநல்லூரில் 82.7 மிமீ மழையும் பதிவாகி இருக்கிறது.


Click it and Unblock the Notifications
