போற போக்க பார்த்தா.. சென்னையில் அவ்வளவு எளிதாக மழை நிற்காது போலயே.. இதுல புதுசா இதுவேறயா?
சென்னை: வடகிழக்கு பருவமழை தமிழ்நாட்டில் மீண்டும் தீவிரம் அடையத் தொடங்கி உள்ளதால் சென்னை உள்பட பல்வேறு பகுதிகளில் இன்று காலை முதல் விட்டு விட்டு கனமழை பெய்து வருகிறது. நள்ளிரவிலும் நல்ல மழை பெய்தது. தொடர் மழை காரணமாக சென்னையில் பொதுமக்கள் அவதி அடைந்தனர்.
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பில், வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ள நிலையில் தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனையொட்டிய பகுதிகளில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு உருவானது. இது மேற்கு திசையில் நகர்ந்து, தெற்கு அந்தமான் கடல் பகுதியில் நிலவி வந்த நிலையில், தொடர்ந்து மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, தென் கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நாளை தாழ்வுப்பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும் .

2 நாட்களில் வடமேற்கு திசையில் நகரத் தொடங்கி, தென்மேற்கு மற்றும் அதனையொட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் புயலாக வலுவடையும் . இதன் காரணமாகவும், தென் இலங்கை மற்றும் அதனையொட்டிய பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாகவும் தமிழ்நாட்டில் இன்று (புதன்கிழமை) முதல் அடுத்த மாதம் (டிசம்பர்) 2-ந்தேதி வரை 4 நாட்களுக்கு தமிழ்நாட்டில் பரவலாக மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
அதேபோல், இன்று காஞ்சீபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடி மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களிலும், நாளை (வியாழக்கிழமை) காஞ்சீபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, தூத்துக்குடி மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
நாளை மறுதினம் (வெள்ளிக்கிழமை) புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, செங்கல்பட்டு, காஞ்சீபுரம், விழுப்புரம், கடலூர் மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக் கூடும். சென்னையை பொறுத்தவரையில் இன்று வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், நகரின் சில இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
அதன்படியே சென்னை உள்பட பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. சென்னையில் நள்ளிரவில் கனமழை பெய்த நிலையில், காலையிலும் விட்டு விட்டு மிதமான மழை பெய்து வருகிறது. இந்த மழை காரணமாக சென்னையின் முக்கிய சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. வாகனங்கள் ஊர்ந்தபடியே சாலைகளில் சென்றனர். மழை நீர் சில இடங்களில் தேங்கியதால், பள்ளங்கள் தெரியாமல வாகன ஓட்டிகள் வழுக்கி விழும் சம்பவங்களும் நடந்தன.
இதனிடையே சென்னையில் தாம்பரம் முதல் ஆவடி வரை சென்னை முழுவதும் அடுத்த ஒரு மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். சென்னையில் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது.












Click it and Unblock the Notifications