இனி தான் மழை வெளுக்க போகுது.. நாளை உருவாகிறது காற்றழுத்த தாழ்வு.. இந்த மாவட்டங்கள் தான் ஹாட் ஸ்பாட்
சென்னை: மியான்மர் கடலோரப் பகுதியில் நிலவி வந்த காற்று சுழற்சி வலுவிழந்துள்ளது எனவும், நாளை தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக இருப்பதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் நாளை இரவில் இருந்து நல்ல மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை தீவிரம் அடைய தொடங்கியுள்ளது. வடகிழக்கு பருவமழை கடந்த மாதம் தொடங்கிய நிலையில், கடந்த சில வாரங்களாகவே தமிழகம் முழுவதும் நல்ல மழை வெளுத்து வாங்குகிறது. வங்க கடலில் கடந்த 6 ஆம் தேதி காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக சாதகமான சூழல் நிலவியது.

ஆனால், மியான்மர் கடலோரப் பகுதியில் நிலவிய காற்று சுழற்சி காரணமாக, வடகிழக்கு காற்றின் வருகை தடைப்பட்டு, தாழ்வுப்பகுதி உருவாவது தாமதம் ஆனது. இந்த நிலையில், மியான்மர் கடலோரப் பகுதியில் நிலவி வந்த காற்று சுழற்சி வலுவிழந்துள்ளது எனவும், நாளை தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக இருப்பதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைய வாய்ப்பு இருப்பதாக சொல்லப்படுகிறது. அடுத்த 24 மணி நேரத்தில் உருவாக இருக்கும் குறைந்த குற்றழுத்த தாழ்வு பகுதி, வங்க கடலில் மேற்கு நோக்கி நகர்ந்து தமிழ்நாடு, இலங்கை கடலோர பகுதிகளை நோக்கி நகரும் என கணிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் நாளை இரவில் இருந்து நல்ல மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
வரும் 15 ஆம் தேதி வரை இந்த மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக வட கடலோர மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்களில் கன முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. தெற்கு மற்றும் உள் மாவட்டங்களில் மிதமானது முதல் கனமழை வரையிலும் பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் இன்று ஓரிரு இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் லெசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சை மற்றும் புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications
