உருவானது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி.. வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஆட்டம்.. வானிலை மையம் தகவல்!
சென்னை: வடமேற்கு வங்கக் கடல் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய ஒடிசா மற்றும் மேற்கு வங்கக் கடற்கரை பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவானதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு - வடமேற்கு திசையில் வடக்கு ஒடிசா அதனை ஒட்டிய மேற்கு வங்கம், ஜார்கண்ட், சட்டீஸ்கர் வழியே நகரக் கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வடமேற்கு வங்கக்கடல் மற்றும அதனை ஒட்டிய வடக்கு ஒடிசா- மேற்கு வங்கம் கடலோர பகுதியில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இந்த வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக 12 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்திருந்தது.
இந்நிலையில், குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நாட்டின் வடமேற்கு மத்திய பகுதிகள், மத்திய பகுதிகள், கிழக்கு பகுதிகள் மற்றும் வடகிழக்கு பகுதிகளில் அடுத்த 7 நாட்களுக்கு கன மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும் தமிழ்நாட்டில் இன்று முதல் 3 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும், இன்று (ஜூன் 25) கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் என வானிலை மையம் ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்துள்ளது. அத்துடன் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று முதல் 3 நாட்களுக்கு மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த தரைக்காற்று வீசக்கூடும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால், அங்கு தொடர் மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் வயநாடு, பாலக்காடு, மலப்புரம், இடுக்கி ஆகிய நான்கு மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. கொல்லம், திருவனந்தபுரம் தவிர மற்ற அனைத்து மாவட்டங்களுக்கும் மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.












Click it and Unblock the Notifications