சூழ தொடங்கிய மேகம்.. வங்கக்கடலில் திடீர் மாற்றம்! இந்திய வானிலை மையம் வார்னிங்
சென்னை: இந்தியாவில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. மேற்கு வங்கத்தையொட்டி உள்ள இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, மெல்ல நகர்ந்து ஜார்க்கண்ட் நோக்கி வரும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
பருவமழை காலங்களில் புயல்கள் உருவாகி மழைப்பொழிவை கொடுக்கும். அந்த வகையில், தற்போது வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. அதாவது கடல் பரப்பில் வெப்பம் அதிகரிக்கும்போது, நீர் ஆவியாகி மேகமாக மாறுகிறது. ஒரு குறிப்பிட்ட இடத்தில் இது தொடர்ந்து நடக்கும் பட்சத்தில் அந்த இடத்தில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது. இது பின்னர் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறுகிறது.

கடலில் வெப்பம் அதிகம் உள்ள பகுதிகளில் அதிக நீராவி இருக்கும், எனவே இந்த பகுதியை நோக்கி காற்றழுத்த தாழ்வு மண்டலம் பயணித்து மேகங்களை அதிகமாக சேர்த்து புயலாக உருவாகிறது.
நடப்பாண்டில் தற்போது வரை எந்த புயலும் தமிழகத்தை தாக்கவில்லை. இன்று வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதியும் கூட, ஜார்க்கண்ட் நோக்கி நகரும் என்று சொல்லப்பட்டிருக்கிறது. ஒருவேளை இது புயலாக உருவாகும் பட்சத்தில் தமிழகத்தில் பருவமழை குறைவதற்கான வாய்ப்புகள் இருக்கிறது.
அதாவது, புயல் சுற்று பகுதியில் உள்ள ஈரப்பதத்தை இழுத்துக்கொள்வதால், அது கடந்து செல்லும் இடத்தில் மட்டுமே மழை இருக்கும். அந்த பகுதியை சுற்றியுள்ள பல நூறு கி.மீ தொலைவுக்கு வானிலை வறட்சியாக இருக்கும் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
தற்போதைய நிலவரப்படி தமிழ்நாட்டிற்கு 94% கூடுதலாக மழை பொழிவை தென்மேற்கு பருவமழை கொடுத்திருக்கிறது. இந்த காலங்களில் ஒட்டுமொத்தமாக சராசரியாக 156.2 மி.மீதான் மழை பொழிந்திருக்க வேண்டும். ஆனால் 191.1 மி.மீ மழை பெய்திருக்கிறது. அதிகபட்சமாக நீலகிரியில் 1086.9 மி.மீ, கோவையில் 791.8 மி.மீ என மழை பெய்திருக்கிறது. குறைந்தபட்சமாக தூத்துக்குடியில் 40.9 மி.மீ, நாகப்பட்டினத்தில் 78.1 மி.மீ என மழை பதிவாகியுள்ளது. நாகையில் பெய்த மழை இயல்பை விட -27 சதவிகிதம் குறைவாகும்.
இன்று தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்ட மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல் மற்றும் கரூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications