மழை விட்டாலும்.. தென் மாவட்டங்களுக்கு காத்திருக்கும் அடுத்த அச்சுறுத்தல்! முன்கூட்டிய அலர்ட்டான அரசு
சென்னை: கனமழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தென் மாவட்டங்களுக்கு 190 நடமாடும் மருத்துவ வாகனங்கள் அனுப்பி வைக்கப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவி வரும் வளி மண்டல சுழற்சி காரணமாக தென் தமிழகத்தில் கடந்த 3 நாட்களாக கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் தென்காசி ஆகிய மாவட்டங்களில் கடந்த 2 நாட்களில் அதி கனமழை கொட்டித் தீர்த்தது. இதனால் அந்த மாவட்டங்கள் வெள்ளத்தில் தத்தளித்து வருகின்றன. வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததால் ஏராளமான மக்கள் முகாம்களில் தஞ்சம் புகுந்து இருக்கிறார்கள்.

இன்று முதல் அடுத்த இரண்டு நாட்களுக்கு மிக கனமழை பெய்யும் என்று வானிலை முன்னறிவிப்பின் எதிரொலியாக தென் மாவட்டங்களில் கனமழை பெய்து கொண்டிருக்கிறது. இந்த மழையால் கடுமையாக பாதிக்கப்பட்டு, வீட்டில் இருக்க முடியாமல் தவிக்கும் குடும்பத்தார்களுக்கு, அவர்கள் இருக்கும் இடங்களுக்கு அருகில் உள்ள இடங்களில் தங்க வைக்க காயல்பட்டினம் முஸ்லிம் ஐக்கிய பேரவை ஏற்பாடு செய்துள்ளது.
கனமழையில் பாதிக்கப்பட்ட திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மற்றும் தென்காசி ஆகிய 4 மாவட்டங்களுக்கு 190 நடமாடும் மருத்துவ வாகனங்கள் அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது என மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்து உள்ளார்.
இதுகுறித்து அவர் தெரிவிக்கையில், "முதலமைச்சர் முக ஸ்டாலின் உத்திரவின் அடிப்படையில் 17/12/2023 மற்றும் 18/12/2023 ஆகிய இருதினங்களில் திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மற்றும் தென்காசி ஆகிய 4 மாவட்டங்களில் பெய்த கனமழையால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு சிகிச்சை வழங்க நடமாடும் மருத்துவ வாகனங்கள் அனுப்பப்பட்டு உள்ளது.

ஒரு மருத்துவர், ஒரு செவிலியர் அல்லது மருந்தாளுநர், ஒரு சுகாதார ஆய்வாளர் மற்றும் ஒரு வாகன ஓட்டுநர் கொண்ட குழு இந்த நடமாடும் மருத்துவ வாகனங்களில் இருக்கும். இக்குழுக்கள் வெள்ளத்திற்கு பிறகு வரும் தொற்று நோய் தடுப்பு பணிகளில் ஈடுபடும். ஒரு நடமாடும் மருத்துவ வாகனம் நாள் ஒன்றுக்கு 4 முதல் 5 இடங்களில் முகாம் அமைத்து வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட பொது மக்களுக்கு தேவையான சிகிச்சை மற்றும் தொற்று நோய் தடுப்பு பணிகளில் ஈடுபடும்.
மேலும் வருகிற 10 நாட்களுக்கு நடமாடும் மருத்துவக்குழு வாகனம் பொது மக்களின் தேவைக்கேற்ப அந்த மாவட்டங்களில் முகாமிட்டு செயல்படும்." என்றார்.












Click it and Unblock the Notifications