தத்தளிக்கும் மும்பை.. கொட்டி தீர்க்கும் அதிதீவிர கனமழை! பரிதவிக்கும் பொதுமக்கள்- இன்றும் ரெட் அலர்ட்
மும்பை: மகாராஷ்டிராவில் மும்பை உள்ளிட்ட பல இடங்களில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. இதனால் பல இடங்களில் தண்ணீர் தேங்கி பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை மொத்தமாக முடங்கிப் போய் இருக்கிறது. குறிப்பாக புனேவில் கனமழை காரணமாகத் தேங்கி இருந்த தண்ணீரில் மின்சாரம் தாக்கி 3 பேர் உயிரிழந்துள்ளனர். மக்களை மீட்கும் பணிகளில் இப்போது தீயணைப்புத் துறையினர் உடன் தேசிய பேரிடர் மீட்பு படையும் ஈடுபட்டுள்ளது.
பருவநிலை மாற்றம் காரணமாக இப்போது உலகில் பல இடங்களிலும் அதீத வெப்பம் அல்லது அதீத மழை என்று வானிலை மோசமாகிக் கொண்டே இருக்கிறது. நம்ம சென்னையில் கூட கடந்தாண்டு கொட்டி தீர்த்த மழையை அவ்வளவு சீக்கிரம் யாரும் மறந்துவிட மாட்டார்கள்.

கொட்டும் கனமழை: இதற்கிடையே இப்போது மகாராஷ்டிரா தலைநகர் மும்பையில் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. இதனால் அங்கே பஸ், ரயில் உள்ளிட்ட பொது போக்குவரத்து மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து மழை பெய்து வருவதால் மும்பையில் உள்ள அந்தேரி சுரங்கப்பாதையில் தண்ணீர் தேங்கியுள்ளது. இதனால் பாதுகாப்பு கருதி அந்த பாதையில் போக்குவரத்திற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
மும்பை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் பெய்து வரும் கனமழையால் நகரின் பல தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியுள்ளது. இதனால் சாலைகளில் நீர் தேங்கி இருப்பதால் மும்பை மக்கள் பெரும் சிரமத்தை எதிர்கொண்டுள்ளனர். இன்றைய தினமும் மும்பை மற்றும் புறநகர் பகுதிகளில் மழை பெய்யும் என்பதால் மக்கள் எச்சரிக்கையாக இருக்கும்படி மும்பை மாநகராட்சி கேட்டுக் கொண்டுள்ளது. மேலும், ஓரிரு இடங்களில் மிகக் கனமழை மற்றும் மணிக்கு 50-60 கிமீ வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால் மக்கள் ஜாக்கிரதையாக இருக்கும்படி கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
நிரம்பும் ஏரிகள்: மும்பை நகருக்குத் தண்ணீர் வழங்கும் 7 ஏரிகளில் ஒன்றான விஹார் ஏரி, இன்று அதிகாலை 3.50 மணியளவில் நிரம்பியது. விஹார் ஏரி தனது முழு கொள்ளளவை எட்டிய நிலையில், அங்கிருந்து நீர் திறக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மும்பையில் பல பகுதிகளில் இன்னுமே கூட கனமழை பெய்து வருவதால் எப்போது இயல்பு நிலை திரும்பும் என்றே தெரியாத சூழல் நிலவுகிறது.
புனே வெள்ளம்: அதேபோல மகாராஷ்டிராவின் மற்றொரு முக்கிய நகரமான புனேவிலும் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. கனமழை காரணமாக புனே மற்றும் கோலாப்பூரில் பல பகுதிகளில் தண்ணீர் தேங்கி இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது. பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ள நிலையில், புனேவின் பிம்ப்ரி-சின்ச்வாட்டில் பல குடியிருப்பு வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.
புனேவில் கனமழை காரணமாகத் தேங்கி இருந்த தண்ணீரில் மின்சாரம் தாக்கி 3 பேர் உயிரிழந்துள்ளனர். தீயணைப்புத் துறையினர் படகுகள் மூலம் மக்களை மீட்கும் பணிகள் தொடங்கியுள்ளன. பாதிப்புகள் மிக மோசமாக இருப்பதால் தேசிய பேரிடர் மீட்புப் படையும் இந்த மீட்புப் பணிகளில் இணைந்துள்ளன. பல இடங்களில் இடுப்பு அளவுக்குத் தண்ணீர் தேங்கி இருக்கும் நிலையில், கனமழையால் நீர்மட்டம் உயர்ந்ததையடுத்து முத்தா ஆற்றின் குறுக்கே இருந்த பாலம் நீரில் மூழ்கி இருக்கிறது.
இன்றும் ரெட் அலர்ட்: இந்த இரு நகரங்களைத் தவிரவும் மும்பையில் பல்வேறு இடங்களில் கேப் விடாமல் மழை கொட்டி தீர்த்து வருகிறது. இதற்கிடையே மகாராஷ்டிராவில் இன்று அதீத கனமழை பெய்யும் என்பதால் ரெட் அலர்ட் எச்சரிக்கையை இந்திய வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது.












Click it and Unblock the Notifications