Rain Alert: அடுத்த 2 மணி நேரம் மழை விடாது.. செங்கல்பட்டு டூ தென்காசி வரை 18 மாவட்டங்களில் வெளுக்க போகுது
சென்னை: தமிழகத்தில் அடுத்த 2 மணி நேரத்திற்கு 18 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மழை விடாமல் கொட்டும் என வானிலை மையம் கூறியுள்ளது. சேலம், தர்மபுரி, திருப்பத்தூர், வேலூர், திருவண்ணாமலை, தேனி, தென்காசி, புதுச்சேரி உள்பட தமிழகம் முழுக்க 18 மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கும் என வானிலை மையம் கூறியுள்ளது.
தமிழகத்தில் இன்று பல்வேறு மாவட்டங்களில் வெயில் கொளுத்தி எடுத்தது. எனினும் ஒரு சில மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்தது. குறிப்பாக தேனி மாவட்டத்தில் பெரியகுளம், திண்டுக்கல் மாவட்டத்தில் கொடைக்கானல், நீலகிரி மாவட்டத்தில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்தது.

அடுத்த 2 மணி நேரம் மழை விடாது
இந்த சூழலில் தான் அடுத்த 2 மணி நேரத்திற்கு தமிழகம் முழுக்க மொத்தம் 18 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மழை வெளுத்து எடுக்கும் என வானிலை மையம் கூறியுள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-
தமிழகத்தில் இன்று இரவு 7 மணி வரை சேலம், தர்மபுரி, திருப்பத்தூர், வேலூர், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், அரியலூர், பெரம்பலூர், நீலகிரி, கோவை, திண்டுக்கல், மதுரை, தேனி மற்றும் தென்காசி ஆகிய 18 மாவட்டங்கள் மற்றும் புதுவையில் லேசான இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
நாளை எங்கெல்லாம் மழை பெய்யும்
முன்னதாக வானிலை மையம் வெளியிட்டிருந்த அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:
இன்று 21-09-2025: தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நாளை முதல் 24ஆம் தேதி வரை வடதமிழகத்தில் ஒருசில இடங்களிலும், தென்தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
வரும் 25ஆம் தேதி முதல் 26ஆம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னையில் இரு நாட்களுக்கு எப்படி
சென்னையில் இன்று ஞாயிற்றுக்கிழமை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 32-33 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26-27 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
சென்னையில் நாளை திங்கள் கிழமை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான/மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 32-33° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
தமிழக கடலோரப்பகுதிகள்
இன்று முதல் 23ஆம் தேதி வரை தென் தமிழக கடலோரப்பகுதிகள், வடதமிழக கடலோரப்பகுதிகளுக்கு அப்பால் உள்ள தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோமீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
24 மற்றும் 25ஆம் தேதிகளில் தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்திலும் இடையிடையே 50 கிலோமீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications