தென்காசி, நெல்லை "ஹாட்ஸ்பாட்.." தென் மாவட்டங்களில் பிச்சு உதறபோகுது மழை! தமிழ்நாடு வெதர்மேன் அலர்ட்
சென்னை: வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் வடக்கு மற்றும் தென் மாவட்டங்களுக்கு இன்று நல்ல மழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும் ராமநாதபுரம், தூத்துக்குடி, புதுக்கோட்டை, நெல்லை, தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் கடந்த சில வாரங்களாகவே பரவலாக மழை பெய்து வருகிறது. பகல் நேரத்தில் கடுமையான வெயிலும் திடீரென மாலை மற்றும் இரவு நேரங்களில் வானிலை மாறி மழையும் பெய்து வருகிறது. குறிப்பாக தலைநகர் சென்னையில் கடந்த சில தினங்களாக அவ்வப்போது மழை பெய்து வருகிறது. குறிப்பாக இரவு நேரங்களில் கனமழை பெய்தது. இதனால் வெப்பம் தணிந்தது. ஆனால் நேற்று முதல் வெயில் கடுமையாக காணப்படுகிறது.

தென் மாவட்டங்களை பொறுத்தவரை கடந்த 2 நாட்களாக அவ்வப்போது மழை பெய்து வருகிறது. நேற்று நெல்லை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் மழை பெய்தது. தென்காசி மாவட்டத்திலும் பல்வேறு இடங்களில் கனமழை கொட்டியது. தூத்துக்குடி மாவட்டத்தில் ஒருசில இடங்களில் மழை பெய்தது. இன்று காலையில் தென் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் பகல் நேரத்தில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது.
தென்மேற்கு பருவமழையும் விலகிவிட்டதால் வடகிழக்கு பருவமழை எப்போது தொடங்கும் என்று எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் தான் இன்று தென் மற்றும் வட மேற்கு மாவட்டங்களில் நல்ல மழைக்கு வாய்ப்புள்ளதாக தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தனது எக்ஸ் தள பதிவில் தமிழ்நாடு வெதர்மேன் கூறியிருப்பதாவது:-
வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் வடக்கு மற்றும் தென் மாவட்டங்களுக்கு இன்று நல்ல மழை பெய்ய வாய்ப்புள்ளது. ராமநாதபுரம், தூத்துக்குடி, புதுக்கோட்டை, நெல்லை, தென்காசி, குமரி, மதுரை, சிவகங்கை, நாகை, திண்டுக்கல், தேனி ஆகிய மாவட்டங்களும், கொங்கு பகுதிகளுக்கும் இன்று நல்ல மழை பெய்வதற்கான ஹாட்ஸ்பாட் இடங்களாக உள்ளன. இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.
முன்னதாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், உள் தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால் வரும் செப். 29 ஆம் தேதி தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும்.
ஈரோடு, நீலகிரி, கோயம்புத்தூர் மாவட்ட மலைப்பகுதிகள், திருப்பூர், திண்டுக்கல், தேனி, மதுரை, விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி மற்றும் இராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது. அதேபோல நாளை தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும். நீலகிரி, கோயம்புத்தூர் மாவட்ட மலைப்பகுதிகள், திண்டுக்கல், தேனி, விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
வரும் 1 ஆம் தேதி முதல் 3 ஆம் தேதி வரை தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும். வரும் 4, 5 ஆம் தேதிகளில் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.












Click it and Unblock the Notifications