தென் மாவட்டங்களை சூறையாடிய வெள்ளம்.. டெல்லியில் இருந்து திரும்பிய உடனே முதல்வர் ஸ்டாலின் ஆக்சன்
சென்னை: டெல்லியில் இருந்து சென்னை திரும்பியுள்ள முதல்வர் ஸ்டாலின் எழிலகத்தில் உள்ள மாநில அவசரகால செயல்பாட்டு மையத்தில் அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்தினார். தென் மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் மீட்புப் பணிகள் குறித்து
அதிகாரிகளிடம் கேட்டறிந்துள்ளார் முதல்வர் ஸ்டாலின்.
மிக்ஜாம் புயலால் டிசம்பர் மாதம் முதல் வாரத்தில் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் பெருவெள்ளம் சூழ்ந்தது. டிசம்பர் 16முதல் 18ஆம் தேதி வரைக்கும் திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களில் பெருமழை கொட்டித்தீர்த்தது.

தொடர் கனமழையும், பெரும் சேதமும் மக்களின் இயல்பு வாழ்க்கையில் பெரும் தாக்கத்தினை ஏற்படுத்தியுள்ளது. எனவே மிக்ஜாம் புயலால் ஏற்பட்ட பாதிப்புகளை நிவர்த்தி செய்ய தேவையான நிதிகளை வழங்கிட வேண்டும் என்று ஏற்கனவே பிரதமரிடம் கடிதம் எழுதியிருந்தார் முதலமைச்சர் ஸ்டாலின்.
இந்நிலையில் முதற்கட்டமாக மத்திய அரசு தமிழகத்திற்கு வருகை தந்து குறிப்பிட்ட வெள்ள நிவாரண தொகையினையும் வழங்கியிருந்தது. மிக்ஜாம் புயல் பாதிப்போடு தென் மாவட்டங்களில் பெய்து வந்த கனமழையினை கருத்தில் கொண்டு, 'புயல் மற்றும் வெள்ள பாதிப்புகளை தேசிய பேரிடராக அறிவித்து நிவாரண பணிகளை செய்திட நிதி ஒதுக்க வேண்டும் என்று நேற்று இரவு பிரதமரை சந்தித்து மனு வழங்கியுள்ளார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.
இரு மழையாலும் ஏற்பட்ட பாதிப்புகளை கருத்தில் கொண்டு தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும் பேரிடர் நிவாரண நிதியிலிருந்து 2000 கோடி அவசர நிவாரண பணிகளுக்காக வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார் முதல்வர் ஸ்டாலின். தூத்துக்குடியில் நாளை முதல் முதல்வர் ஸ்டாலின் ஆய்வு மேற்கொள்ள உள்ளதாக அறிவிக்கப்பட்டது.
வெள்ளம் பாதித்த பகுதிகளில் இன்று மத்திய குழுவினர் ஆய்வு செய்வதன் காரணமாக, நாளைய தினம் முதல்வர் மு.க ஸ்டாலின் ஆய்வு மேற்கொள்ள இருக்கிறார். இந்த நிலையில் சென்னையில் உள்ள மாநில அவசரகால செயல்பாட்டு மையத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார்.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தென் மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் மீட்புப் பணிகள், நிவாரணப் பணிகள் குறித்து அதிகாரிகளிடம் முதலமைச்சர் கேட்டறிந்தார். தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா உள்ளிட்ட அரசு உயர் அதிகாரிகள் இந்த ஆய்வுக் கூட்டத்தில் கலந்துகொண்டு முதல்வர் ஸ்டாலினுக்கு விளக்கம் அளித்தனர்.












Click it and Unblock the Notifications