இன்னைக்கு தான் சம்பவமே இருக்கு! சுத்துப் போட்ட மேகங்கள்.. 9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!
சென்னை: தமிழகத்தில் இன்று கோவை மற்றும் நீலகிரியில் அதி கன மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. தேனி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் மிக கனமழையும், திண்டுக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி, தர்மபுரி, ஈரோடு மற்றும் சேலம் மாவட்டங்களில் கன மழை பெய்யக் கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு தொடக்கம் முதலே தமிழகத்தின் பல்வேறு பகுதிகளை கடுமையான வெயில் கொளுத்தி எடுத்தது. குறிப்பாக பிப்ரவரி மாதத்தில் வெயில் உச்சத்தை தொட்டதால் மக்கள் கடும் இன்னலுக்கு ஆளாகினர்.
மதுரை, ஈரோடு, சென்னை ஆகிய பகுதிகளை வெப்பம் 100 டிகிரிக்கு மேல் கடந்ததால் மக்கள் அசௌகரியமாக உணர்ந்தனர். வழக்கமாக ஏப்ரல், மே மாதங்களில் வெயில் அதிகமாக இருக்கும் நிலையில் இந்த ஆண்டு மழை பெய்தது. நேர்மாறாக ஜூன் மாதத்தில் மே மாதத்தை விட வெயில் அதிகமாக இருந்தது.

இந்த நிலையில் தற்போது தென்மேற்கு பருவ மழையின் தொடக்கம் காரணமாக ஆகஸ்ட் தொடக்கத்திலேயே மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் நீலகிரி உள்ளிட்ட சில மாவட்டங்களுக்கு இன்று அதி கனமழை முதல் கனமழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதே போல தேனி, தென்காசி மாவட்டங்களில் மிக கன மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
இதுதொடர்பாக வெளியாகியுள்ள அறிவிப்பில்," . தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. அதன் காரணமாகவும் தென் இந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. அதன் காரணமாகவும் இன்று தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஓரிரு இடங்களில் பலத்த தரைக்காற்று மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.
நீலகிரி மாவட்டம் மற்றும் கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் அதி கனமழையும், தேனி, தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், திண்டுக்கல், திருப்பூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, ஈரோடு மற்றும் சேலம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
நாளை தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஓரிரு இடங்களில் பலத்த தரைக்காற்று மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். நீலகிரி மாவட்டத்தின் ஓரிரு இடங்களில் கன முதல் அதி கனமழையும், கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகள், தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், திருப்பத்தூர் மற்றும் ஈரோடு மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
ரெட் அலர்ட்: ரெட் அலர்ட் எனப்படும் அதிக கனமழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டால் 24 மணி நேரத்தில் 20 சென்டிமீட்டருக்கும் அதிகமான மழை பெய்யும். இந்த கன மழை காரணமாக நிலச்சரிவு, வெள்ளம், மரங்கள் சாய்வது உள்ளிட்ட கடுமையான பாதிப்புகள் ஏற்படலாம் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டு விடுமுறை அளிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications