தீபாவளி நாளில் மழை பெய்யுமா? இன்றும் நாளையும் 19 மாவட்டங்களில் கனமழை கன்பார்ம்! வானிலை மையம் அலர்ட்
சென்னை: தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாகவே நல்ல மழை கொட்டி வருகிறது. இன்றும் நாளையும் கனமழை தொடரும் என்று வானிலை மையம் எச்சரித்துள்ள நிலையில், இரண்டு நாட்கள் 19 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அக். 30ம் தேதி தீபாவளி வரும் நிலையில், அப்போது வானிலை எப்படி இருக்கும் என்பது குறித்தும் விளக்கப்பட்டுள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் உள் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், வடதமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் மழை பெய்துள்ளது. புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவியது.

மழை: அதிகபட்சமாக கெலவரப்பள்ளி அணை (கிருஷ்ணகிரி), தக்கலை (கன்னியாகுமரி) தலா 120 மிமீ மழை பெய்துள்ளது. அதேபோல கோவில்பட்டி (தூத்துக்குடி) 110 மிமீ மழை பெய்துள்ளது. வெப்பத்தை பொறுத்தவரை அதிகபட்சமாக பரங்கிபேட்டையில் 35.0 ° செல்சியஸ் வெப்பமும் குறைந்தபட்சமாக ஈரோட்டில் 18.5 ° செல்சியஸ் வெப்பமும் பதிவாகியுள்ளது.
வானிலை மையம்: வரும் நாட்களில் நிலவும் வானிலை குறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், "நேற்று (23-10-2024) மத்தியகிழக்கு மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலைகொண்டிருந்த "டானா புயல்", வடக்கு -வடமேற்கு திசையில் நகர்ந்து, மத்திய மற்றும் அதனை ஒட்டிய வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில், இரவு 23.30 மணி அளவில் தீவிர புயலாக வலுப்பெற்றது.
மேலும் இது வடக்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று (24.10.2024) காலை 08.30 மணி அளவில், வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில், பாரதீப்பிற்கு (ஒரிசா) தென்கிழக்கே 210 கிலோமீட்டர் தொலைவிலும், தாமரா (ஒரிசா) தெற்கு- தென்கிழக்கே 240 கிலோமீட்டர் தொலைவிலும், சாகர் தீவுகளுக்கு (மேற்கு வங்காளம்) தெற்கே 310 கிலோமீட்டர் தொலைவிலும் நிலைகொண்டுள்ளது.
இது மேலும் வடக்கு- வடமேற்கு திசையில் நகர்ந்து வடக்கு ஒரிசா மற்றும் மேற்கு வங்காள கடற்கரை பகுதிகளில், பூரி - சாகர் தீவுகளுக்கு இடையே, பிதர்கனிகா மற்றும் தாமரா (ஒரிசா) அருகே மிகத்தீவிர புயலாக, 24ஆம் தேதி நள்ளிரவு - 25ஆம் தேதி காலை கரையை கடக்கக்கூடும். அச்சமயத்தில், அப்பகுதிகளில் காற்றின் வேகம் மணிக்கு 100 முதல் 110 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 120 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். மேலும், தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய லட்சத்தீவு பகுதிகளில் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.
இரண்டு நாட்கள் கனமழை: இதனால் இன்று தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், திண்டுக்கல், தேனி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், அரியலூர், கடலூர், விழுப்புரம், மயிலாடுதுறை மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
நாளைய தினம் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர், ஈரோடு, திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, புதுக்கோட்டை, திருச்சிராப்பள்ளி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, பெரம்பலூர், அரியலூர், நாமக்கல், கரூர் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
அக். 26ம் தேதி தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். வரும் அக். 27 முதல் அக். 30 வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை கிளைமேட்: சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 33-34° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26-27° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும். அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 34-35° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26-27° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
மீனவர்களுக்கான எச்சரிக்கை: தமிழக கடலோரப்பகுதிகளுக்கு வரும் அக். 28 வரை எந்தவொரு எச்சரிக்கையும் இல்லை. வங்கக்கடல் பகுதிகளில் இன்றும் நாளையும் மத்தியகிழக்கு வங்கக்கடல் பகுதிகள்: 24.10.2024 மாலை வரை சூறாவளிக்காற்று மணிக்கு 95 முதல் 105 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 115 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். அதன் பிறகு காற்றின் வேகம் படிப்படியாக குறையக்கூடும்.
மத்தியமேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் இன்று 24-10-2024 மாலை வரை சூறாவளிக்காற்று மணிக்கு 95 முதல் 105 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 115 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். அதன் பிறகு காற்றின் வேகம் படிப்படியாக குறையக்கூடும். வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் இன்று காலை முதல் சூறாவளிக்காற்று மணிக்கு 95 முதல் 105 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 115 கிலோ மீட்டர் வேகத்திலும், அதன் பிறகு படிப்படியாக உயர்ந்து, 24 - ஆம் தேதி மாலை மணிக்கு 105 முதல் 115 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 125 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
அரபிக்கடல் பகுதிகளில் இன்றும் நாளையும் கேரள கடலோரப்பகுதிகள் மற்றும் லட்சத்தீவு பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்பதால் மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள்" என்று அதில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications