நசநசக்கும் மழை.. ஜனவரியில் இன்னொரு ரவுண்டு இருக்கு! தமிழ்நாடு வெதர்மேன் அறிவிப்பு
சென்னை: இன்று அதிகாலை தொடங்கி வட தமிழக மாவட்டங்களில் பரவலாக லேசான மழை பெய்து வருகிறது. ஜனவரி வரை இப்படியான மழை எதிர்பார்க்கலாம் என தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் கூறியுள்ளார்.
அதாவது, "காற்றழுத்த தாழ்வு பகுதியானது பிசுபிசுப்பான லேசான கடைசி மழையை சென்னைக்கு கொடுத்திருக்கிறது. தொடர் மழை காரணமாக பூண்டி ஏரி 100% நிரம்பியுள்ளது. அதேநேரம் சென்னையை ஒட்டியுள்ள மற்ற ஏரிகளும் 95% நிரம்பியுள்ளன. மறுபுறம் கனமழை குறித்த அச்சம் வேண்டியதில்லை. தற்போது சென்னையை ஒட்டியுள்ள மாவட்டங்களில் பெய்து வரும் மழைக்கு காரணம் காற்றழுத்த தாழ்வு பகுதிதான்.

திருத்தணியில் 82 மி.மீ, நகிரி நீர்பிடிப்பு பகுதியில் 70 மி.மீ மழை பெய்திருக்கிறது. எனவே பூண்டி ஏரியிலிருந்து நீர் திறக்கப்பட வாய்ப்பு இருக்கிறது. மறுபுறம் செங்குன்றம் பகுதியில் உள்ள அனைத்து ஏரிகளிலும் நீர் முழு கொள்ளளவை எட்டியிருக்கிறது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் டிச.30, 31ம் தேதிகளில் லேசான மழையை எதிர்பார்க்கலாம்.
அதேபோல மற்றொரு காற்றழுத்த தாழ்வு பகுதியானது ஜனவரி தொடக்கத்தில் உருவாகும். இதனால் பெரும்பாலும் இலங்கைதான் அதிக மழையை பெறும். தமிழகத்தை பொறுத்த வரை தென் மற்றும் டெல்டா மாவட்டங்களில் மழை பெய்யலாம்.
காற்றழுத்த தாழ்வு பகுதியின் இறுதி நாளான இன்று, தூத்துக்குடி, ராமநாதபுரம், வேலூர், திண்டுக்கல், மதுரை, நெல்லை, தென்காசி, திருவண்ணாமலை, நாமக்கல் ஆகிய இடங்களில் மழை பெய்து வருகிறது. , சேலம், ஈரோடு, பெரம்பலூர், அரியலூர், திருச்சி, டெல்டா பெல்ட்கள், சிவகங்கை, புதுக்கோட்டை, நீலகிரி, கோவை மாவட்டங்களில் லேசான மழை இருக்கும்" என்று வெதர்மேன் பிரதீப் ஜான் கூறியுள்ளார்.
முன்னாக வெளியாகியிருந்த வானிலை அறிவிப்பில், "நேற்று முன்தினம் தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல், தெற்கு ஆந்திர- வடதமிழக கடலோரப்பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, நேற்று (டிச.25) காலை 8.30 மணி அளவில் மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல், தெற்கு ஆந்திர வடதமிழக கடலோரப்பகுதிகளில் நிலவுகிறது. இது, அடுத்த 24 மணி நேரத்தில், அதே பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு பகுதியாக படிப்படியாக வலுவிழக்கக்கூடும்.
எனவே நேற்று (டிச.25) வடதமிழக கடலோர மாவட்டங்களில் ஒருசில இடங்களிலும், இதர தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
டிச.26 மற்றும் டிச.27ம் தேதி தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். டிச.28 முதல் டிச.31 வரை தமிழகத்தில் ஒரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு: அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசானது / மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 26-27° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 23-24° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 26° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 23-24° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்" என்று கூறியிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications