தமிழகத்தை மையம் கொண்ட வளிமண்டல மேலடுக்கு சுழற்சி! அடித்து ஆட போகும் மழை! வெதர்மேனின் முக்கிய அப்டேட்
சென்னை: வளி மண்டல மேலடுக்கு சுழற்சி தமிழகத்தின் மீது மையம் கொள்ள இருப்பதால் இனி வரும் காலங்களில் தமிழகத்தில் அதிக மழைப் பொழிவு ஏற்பட வாய்ப்பிருப்பதாக தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழகத்தின் மீது வளிமண்டல மேலடுக்கு சுழற்சி வட்டமிட்டுக் கொண்டிருப்பதால் வரும் காலங்களில் தமிழகத்தில் மழை பதிவு அதிகமாக இருக்க வாய்ப்புள்ளது.

குன்னூரில் 170 மி.மீ. மழை பெய்துள்ளது. கோவைக்கு தண்ணீர் விநியோகம் செய்யும் பில்லூர் அணையிலும் 170 மி.மீ. மழை பெய்துள்ளது. குன்னூர் அணைக்கு வளி மண்டல மேலடுக்கு சுழற்சியால் ஈரப்பதம் இழுக்கப்படுகிறது.
எனவே வருங்காலங்களில் தமிழகம், கேரளாவில் உள்ள மலைப் பகுதிகளுக்கு பொதுமக்கள் யாரும் செல்ல வேண்டாம். கன்னியாகுமரி, திருவனந்தபுரம், கொல்லம் பகுதிகளில் கனமழை பெய்யும். வைகை- தேனியில் மழை தொடரும். மதுரையிலும் மழைக்கு பஞ்சம் இருக்காது. இன்றைய தினம் மேற்கு உள்மாவட்டங்கள், வடக்கு உள்மாவட்டங்களில் மழை பெய்யும்.
டெல்டா மாவட்டங்களிலும் மழைக்கு வாய்ப்புள்ளது. சென்னையை பொருத்தமட்டில் நமக்கு எப்போதும் காலை மழைதான். எனவே சனிக்கிழமை நள்ளிரவு முதல் நாளை காலை வரை மழை பெய்யும். இவ்வாறு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார். பெங்களூரை சுற்றி மாலை அல்லது இரவு நேரத்தில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
அதாவது 90 சதவீதம் மழை பெய்ய வாய்ப்புள்ளது என தெரிவித்துள்ளார். ஐபிஎல் போட்டி நடைபெறும் சின்னசாமி ஸ்டேடியத்தில் எந்த அளவுக்கு மழை நீர் வெளியேறும் வசதி உள்ளதோ அதுவே போட்டி நடைபெறுவதை தீர்மானிக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். கர்நாடகாவில் வரும் 5 நாட்களுக்கு கனமழைக்கும், 20, 21 தேதிகளில் மிக கனமழைக்கும் வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
பெங்களூரில் சின்னசாமி ஸ்டேடியத்தில் சிஎஸ்கே- ஆர்சிபி அணிகள் மோதுகின்றன. அங்கு மழைக்கு வாய்ப்பிருப்பதாக கணிக்கப்பட்டுள்ளதால் சென்னை பிளே ஆஃப் சுற்றுக்குள் செல்லவே அதிகம் வாய்ப்புகள் இருப்பதாக சொல்லப்படுகிறது. இதில் இன்றைய போட்டி குறித்து மீம்ஸ்களும் வைரலாகி வருகின்றன.
கோடை வெப்பத்தால் கடந்த இரு மாதங்களாக தமிழக மக்கள் அவதிப்பட்டு வந்த நிலையில் கடந்த சில தினங்களாக மழை பெய்து வருகிறது. பரவலாக பெய்து வரும் மழை வளி மண்டல கீழடுக்கு சுழற்சியால் ஏற்படுகிறது. மேலும் நாளை தென் மேற்கு பருவமழை தொடங்கும் என இந்திய வானிலை மையம் அறிவித்துள்ளது.

வரும் 21 ஆம் தேதி வரை தமிழகத்தின் சில இடங்களில் மிக கனமழை வரை பெய்யும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தென்காசி, தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டிருந்தது. அது போல் நேற்று மதியம் கோவையில் தொடங்கிய மழை இரவு வரை நிற்காமல் பெய்தது என்கிறார்கள்.
அடுத்த 4 நாட்களுக்கு 21 மாவட்டங்களுக்கு கனமழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வரும் 20 ஆம் தேதி நெல்லை, திண்டுக்கல், குமரி, தேனி, நீலகிரி, கோவை, தென்காசி ஆகிய மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டு தற்போது வாபஸ் பெறப்பட்டுள்ளது. எனினும் தென்காசியின் குற்றால அருவி, நாமக்கல் கொல்லிமலை அருவிகளில் குளிக்க மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது.












Click it and Unblock the Notifications