கடலோர மாவட்டங்களில் வெளுக்கும் கனமழை.. அரசு அறிவித்த அவசரகால உதவி எண்கள்.. நோட் பண்ணுங்க
சென்னை: வங்கக் கடலின் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி புயலாக உருவெடுத்துள்ளது. இதனால் கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில், கனமழையின் போது மக்களுக்கு உதவும் வகையில் அவசர கால உதவி எண்களை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் பூமத்திய ரேகையை ஒட்டிய, கிழக்கு இந்திய பெருங்கடல் பகுதியில் உருவான காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி, நேற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்துள்ளது. இது நேற்றைய நிலவரப்படி, நாகப்பட்டினத்தில் இருந்து தெற்கு, தென்கிழக்கில், 590 கி.மீ., தொலைவிலும், புதுச்சேரியில் இருந்து, 710 கி.மீ., தொலைவிலும், சென்னையில் இருந்து, 800 கி.மீ., தொலைவிலும் நிலை கொண்டிருந்தது.

இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், வடக்கு, வடமேற்கில் மணிக்கு, 12 கி.மீ., வேகத்தில் நகர்ந்த நிலையில், இன்று புயலாக மாறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. புயலாக மாறிய பின், தமிழக கரையை ஒட்டி நிலை கொள்ளலாம். புயல் காரணமாக, தமிழகத்தில் அடுத்த நான்கு நாட்களுக்கு, சென்னை உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் பரவலாக கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் பல்வேறு பகுதிகளிலும், புதுச்சேரியில் இன்று இடி மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. கடலுார், மயிலாடுதுறை மாவட்டங்கள், புதுச்சேரியின் காரைக்காலில் ஒரு சில இடங்களில் இன்று 20 செ.மீ.,க்கு மேல் அதிகனமழை பெய்வதற்கான, ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், அரியலுார், திருவாரூர், நாகப்பட்டினம், தஞ்சா வூர், புதுக்கோட்டை மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் இன்று, 12 முதல், 20 செ.மீ., வரை மிக கனமழை பெய்யலாம். இதற்கான, 'ஆரஞ்ச் அலர்ட்' அறிவிக்கப்பட்டுள்ளது ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், திருச்சி, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில் இன்று, 11 செமீ வரை கனமழை பெய்யலாம்.
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம் மாவட்டங்களில் மிக கனமழைக்கான, 'ஆரஞ்ச் அலர்ட்' அறிவிக்கப்பட்டுள்ளது ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, கடலுார் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை மாவட்டங்களில், நாளை மறுதினம் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், கடலோர பகுதிகளில் உள்ள பெரும்பாலான மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கனமழை எச்சரிக்கை காரணமாக பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது. மேலும், மழையால் பாதிக்கப்படும் மக்களுக்கு உதவும் வகையில் அவசர கால உதவி எண்களும் வெளியிடப்பட்டுள்ளன.
அதன்படி, மாநில அவசரகால செயல்பாட்டு மையத்தை கட்டணமில்லா தொலைபேசி எண்ணான 1070, 94458 69848 என்ற வாட்ஸ் அப் எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம். நாகப்பட்டினத்தைச் சேர்ந்த மக்கள் கட்டணமில்லா தொலைபேசி எண் 1077, 1800 233 4233, வாட்ஸ் அப் - 8438669800 என்ற எண்ணிலும், மயிலாடுதுறை மக்கள் கட்டணமில்லா தொலைபேசி எண் 1077, 04364-222588 என்ற எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம்.
அதேபோல, திருவாரூர் பகுதி மக்கள் கட்டணமில்லா தொலைபேசி எண் 1077, வாட்ஸ் அப் - 94885 47941 என்ற எண்ணிலும், கடலூர் மாவட்ட மக்கள் கட்டணமில்லா தொலைபேசி எண் 1077, வாட்ஸ் அப் 9489930520 என்ற எண்ணிலும் தொடர்பு கொண்டு உதவிகளைப் பெறலாம் என்று தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications