"கோடம்பாக்கம், அண்ணாநகர், நுங்கம்பாக்கம்!" கொட்டிய மழை! ஒரு மணி நேரத்தில் மாறிய கிளைமேட்- வெதர்மேன்
சென்னை: தலைநகர் சென்னையில் பல்வேறு பகுதிகளில் கனமழை கொட்டி வரும் நிலையில், இன்று சென்னையில் வானிலை எப்படி இருக்கும் என்பது குறித்த தகவல்களை வானிலை மையம் பகிர்ந்துள்ளது.
தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாகவே பரவலாக ஓரிரு இடங்களில் நல்ல மழை பெய்து வருகிறது. அதிலும் குறிப்பாகச் சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களில் நல்ல மழை பெய்து வருகிறது.

இதற்கிடையே சென்னையில் கடந்த 24 மணி நேரத்தில் எந்தளவுக்கு மழை பெய்துள்ளது.. வரும் நாட்களில் வானிலை எப்படி இருக்கும் என்பது குறித்த தகவல்களைத் தமிழ்நாடு வெதர்மேன் தனது ட்விட்டரில் பகிர்ந்துள்ளார்.
கனமழை: இந்தியாவில் மற்ற இடங்களில் கனமழை கொட்டி வருகிறது. ஹிமாச்சல் உள்ளிட்ட பகுதிகளில் நிலச்சரிவு ஏற்படும் அளவுக்குக் கூட மழை மிக மோசமாகப் பெய்து வருகிறது. இதனால் பல வட மாநிலங்களில் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. அதேநேரம் தென்மாநிலங்களில் அந்தளவுக்குத் தீவிரமான மழை இல்லை. குறிப்பாகக் கேரளாவில் பருவமழை இயல்பைக் காட்டிலும் குறைவாகவே பெய்துள்ளது.
தலைநகர் சென்னையில் பொதுவாக செப். மாதத்திற்குப் பிறகு தான் மழை பெய்யும் என்ற போதிலும், இப்போது ஓரிரு நாட்களாகவே நல்ல மழை பெய்து வருகிறது. சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் கடந்த சில நாட்களாகப் பல இடங்களில் பரவலாக மழை பெய்துள்ளது. இதற்கிடையே இப்போது சென்னையில் எந்தளவுக்கு மழை பெய்துள்ளது. வரும் நாட்களில் மழை எப்படி இருக்கும் என்பது குறித்த தகவல்களைத் தமிழ்நாடு வெதர்மேன் தனது ட்விட்டரில் பகிர்ந்துள்ளார்.
வெதர்மேன்: இது தொடர்பாகத் தமிழ்நாடு வெதர்மேன் கூறுகையில், "அம்பத்தூர், வானகரம், கோடம்பாக்கம், அண்ணாநகர் நுங்கம்பாக்கம் பகுதிகளில் ஒரு மணி நேரத்திற்கும் குறைவான நேரத்தில் 50 மி.மீ.க்கு மேல் மழை கொட்டியுள்ளது. மீனம்பாக்கம் பகுதியில் இப்போது 360+ மிமீ மழை பெய்துள்ளது. 1967ஆம் ஆண்டில் ஆகஸ்ட் மாதம் 395.3 மிமீ மழை பொய்த நிலையில், இப்போது அதை முறியடிக்கும் வகையில் அங்கே மழை கொட்டி வருகிறது.
அதேநேரம் இன்றைய தினம் மழை மேகங்கள் எல்லாம் கடலுக்குள் சென்றுவிட்டன. இதனால் இன்றைய தினம் பகல் தெளிவாகவே இருக்கும்" என்று பதிவிட்டுள்ளார். மேலும், சென்னையில் கடந்த 24 மணி நேரத்தில் எங்கே எந்தளவுக்கு மழை பெய்துள்ளது என்பது குறித்த தகவல்களையும் அவர் பகிர்ந்துள்ளார். அதில் கோடம்பாக்கம், அண்ணா நகர் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்துள்ளது. நகரிலேயே அதிகபட்சமாக கோடம்பாக்கத்தில் 63.6 மிமீ மழை பெய்துள்ளது.
வானிலை: முன்னதாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் இன்றைய தினம் (ஆகஸ்ட் 29) தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தஞ்சாவூர், அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, சிவகங்கை, திருச்சிராப்பள்ளி, திண்டுக்கல், தேனி மற்றும் மதுரை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகக் கூறப்பட்டிருந்தது.
தலைநகர் சென்னையில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 36-37 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26-27 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என்று அதில் கூறப்பட்டிருந்தது.












Click it and Unblock the Notifications