Diwali Rain: தீபாவளி பண்டிகைக்கு மழை வருமா? பட்டாசு வெடிக்க முடியுமா? தமிழ்நாடு வெதர்மேன் அப்டேட்!
சென்னை: வடகிழக்கு பருவமழை வரும் அக்டோபர் 20ஆம் தேதிக்கு பிறகு தொடங்கும் நிலையில் தீபாவளி பண்டிகைக்கு மழை வருமா வராதா என்பது குறித்து தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜானிடம் கேட்ட போது அவர் சொன்னது என்ன என்பதை பார்க்கலாம்.
ஜூன் முதல் செப்டம்பர் வரை நீடிக்கும் தென் மேற்கு பருவமழை இந்த ஆண்டு விலகிவட்டது. தமிழகத்தைத் தவிர இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் தென் மேற்கு பருவமழை பெய்யும். இதனால் நமது இந்திய நாட்டின் நீர் தேவையும் பருவமழையை நம்பி இருக்கிறது.

தென் மேற்கு பருவமழை கேரளத்தில் சராசரியாக ஜூன் 1ஆம் தேதி தொடங்கும். தென் மேற்கு பருவமழையால் முதலில் கேரளாவின் மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் பெய்யத் தொடங்கும். அதைத் தொடர்ந்து கர்நாடகா, மகாராஷ்டிரா, கோவா, மத்திய பிரதேசம், பஞ்சாப் போன்ற மாநிலங்களில் தீவிரமடைந்து மேகாலயாவிலும் பெய்யும்.
அதிக மழை
இந்த மழை காலத்தில் நாட்டிலேயே அதிக மழை பெறுவது சிரபுஞ்சி. இங்கு ஜூன் முதல் செப்டம்பர் வரை 8900 மி.மீ. மழை பெய்யும். அது போல் கேரளாவில் நெரியாமங்கலத்திலும் 5883 மி.மீ மழை பெய்யும். அது தமிழகத்தில் நீலகிரி மாவட்டம் தோவாலா, சின்னகல்லாறு, பந்தலூர் உள்ளிட்ட பகுதிகளிலம் தென்மேற்கு பருவமழை அதிகம் பெய்யும்.
நடப்பாண்டில் பருவமழை
இந்த நிலையில் இந்தியாவில் நடப்பாண்டில் பருவமழை இயல்பை ஒட்டியே பதிவாகியுள்ளதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. இந்தியாவின் விவசாயத்திற்கும் உள்நாட்டு உற்பத்திக்கும் தென்மேற்கு, வடகிழக்கு பருவமழை முக்கியமாகும்.
மக்கள்தொகை
அதில் நாட்டின் மக்கள்தொகையில் 42 சதவீதம் பேர் பருவமழையை நம்பி உள்ளனர். உத்தரப்பிரதேசத்தில் 478 மி.மீ. மழை, மகாராஷ்டிராவில் 585.2 மி.மீ., கர்நாடகாவில் 587.மி.மீ. மழை பெய்துள்ளது. அதே வேளையில் எந்த மாநிலங்களிலும் மழை பற்றாக்குறை என்ற நிலை இல்லை.
வடகிழக்கு பருவமழை
இந்த நிலையில் தற்போது அக்டோபர், நவம்பர், டிசம்பர் ஆகிய காலகட்டங்கள் தமிழகம், தெற்கு ஆந்திராவுக்கு மழையை கொடுக்கும் வடகிழக்கு பருவமழைக் காலம் ஆகும். இந்த காலகட்டத்தில் பல்வேறு காற்றழுத்தங்கள், புயல்கள் உருவாகும். இந்த நிலையில் வடகிழக்கு பருவமழை காலம் எப்போது என்ற கேள்வி எழுகிறது.
வானிலை மையம்
வானிலை ஆய்வு மையத்தின் கணிப்பின் படி அக்டோபர் மூன்றாவது வாரத்தில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் இது குறித்து தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜானை தொடர்பு கொண்டு கேட்ட போது, அவர், "வடகிழக்கு பருவமழை அக்டோபர் 20ஆம் தேதிக்குள் மேல் தொடங்கும்" என்றார்.
தீபாவளி எப்போது
மேலும் தீபாவளிக்கு மழை பெய்யுமா என கேட்டதற்கு, அவர், "தீபாவளி 20, 21 ஆம் தேதி வருகிறது. வடகிழக்கு பருவமழை அக்டோபர் 20ஆம் தேதிக்கு மேல் தொடங்கும் என்பதால் தீபாவளிக்கு மழை பெய்வதற்கு வாய்ப்புகள் இருக்கிறது, அதே நேரம் அதை உறுதியாகவும் சொல்ல முடியாது (touch and go)" என்று தெரிவித்திருந்தார்
தீபாவளிக்கு மழையா
தீபாவளி பண்டிகைக்கு மழை இல்லாமல் இருந்தால் பட்டாசுகளை வெடிக்கலாம். மழை பெய்யாமல் இருந்தால் பட்டாசு வியாபாரம் சூடு பிடிக்கும். இல்லாவிட்டால் பட்டாசு விற்பனையில் சுணக்கம் ஏற்படும் என்பதால் பட்டாசு வியாபாரிகளும் பட்டாசு பிரியர்களும் கவலை கொள்ள தொடங்கிவிட்டனர்.












Click it and Unblock the Notifications