தெலுங்கானாவில் அதிர்ச்சி- மழை வெள்ளத்தில் தந்தையுடன் அடித்துச் செல்லப்பட்ட இளம் பெண் விஞ்ஞானி!
ஹைதராபாத்: தெலுங்கானா மற்றும் ஆந்திரா மாநிலங்களில் பெருமழை வெளுத்தெடுத்துக் கொண்டிருக்கிறது. இதனால் இரு மாநிலங்களிலும் இயல்பு வாழ்க்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. தெலுங்கானா மாநிலத்தில் தந்தையுடன் விமான நிலையத்துக்கு காரில் சென்ற இளம் பெண் விஞ்ஞானி வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ஆந்திரா, தெலுங்கானாவில் 50 ஆண்டுகளில் இல்லாத பெருமழை கொட்டித் தீர்த்து வருகிறது. இரு மாநிலங்களிலும் அனைத்து ஆறுகளிலும் வெள்ளம் கரைபுரண்டோடி நகரங்களை மூழ்கடித்துக் கொண்டிருக்கிறது. இந்தப் பெருமழை வெள்ளத்தால் மக்கள் வீடுகளில் முடங்கிக் கிடக்கின்றனர். வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் இருந்து பல்லாயிரக்கணக்கான மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டு தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

ஆந்திரா, தெலுங்கானாவில் பல இடங்களில் வெள்ளத்தில் தண்டவாளங்கள் அடித்துச் செல்லப்பட்டன. இதனால் கடந்த 2 நாட்களாக ஆந்திரா, தெலுங்கானா வழியாக செல்லும் அனைத்து மாநில ரயில் சேவைகளும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுவிட்டன. மேலும் தெலுங்கானா, ஆந்திராவில் இந்த வாரம் முழுவதும் பள்ளி, கல்லூரிகள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள் அனைத்துக்கும் விடுமுறை விடப்பட்டுள்ளது.

ஆந்திரா,தெலுங்கானா மழை வெள்ளத்தில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 30 ஐ தாண்டி உள்ளது. இப்பெருமழையில் சிக்கி தெலுங்கானாவைச் சேர்ந்த இளம் பெண் வேளாண் விஞ்ஞானி அஸ்வினி தந்தையுடன் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட துயர சம்பவம் நிகழ்ந்துள்ளது. சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக தந்தையுடன் விமான நிலையத்துக்கு காரில் சென்று கொண்டிருந்த போது அஸ்வினியும் அவரது தந்தையும் பாலம் ஒன்றை கடக்க முயன்றனர். ஆனால் அந்த பாலத்தில் பெருவெள்ளம் பாய்ந்தோடியதால் அஸ்வினியும் அவரது தந்தையும் சென்ற கார் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது. இந்த நிலையில் அஸ்வினியின் உடல் மட்டும் கண்டெடுக்கப்பட்டுள்ளது. அஸ்வினியின் தந்தையின் உடலை தேடும் மீட்பு நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications