யோசிக்காமல் 'தக் லைஃப்' பதில் கொடுத்த முதலமைச்சர் ஸ்டாலின்! பிரஸ்மீட்டில் ஒரே சிரிப்பலை!
திருச்சி: தமிழக அமைச்சரவையில் மாற்றம் வருமா? என்ற கேள்விக்கு மத்திய அமைச்சரவையில் தான் மாற்றம் நடக்கக் கூடும் என செய்திகள் வருவதாக தக் லைஃப் பதில் கொடுத்தார் முதலமைச்சர் ஸ்டாலின்.
காவிரி டெல்டா மாவட்டங்களில் ஆய்வு செய்த பின்னர் திருச்சியில் முதல்வர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விகளும், முதல்வர் ஸ்டாலின் அளித்த பதிலும் வருமாறு;

கேள்வி: கர்நாடகாவில் புதிதாக அமைந்த அரசு, மேகதாது அணை கட்டியே தீருவோம் என்ற முனைப்பில் இருக்கிறார்கள், இது சம்பந்தமாக நீங்கள் அந்த முதலமைச்சருடன் பேசி சுமுக தீர்வு காண்பதற்கு முயற்சி செய்கிறீர்களா?
முதலமைச்சர் பதில்: புதிதாக வந்திருக்கிற காங்கிரஸ் தலைமையில் இருக்கின்ற ஆட்சி மட்டுமல்ல, ஏற்கனவே இருந்த ஆட்சிகளும் இதையே தான் தொடர்ந்து திரும்பத் திரும்ப மேகதாது அணையை கட்டுவோம் என்று சொல்லிக் கொண்டிருந்தார்கள். அப்போதும் நாம் எதிர்ப்பு தெரிவித்து வந்தோம். அதே நிலையில் தான் எங்கள் ஆட்சி இன்றைக்கு இருக்கிறது. அதனால் எந்த காரணத்தைக் கொண்டும் கலைஞர் எப்படி அதில் உறுதியாக இருந்தாரோ, அதே உறுதியோடு இந்த ஆட்சி நிச்சயமாக இருக்கும், அதில் எந்தவிதமான சந்தேகமும் பட வேண்டாம்.
கேள்வி: காப்பீடு திட்டத்தை அரசே நடத்த வேண்டும் என்று உழவர்கள் தொடர்ந்து வலியுறுத்துகிறார்கள், ஏனென்றால் காப்பீடு திட்டத்தில் முறையாக கிடைப்பது இல்லை, நிறைய பிரச்சினைகள் இருப்பதாக சொல்கிறார்களே?
முதலமைச்சர் பதில்: ஆய்வில் இருக்கிறது. ஆய்வு செய்து கொண்டிருக்கிறோம்.
கேள்வி: நூறு நாள் வேலை திட்ட பணியாளர்களை சந்தித்தீர்கள், அவர்கள் என்ன கோரிக்கை வைத்தார்கள்? வேளாண் பணிகளை நூறு நாள் திட்டத்தில் கொண்டுவர வேண்டும் என்று நீண்ட நாட்களாக கோரிக்கைகள் இருக்கிறது...
முதலமைச்சர் பதில்: அந்த மாதிரி கோரிக்கை எதுவும் இன்று அவர்கள் வைக்கவில்லை. அவர்கள் கொடுக்கும் ஊதியத்தை முறையாக கொடுக்க வேண்டும் என்றுதான் கோரிக்கை வைத்தார்கள். அது முறையாக கொடுக்கப்பட்டு வருகிறது. எங்கெல்லாம் புகார் இருக்கிறதோ, அது குறித்து விசாரிக்கிறோம் என்று சொல்லியிருக்கிறோம்.
கேள்வி: பத்திரிகையாளர் நல வாரியத் திட்டத்தின்கீழ் மதுரையிலும் திருச்சியிலும் விலை கொடுத்து வாங்கிய பட்டா நிலம் இப்போது இல்லையென்று தகவல் வந்திருக்கிறது. அது சம்பந்தமாக என்ன செய்யப் போகிறீர்கள்?
முதலமைச்சர் பதில்: அதை மறுபரிசீலனை செய்து கொடுப்பதற்கான முயற்சி நடந்து கொண்டிருக்கிறது.
கேள்வி: கவர்னர் இன்னும் பல மசோதாக்களுக்கு அனுமதி கொடுக்காமலே இருக்கிறார், இது சம்பந்தமாக தெலங்கானா அரசு கூட கவர்னரை எதிர்த்து உச்சநீதிமன்றம் சென்றார்கள். அதுபோன்று ஏதாவது ...
முதலமைச்சர் பதில்: நாங்களும் நீதிமன்றத்தை நாடலாமா என்று சட்ட வல்லுநர்களோடு கலந்து பேசிக் கொண்டிருக்கிறோம்.
கேள்வி: கவர்னரை மாற்றுவதற்கு ஏதாவது கோரிக்கை வைப்பீர்களா?
முதலமைச்சர் பதில்: நாங்கள் நினைப்பது எல்லாம் நடந்தால் இந்த பிரச்சினையே இல்லை.
கேள்வி: கலைஞருடைய நூற்றாண்டு விழாவை முன்னிட்டு சென்னை பல்கலைக்கழகத்திற்கு மு.கருணாநிதி பெயர் சூட்டப்படுமா?
முதலமைச்சர் பதில்: நிச்சயமாக அது பரிசீலிக்கப்படும். இருக்கிற பல்கலைக்கழகத்திற்கு வைக்கலாமா அல்லது புதிதாக உருவாக்கப்படக்கூடிய பல்கலைக்கழகத்திற்கு வைக்கலாமா என்பதை நாங்கள் பரிசீலித்து முடிவு செய்வோம்.
கேள்வி: தமிழ்நாட்டில் முக்கியமான பல்கலைக்கழகங்களில்
2 வருடங்களாக பட்டம் தராமல் இருக்கிறார்கள், அதற்கு முக்கியக் காரணம் கவர்னர் தான் என்ற ஒரு குற்றச்சாட்டு இருக்கிறதே?
முதலமைச்சர் பதில்: ஏற்கனவே உயர்கல்வித் துறை அமைச்சர் அவர்கள் தெளிவாக சொல்லியிருக்கிறார், திரும்பும் நான் அழுத்தமாக சொல்கிறேன். உண்மைதான் அது.
கேள்வி: விரைவாக அவர்கள் பட்டம் பெற நமது அரசு சார்பில் ஏதாவது முயற்சி செய்யப்படுமா ?
முதலமைச்சர் பதில்: அதற்கு தான் பல்கலைக்கழகத்தில் வேந்தர்களாக முதலமைச்சரே இருக்க வேண்டும் என்று நாங்கள் சட்டமன்றத்தில் தீர்மானம் போட்டிருக்கிறோம்.
கேள்வி: டாஸ்மாக் கடைகளை குறைக்கும் எண்ணம் ஏதும் இருக்கிறதா?
முதலமைச்சர் பதில்: ஏற்கனவே சொல்லியிருக்கிறோமே. இந்த ஆண்டு 500 கடைகளை குறைப்பதாக அறிவித்திருக்கிறோம்.
கேள்வி: அமைச்சரவையில் மாற்றம் இருக்க வாய்ப்பிருக்கிறதா?
முதலமைச்சர் பதில்: இப்போது வந்த செய்தியைப் பார்த்தீர்களென்றால், ஒன்றியத்தில் தான் அமைச்சரவை மாற்றம் வரும் என்று செய்தி சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.
கேள்வி: நீர்நிலைகளை நன்றாக தூர்வாரியிருக்கிறீர்கள், சில இடங்களில் கழிவு கலக்கிறது, அவற்றை சுத்தம் செய்வதற்கான வாய்ப்புகள் இருக்கிறது?
முதலமைச்சர் பதில்: அதையும் கூடுமானவரை முயற்சி செய்து தடுத்துக் கொண்டிருக்கிறோம். ஏதேனும் புகார் இருந்தால் சொல்லுங்கள், அதையும் கவனிக்கிறோம்.
கேள்வி: வணிக (Commercial) மின்கட்டணம் உயர்வினால் வணிகம் பாதிக்கப்படும் என்று ஒரு கருத்து இருக்கிறது, அதைக் குறைப்பதற்கு ...
முதலமைச்சர் பதில்: அதுவும் ஒரே ஒரு பத்திரிகையில் தான் அதை பெரிதுபடுத்திக் கொண்டிருக்கிறார்கள். மற்றவர்கள் எல்லோரும் அதைப் புரிந்து கொண்டார்கள். திட்டமிட்டு ஒரு பொய்ப் பிரச்சாரம். வீட்டு இணைப்பைப் பொறுத்தவரை, அவர்களுக்கு மின்கட்டணத்தை எந்தக் காரணம் கொண்டும் உயர்த்த மாட்டோம் என்று உறுதியாக சொல்லிவிட்டோம். ஆனாலும் ஏற்கனவே அதே அறிவிக்கை தான் வந்திருக்கிறது. உங்களுக்குத் தெரியும், பார்த்திருப்பீர்கள். புள்ளிவிவரத்துடன் உங்களுக்கு சொல்ல விரும்புகிறேன்.
வீட்டு இணைப்பிற்கு எந்தவிதமான கட்டண உயர்வும் கிடையாது, அனைத்து இலவச இணைப்புகளும் தொடரும் என்று தெளிவாக சொல்லியிருக்கிறோம். அதேபோல வேளாண் இணைப்புகள், குடிசை இணைப்புகள் வீடுகளுக்கு 100 யூனிட் இலவச மின்சாரம் என்பதும் தொடரும். கைத்தறி மற்றும் விசைத்தறிகளுக்கு அளிக்கப்படக்கூடிய இலவச மின்சார சலுகைகளும் அப்படியே தொடரப் போகிறது. அதில் எந்தவித மாற்றமும் கிடையாது.
ஒன்றிய அரசின் விதிமுறைப்படி பார்த்தீர்கள் என்றால், 4.7 விழுக்காடு கட்டணம் அதிகரிக்க வேண்டும். ஆனால், 2.18 விழுக்காடாக அதனை குறைத்து அந்தத் தொகையையும் மானியமாக தமிழ்நாடு அரசு ஏற்றுக்கொண்டு மின்வாரியத்திற்கு தருவதற்காக அரசு உத்தரவிட்டிருக்கிறது. எனவே வீட்டு இணைப்புகளை பொறுத்தவரைக்கும் எந்தவிதமான கட்டண உயர்வும் நிச்சயமாக இருக்காது.
வணிகம் மற்றும் தொழில் நிறுவனங்களுக்கு மட்டும் அதுவும் 13 பைசாவிலிருந்து 21 பைசா வரை உயர்வு இருக்கும் என்று தெளிவாக சொல்லியிருக்கிறோம், அதில் எந்தவித மாற்றமும் கிடையாது. மற்ற மாநிலங்களில் பார்த்தீர்கள் என்றால், இதைவிட அதிகம். அதிமுக ஆட்சி இருந்தபோது பார்த்தீர்கள் என்றால், அதை செங்குத்தாக மின் கட்டணத்தை உயர்த்தினார்கள். மின்வாரியத்தை கடனில் மூழ்கடித்துவிட்டு போய்விட்டார்கள். அம்மையார் ஜெயலலிதா அவர்கள் மருத்துவமனையில் இருந்தபோது, உதய் (UDAY) திட்டத்தில் கையெழுத்திட்டது அதிமுக ஆட்சி. அதனால்தான், இந்த கோளாறு எல்லாம் நடந்து கொண்டிருக்கிறது. இது தான் உண்மை.
கேள்வி : அமுல் நிறுவனம் தமிழ்நாட்டில் வருவதை தடுப்பதாக சொன்னீர்கள். அது பற்றி தங்கள் கருத்து.. .
முதலமைச்சரின் பதில் : அதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம்.
கேள்வி : ஆவின் பாலில் கலப்படம் செய்கிறார்கள் என்று கூறுகிறார்களே?
முதலமைச்சரின் பதில் : அது தவறான செய்தி. அன்றைக்கே அந்த துறையினுடைய அமைச்சர் மறுத்துவிட்டார். திட்டமிட்டு பொய் பிரச்சாரம் செய்கிறார்கள். ஆதாரத்தை போலியாக தயார் செய்து போடுகிறார்களே தவிர, அது உண்மை இல்லை.
கேள்வி : நாடாளுமன்ற தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கிறது. உங்களுடைய ஆயத்த பணிகளை தொடங்கிவிட்டீர்களா? புதிதாக ஏதாவது கூட்டணிக் கட்சிகள் .... நீங்கள் அதில் கலந்து கொள்ளப் போகிறீர்களா?
முதலமைச்சரின் பதில் : நான் தலைவருடைய நூற்றாண்டு விழாவில் தெளிவாக பேசியிருந்தேன். வருகிற 23-ஆம் தேதி பீகார் மாநிலத்தினுடைய முதலமைச்சர் திரு. நிதீஷ்குமார் அவர்கள் ஒரு கூட்டத்தை கூட்டியிருக்கிறார், அதில் முடிவெடுக்கப்படும். நான் அதில் கலந்து கொள்ளப்போகிறேன்.
கேள்வி : மூன்று மருத்துவக் கல்லூரிகளின் அங்கீகாரம் இரத்து செய்தது ஒன்றிய அரசின் தலையீட்டினால் தான் ஆனது என்று அது பற்றி....
முதலமைச்சரின் பதில் : அதற்குரிய விளக்கத்தை சொல்வதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகளை தில்லிக்கு அனுப்பி விளக்கம் சொல்லி, இப்போது மறுபடியும் மூன்று மருத்துவக் கல்லூரிகளுக்கு அனுமதி கிடைத்திருக்கிறது.












Click it and Unblock the Notifications