For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

வறுமை ஒழிந்த தமிழகத்தை உருவாக்க மார்ட்டின்லூதர் கிங்கைப் போல் கனவு காண்கிறேன்: முதல்வர் ஜெயலலிதா

By Mathi
Google Oneindia Tamil News

CM releases Vision Tamil Nadu 2023
சென்னை: வறுமை இல்லாத, குடிசைகளே இல்லாத, வேலையில்லா திண்டாட்டம் இல்லாத தமிழகத்தை உருவாக்கும்வரை ஓயப்போவது இல்லை என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா உறுதியேற்றுள்ளார்..

அடுத்த 10 ஆண்டுகளில் தமிழ்நாட்டின் எதிர்கால திட்டங்களை உள்ளடக்கி தமிழ்நாடு தொலைநோக்கு திட்டம்-2023' என்ற புதிய செயல்திட்டம் தயாரிக்கப்பட்டு இருக்கிறது. ஆசிய வளர்ச்சி வங்கி உதவியுடன் உருவாக்கப்பட்டுள்ள இந்த தொலைநோக்கு திட்டத்தின் வெளியீட்டு விழா சென்னை நுங்கம்பாக்கம் தாஜ் கோரமண்டல் ஓட்டலில் நடைபெற்றது.

இதில் முதல்வர் ஜெயலலிதா கலந்து கொண்டு தமிழ்நாடு தொலைநோக்கு திட்டம்-2023' செயல்திட்டத்தை வெளியிட்டார். முதல் பிரதியை நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பெற்றுக்கொண்டார்.

தமிழ்நாடு தொலைநோக்கு திட்டம்-2023

இந்த விழாவில் முதலமைச்சர் ஜெயலலிதா பேசியதாவது:

தமிழ்நாடு தொலைநோக்கு திட்டம்-2023 வெளியிடப்படும் இந்த தினத்தை தமிழ்நாட்டின் பொருளாதார வரலாற்றில் மிக முக்கிய நிகழ்ச்சியாக கருதுகிறேன். கடந்த 2011-ம் ஆண்டு எனது தலைமையிலான அரசு பொறுப்பேற்றபோது, இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் தமிழகம் நம்பர் ஒன்'' மாநிலமாக திகழ வேண்டும் என்ற லட்சியத்தை உருவாக்கி இருந்தேன்.

எப்படி அமெரிக்காவைப் பற்றி மார்ட்டின் லூதர் கிங் மிகப்பெரிய கனவு கண்டாரோ, அதேபோல் நானும் தமிழகத்தைப் பற்றி மிகப்பெரிய கனவு காண்கிறேன். அந்த கனவில், வேலையில்லா திண்டாட்டம் இல்லாத ஒரு தமிழகத்தை, வறுமை முற்றிலும் ஒழிக்கப்பட்ட ஒரு தமிழகத்தை கல்வி, சுகாதாரம், குடிநீர், சுகாதாரம் உள்பட அனைத்து அடிப்படை வசதிகளையும் அனைத்து மக்களும் பெற்றுள்ள ஒரு தமிழகத்தை, எல்லாவற்றுக்கும் மேலாக, அனைத்து மக்களும் செல்வச்செழிப்பாக, பாதுகாப்பாக, அமைதியுடன் வாழ்கின்ற ஒரு தமிழகத்தை பார்க்கிறேன்.

நம்பர் ஒன் மாநிலம்

இந்த 21-ம் நூற்றாண்டில் பொருளாதார வளர்ச்சியிலும், சமூக வளர்ச்சியிலும் தமிழகம் நம்பர் ஒன்' மாநிலமாக மாற வேண்டும், அறிவுசார் பொருளாதார மையமாக திகழ வேண்டும் என்றும் நான் கனவு காண்கிறேன். அந்த வகையில், தற்போது வெளியிடப்பட்டு இருக்கும் தமிழ்நாடு தொலைநோக்கு திட்டம்-2023 செயல்திட்ட அறிக்கை, எனது கனவை தெளிவாக்குவதுடன் அந்த கனவை நிறைவேற்றுவதற்கான குறிப்பிட்ட செயல்திட்டங்களையும் எடுத்துச்சொல்கிறது.

சிறந்த தலைவர்கள் ஒரு தொலைநோக்கு திட்டத்தை உருவாக்குகிறார்கள். அதை தெளிவுபடுத்துகின்றனர். அந்த கனவை நிறைவேற்ற பாடுபடுகிறார்கள். தொலைநோக்கு திட்டம் ஒரு செயலை செய்து முடிக்க துணை செய்கிறது. ஒரு கனவை எவ்வாறு நனவாக்குகிறார்கள் என்பதில்தான் தலைமைப் பண்பு அடங்கி உள்ளது. எங்கே தொலைநோக்கு இல்லையோ, அங்கே நிச்சயம் நம்பிக்கை இருக்காது.

தமிழக வரலாற்றில் முதல் முறை...

தமிழகம் தொழில்துறையில் முதன்மை மாநிலமாக ஆக வேண்டும். மிக வேகமாக நடந்து வரும் பொருளாதார வளர்ச்சியின் பயன்பாடுகள் ஒட்டு மொத்தமாக அனைத்து மக்களையும் சென்றடைய வேண்டும் என்பதுதான் எனது தொலைநோக்கு திட்டம். அந்த வகையில், ஒட்டுமொத்த வளர்ச்சியை கருத்தில் கொண்டு தமிழ்நாட்டில் முதல்முறையாக தொலைநோக்கு திட்டம் தயாரிக்கப்பட்டு இருக்கிறது. இந்த தொலைநோக்கு செயல்திட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ள இலக்குகள் மூலம் பலன்கள் ஏற்பட்டு அவற்றால் சாதாரண மக்களின் வாழ்விலும் வளர்ச்சி ஏற்படும். அடுத்த 10 ஆண்டுகளில் அடைய வேண்டிய வளர்ச்சிகளை கருத்தில் கொண்டு இலக்குகள் நிர்ணயிக்கப்பட்டு உள்ளன.

நவீன சமுதாயம்

இந்த தொலைநோக்கு திட்டத்தின் தலையாய நோக்கம் அடுத்த 10 ஆண்டுகளில் அதாவது 2023-ம் ஆண்டு வறுமை இல்லாத, வளர்ச்சிகள் மிகுந்த முதன்மை மாநிலமாக தமிழகம் இருக்க வேண்டும், ஒரு நவீன சமுதாயத்தில் மக்களுக்கு என்னென்ன அடிப்படை வசதிகள் கிடைக்குமோ, அவற்றை எல்லாம் தமிழக மக்களும் அனுபவிக்க வேண்டும், உலகில் மற்ற இடங்களில் உள்ள மக்கள் எப்படி அமைதியாக வாழ்கிறார்களோ அதைப்போன்று தமிழக மக்களும் எல்லா வளங்களும் பெற்று அமைதியான வாழ்க்கை நடத்த வேண்டும். உலகின் வளர்ந்த பிராந்தியங்களுக்கு நிகராக தமிழகத்தை உயர்ந்த நிலைக்கு கொண்டு செல்ல வேண்டும் என்பதுதான்.

பிரெஞ்ச் கவிஞர் விக்டர் ஹூகோ

உலக அளவில் பொருளாதாரத்தில் மிகப்பெரிய அளவில் மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டு இருக்கின்றன. வளர்ந்த நாடுகள் பொருளாதார சீர்குலைவு காரணமாக நலிவடைந்து வருகின்றன. வளர்ந்து வரும் சந்தை பொருளாதாரம் வலுவடைந்து வருகிறது. பிராந்திய அளவில் இந்திய நாடு முக்கியத்துவம் பெற்று வருகிறது. ஒரு திட்டம் உதிக்க வேண்டிய நேரம் வந்துவிட்டால் அதை உலகில் எந்த சக்தியாலும் தடுக்க முடியாது'' என்று பிரெஞ்சு கவிஞர் விக்டர் ஹூகோ சொல்லி இருக்கிறார். அந்த வகையில், தமிழ்நாடு மிகப்பெரிய பொருளாதார சக்தியாக உருவெடுக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது என்று சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்.

தமிழ்நாட்டின் வளர்ச்சி வாய்ப்புகளைப் பார்க்கும்போது, அடுத்த 11 ஆண்டுகளில் மாநிலத்தின் ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சி வீதம் 11 சதவீதமாகவும், நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சி வீதத்தை விடவும் வளர்ச்சி வீதம் 20 சதவீதம் அதிகரிக்கக்கூடும். அதேபோல், மக்கள்தொகை 15 சதவீதம் அதிகரித்து தனிநபர் வருமானம் 6 மடங்கு அதிகரிக்கும்.

அதிகரிக்கும் தனிநபர் வருமானம்

கடந்த 1980-க்கும் 2000-க்கும் இடைப்பட்ட 20 ஆண்டு காலத்தில் சீனா, மலேசியா, தாய்லாந்து உள்ளிட்ட பல ஆசிய நாடுகள் 7 சதவீதம் முதல் 10 சதவீதம் வரை என்ற அளவில்தான் வளர்ச்சி அடைந்துள்ளன. ஆசிய நாடுகள் மற்றும் இந்தியாவில் உள்ள ஒரு சில மாநிலங்கள் தொடர்ந்து வளர்ந்து ஆண்டுக்கு 11 சதவீதத்திற்கு மேல் வளர்ச்சியை எட்டியிருப்பதை எல்லாம் ஆராய்ந்து பார்க்கும்போது அடுத்த 11 ஆண்டுகளில் தமிழகத்தின் வளர்ச்சி வீதம் 11 சதவீதமாக உயரும் என்பது எளிதாக அடையக்கூடிய இலக்குதான்.

கடந்த 2005-2006-ம் ஆண்டு நமது வளர்ச்சி வீதம் 13.95 சதவீதமாக இருந்தது. 2023-ம் ஆண்டில் தமிழகத்தில் தனிநபர் வருமானம் இப்போதைய வருமானத்தை விட 6 மடங்கு அதிகரித்து 41/2 லட்சமாக உயரும் என்று நான் நம்புகிறேன். தமிழ்நாடு தொலைநோக்கு திட்டம்-2023-ல் பொருளாதார வளர்ச்சியை அதிகரிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டாலும், அதேநேரத்தில் மாநிலத்தில் இருக்கும் வருவாய் வேறுபாடுகளை குறைப்பதற்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டு உள்ளது.

2023-ல் வறுமை இருக்காது

குறைந்த வருவாய் பிரிவினர் உயர்வது உள்பட அனைத்து தரப்பு மக்களையும் உள்ளடக்கிய வளர்ச்சிக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு இருக்கிறது. அதோடு வறுமை இல்லாத தமிழகத்தை உருவாக்க இந்த தொலைநோக்கு திட்டத்தில் உறுதிசெய்யப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் 2023-ம் ஆண்டு யாரும் பின்தங்கி இருக்கக்கூடிய நிலை இருக்காது.

2023-ம் ஆண்டிற்குள் அனைத்து மக்களுக்கும் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்க வேண்டும், அனைவருக்கும் 100 சுகாதார வசதி செய்துகொடுக்கப்பட வேண்டும் என்பது எனது தொலைநோக்கு பார்வை. திறந்தவெளியில் மலம்கழிக்கும் நிலை முற்றிலுமாக நீக்கப்படும். ஏழை எளியவர்களுக்கு 25 லட்சம் வீடுகள் கட்டிக்கொடுத்து குடிசையே இல்லாத தமிழகத்தை உருவாக்குவதும், அனைவருக்கும் இடைநிலைக்கல்வி, தொழிற்கல்வி உள்பட உயர்கல்வியில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கையை 50 சதவீதத்திற்கு மேல் உயர்த்துவதும் எனது கனவு.

தரமான, மாநிலத்தின் அனைத்து பகுதிகளையும் குறுக்காகவும், நெடுக்காகவும் இணைக்கக்கூடிய வகையில் பாதுகாப்பான பலவழி நெடுஞ்சாலைகளும், ஒவ்வொரு மாவட்டத்திலும் உயர்தரத்தில் சாலைகளும் அமைக்கப்படும்.

அனைத்து தரப்பு மக்களுக்கும் சமமான வாய்ப்புகளும், வசதிகளும் கிடைப்பதை உறுதி செய்யும் வகையில் வெளிப்படையான, பொறுப்பான நிர்வாகத்தை உருவாக்க வேண்டும் என்பதை எனது தலைமையிலான அரசின் நோக்கம். சேவை துறையில் தனியாரின் பங்கினை பெரிதும் வரவேற்கிறோம். தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியின் பயன்பாடுகளை அரசு முழுவதுமாக பயன்படுத்திக்கொள்ளும்.

பொருளாதார வளர்ச்சி, சமூக வளர்ச்சி, அனைத்து தரப்பினரையும் உள்ளடக்கிய உண்மையான வளர்ச்சி, கலாசார பன்முகத்தன்மை, சுற்றுச்சூழல் பாதுகாப்பு என அனைத்து வளர்ச்சிகளுடன் தமிழகத்தை முன்னேற்றப்பாதையில் வழிநடத்துவதற்கு தொலைநோக்கு திட்டம் பெரிதும் உதவும். அனைத்து தரப்பினரின் ஒத்துழைப்புடன் மேற்கூறப்பட்ட அனைத்து இலக்குகளையும் அடைய முடியும் என்று நான் உறுதியாக நம்புகிறேன்.

ஓயமாட்டேன்

எனது கனவுகள் நனவாகும் வரை, தமிழ்நாடு தொலைநோக்கு திட்டத்தில் கூறப்பட்டுள்ள திட்டங்கள் நிறைவேறும் வரை நான் ஓய்வுபெற மாட்டேன், இடையில் நிறுத்திவிட மாட்டேன் என்பதை இந்த நேரத்தில் தமிழக மக்களுக்கு உறுதியாக சொல்லிக்கொள்கிறேன். நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து வலிமையான, சக்திவாய்ந்த, வளர்ச்சியான, ஆரோக்கியமான தமிழகத்தை உருவாக்குவோம். அத்தகைய புதிய தமிழகத்தில் நமது மக்கள் மகிழ்ச்சியான, நிம்மதியான வாழ்க்கை வாழ்வார்கள் என்றர் அவர்.

விழாவில், முதல்-அமைச்சர் ஜெயலலிதா முன்னிலையில் 2 ஒப்பந்தங்கள் கையெழுத்தானது. திருவள்ளூர் மாவட்டம், காட்டுப்பள்ளியில் இயற்கை எரிவாயு இறக்குமதி முனையம் அமைப்பது தொடர்பான ஒப்பந்தத்தில் தமிழக அரசின் டிட்கோ' நிறுவனம் சார்பில் தொழில்துறை முதன்மைச் செயலாளர் என்.சுந்தரதேவனும், இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் சார்பில் அதன் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் ஆர்.எஸ்.பூட்டோலாவும் கையெழுத்திட்டனர்.

இதேபோல், கடலூர், நாகப்பட்டினம் மாவட்டங்களில் கெமிக்கல் மற்றும் பெட்ரோகெமிக்கல்ஸ் முதலீட்டு மண்டலம்' அமைப்பது தொடர்பான ஒப்பந்தத்தில் தமிழக அரசு சார்பில் சுந்தரதேவனும், என்ஜினீயர்ஸ் இந்தியா நிறுவனம் சார்பில் அதன் தலைவர் ஏ.கே.பூர்வகாவும் கையெழுத்திட்டு ஆவணங்களைப் பரிமாறிக்கொண்டனர்.

English summary
Buoyed by the Sankarankoil by-election victory, Tamil Nadu CM J Jayalalithaa on Thursday unveiled her Vision Tamil Nadu 2023 for the State, to make it numero uno and one among the top three investment destinations in Asia, with a target of 11 per cent growth in Gross State Domestic Product in11 years.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X